தமிழர் தலைவர் ஆசிரியரின் எண்ணமும் அதை நிறைவேற்றிய தருணமும்!
தற்செயலான உரையா டல்கள் சில பெரும் வர லாற்று நிகழ்வுகளுக்கு வழிவகுக்கின்றன. அதற்கு ஓர் எடுத்துக் காட்டு அண்மையில் சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்து முடிந்த ‘‘நூற்றாண்டு கண்ட தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம்’’ குறித்த இரு நாள் தேசியக் கருத்தரங்கம்.
மூன்று மாதங்களுக்கு முன்பு நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் கூட்டமொன்று நடைபெற்று முடிந்தவுடன் எல்லோரிடமும் பேசிவிட்டு வாகனம் எடுக்க வரும்போது கவனித்தேன், ஆசிரியர் அய்யா இன்னும் புறப்படவில்லை என்று. அவரது வாகனம் தயார் நிலையில். அருகில் ஓட்டுநர் தவிர வேறு யாருமில்லை.
ஏன் இவ்வளவு நேரமாகியும் கிளம்பாமல் இருக்கிறார் என்று ஆவல்மிகவே, வாகனத்தை நோக்கிச் சென்றேன் – வினவலாம் என்று.
அப்போது உள்ளிருந்து வெளியே வந்த ஆசிரியர், என்னைப் பார்த்தவுடன் புன்முறுவலோடு “இன்றைய நிகழ்ச்சி எப்படி இருந்தது” என்று கேட்டார். “கருத்துச் செறிவோடு கூடுதலான துள்ளல்களும் எள்ளல்களும் கலந்து இருந்தது அய்யா” என்றேன். உரையாடலின் தொடர்ச்சியாக,
“சுயமரியாதை இயக்கம் – தந்தை பெரியார் குறித்து ஆங்கிலத்தில் ஒரு கருத்தரங்கம், அதுவும் முழுமை யாக ஆங்கிலத்தில் மட்டுமே நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இளைய தலைமுறையினர் மட்டுமின்றி நாட்டின் பிற பகுதிகளில் இருப்பவர்களும் நம்முடைய இயக்கத்தையும் அய்யாவையும் குறித்து விளங்கிக் கொள்ள வாய்ப்பாக இருக்கும் என அறிவுறுத்தினார். எனக்கு அது அறிவுரையாகத் தெரியவில்லை அன்புக் கட்டளையாகப்பட்டது.

அய்யா கிளம்பிச் சென்றவுடன் இளவல் பிரின்சு அவர்களிடம் இதைக் குறித்துப் பேசினேன். “அம்மா மணியம்மையார் அரங்கத்தில் ஒரு சனிக்கிழமையோ அல்லது ஞாயிற்றுக்கிழமையோ கருத்தரங்கம் நடத்தி விடலாம், ஆங்கிலத்தில் பேசக் கூடியவர்களை அழைத்து! எப்படி இருக்கும்?” என்று கேட்டேன்.
“அது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. எளிதாகச் செய்துவிடலாம். ஆனால் ஆசிரியர் அய்யா உங்களிடம் எதிர்பார்ப்பது அதுவல்ல. அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் பெரியதாகச் செய்ய வேண்டும் என்றார். முக்கியமாகத் திடலில் செய்யக்கூடாது” என்றார், பிரின்சு.
“சரி ஒரு வாரம் கொடுங்கள். இதைக் குறித்து யோசித்து ஒரு திட்டத்தோடு வருகிறேன்” என்று கிளம்பினேன்.
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யப் புரவலர்
மீண்டும் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யப் புரவலர் தமிழர் தலைவர் அவர்களுடன் சந்திப்பு. இந்தச் சந்திப்பில் பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் அன்புராஜ் அவர்களும் உடன் இருந்தார்கள். ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தோடு சேர்ந்து செய்யலாம் என்று மூன்று பெயர்களைக் குறிப்பிட்டேன். அன்புராஜ் அண்ணன் சென்னை பல்கலைக்கழகமே சிறந்த இடமாக இருக்கும் என்றார்.
உடனே சிண்டிகேட் மற்றும் துணைவேந்தர் குழுவில் உறுப்பினராக இருக்கும் பேராசிரியர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களைத் தொடர்பு கொண்டோம். அவர் ஏற்கனவே பல்கலைக்கழகத்தில் இது போன்ற ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும்; அறிஞர் பெருமக்களிடம் கட்டுரைகள் பெற்று புத்தகமாகக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் ‘இணைந்து நடத்தலமா?’, என்று பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் அன்பு அண்ணன் கேட்டவுடன் உடனே ‘சரி’ என்றார். அடுத்து அய்ந்து நிமிடங்களில் ஆசிரியரின் தேதிகள் ஆராயப்பட்டு செப்டம்பர் 11 மற்றும் 12 எனத் தீர்மானிக்கப்பட்டது.
பொருளாளர் குமரேசன் மற்றும் பிரின்சு அவர்களை வைத்துக்கொண்டு பல்கலைக் கழகத்தோடு இணைந்து செய்யுங்கள் என ஆலோசனை கூறப்பட்டது. பல்வேறு குழு கூட்டங்களில் கலந்து கொண்டு தக்க ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக நடைபெறுவதற்குப் பக்க பலமாக விளங்கியவர் திராவிடர் கழகம் மற்றும் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் பொருளாளர் வீ.குமரேசன் அண்ணா!
அன்று தொடங்கிய திட்டமிடலுக்கும் செயல் வடிவம் கொடுத்ததற்குமான பயணம் சீரானதாகச் சுகமானதாக இருந்தது என்று சொல்லிவிட முடியாது. பலவிதமான மேடு பள்ளங்களைக்கடந்துதான் வர வேண்டி இருந்தது.
