சென்னை, செப்.14 தமிழ்நாட்டில் வரும் 16-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 2 நாட்களில் தெற்கு சத்தீஸ்கரை கடந்து செல்லக்கூடும்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில், வரும் 16 முதல் 19-ம் தேதி வரை சில இடங்ளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டில் வரும் 16-ம் தேதி வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும், 17-ம் தேதி வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 18-ம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும், வரும் 19-ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழைபெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.