சென்னை, செப். 14- குரூப்-2 தேர்வுக்கான 3ஆவது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, வரும் 23ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, டிஎன்பி எஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த 2024ஆம் ஆண்டு நடத்தப்பட்டஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான 3ஆவது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 23ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதற்கு அழைக்கப்பட்டுள்ள தேர்வர்களின் பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
அழைப்பாணையை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும். அழைப்பாணை தனியே அஞ்சல் மூலம் அனுப்பப்பட மாட்டாது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்டு தெரிவுசெய்யப்படுவர் என்பதற்கு உறுதி அளிக்க இயலாது. குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் பங்கேற்க தவறினால், மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.