பல்வேறு ஆலோசனை களுக்குப் பிறகு சென்னை பல்கலைக்கழகத்தின் ‘அண்ணா பொது விவகார ஆய்வு மய்யத்துடன் இணைந்து நடத்துவது’ பொருத்தமானது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அந்தத் துறையினுடைய தலைவி பேராசிரியர் கலைச்செல்வி அவர்கள் திராவிட இயக்கத் தூண்களில் மிக முக்கியமானவரும், மறைந்த தி.மு.க.வின் பொதுச் செயலாளருமான பேராசிரியர் அன்பழகன் அவர்களின் பெயர்த்தி.
அடுத்ததாக இந்தியாவின் பிற பகுதியிலிருந்து பேச்சா ளர்கள் கருத்தாளர்களை வரவழைக்க வேண்டும் என்று எண்ணிய போது அதற்குரிய வழிகாட்டலை பெற நாடாளுமன்ற உறுப்பினர் திரு
ஆ.ராசா அவர்களைச் சந்திக்கக் குழு முடிவு செய்து வழக்கறிஞர் தம்பி ரமேஷ் அவர்கள் ஏற்பாட்டினால் குழு வெற்றிகரமாக ராசா அவர்களைச் சந்தித்து திட்டத்திற்கு உயிர்வளி அளித்தது.
கருத்தரங்கை வெற்றிகர மாக நடத்துவதற்குப் பல்வேறு குழுக்கள் பேராசிரியர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களால் நிறுவப்பட்டன. பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறை சார்ந்தவர்கள் பேராசிரியர்கள் ஸ்ரீனிவாசன் ஆனந்த், சங்கர நாராயணன், ஜெயப்பிரியன், சுப்பாலா, ஜெய் சக்திவேல், பிரபு, இளங்கோ, மாநிலக் கல்லூரியை சார்ந்த முத்துக்குமார் எனப் பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்போடு மிகப்பெரிய அளவில் திட்டமிடப்பட்டது. பல்வேறு ஆராய்ச்சி மாணவர்கள் குறிப்பாக எழிலரசி, நிசி மற்றும் ருக்சனா, பிலால், இந்துமதி, பாராளுமன்ற உறுப்பினர் ராசா அவர்களின் உதவியாளர் புகழேந்தி என பலரின் பணி அளப்பரியது.
இடையில் இரு வாரங்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்த போது குழுக் கூட்டங்கள் நடைபெறாமல் சிறு தொய்வு ஏற் பட்டது. பணிகளிலும் சுணக்கம் ஏற்பட்டது. குணமடைந்து திரும்பிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைப் பெரியார் திடலில் மீண்டும் சந்தித்தபோது குழுவினர் இழந்திருந்த உற்சாகத்தையும் உந்துதலையும் திரும்பப் பெற்றார்கள்.
கருத்தரங்கிற்கு நடக்கும் ஏற்பாடுகளையும் செயற்பாடுகளையும் கண்டு பல்வேறு தரப்பினர் தாமாகவே உதவினர். நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், வழக்கறிஞர் தம்பதியினர் ஷோபனா கிரிதர், திருப்பத்தூர் எழிலரசன் ஐன்ஸ்டீன் கல்லூரியை சேர்ந்த ஆலடி எழில்வாணன், ஹரிஷ், புதுச்சேரி திராவிடக் கழகத் தலைவர் சிவ.வீரமணி, திண்டுக்கல்லைச் சார்ந்த திரு வெள்ளைச்சாமி; ‘வாருங்கள் படிப்போம்’ குழுவினைச் சார்ந்த குழல் குமரன் மற்றும் மீனா கிருஷ்ணமூர்த்தி, மாணவர் நகலகம் உரிமையாளர் அருமை சகோதரர் சௌரிராஜன் உள்ளிட்ட பலரும் பல்வேறு பணிகளில் ஒத்துழைப்பை வழங்கினர். ஆங்கிலத்தில் நடத்தப் போகிறோமே… அதுவும் இரு நாட்கள், கூட்டத்திற்கு எங்கே போவது? மாணவர்களை அழைத்து வந்து இரு நாட்கள் அரங்கினில் கட்டிப் போடும் அவல நிலை ஏற்பட்டு விடக்கூடாது, விருப்பப்பட்டவர்கள் மட்டுமே பதிவு செய்து கருத்தரங்கில் கலந்து கொள்ள வேண்டும், என்பதில் குழு உறுதியாக இருந்தது. அதற்காகக் கூகுள் படிவம் தயாரிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களிலும் விடுதலை, முரசொலி, தீக்கதிர் நாளிதழ்களிலும் பரப்பப்பட்டது. தொடக்கத்தில் வேகம் குறைவாக இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடு பிடிக்கப் பதிவுகளின் எண்ணிக்கை 500அய் எட்டியது. இதற்குமேல் அரங்கினில் இடம் கொள்ளாது என்பதற்காக மன வருத்தத்துடன் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே பதிவுகள் நிறுத்தப்பட்டன.
முதன்முறையாகப் பல்கலைக்கழகத்தில் இரண்டு அரங்குகள்; நூற்றாண்டு வளாகத்தில் உள்ள முதல் தளத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் அரங்கம் மற்றும் தரைத்தளத்தில் உள்ள ஜி 33 பயன்படுத்தப்பட்டன. கீழ் அரங்கத்தில் நாற்காலிகள் போடப்பட்டுத் திரை வழியே நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. கீழ்த் தள அரங்கில் தேநீர், பிற்பகல் உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் எந்தவிதச் சிரமமும் இன்றி அனைவரும் குறித்த நேரத்தில் நிதானமாக உணவருந்த முடிந்தது. இதனால் நிகழ்ச்சிகள் தொய்வின்றி நடந்தன.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் தமிழர் தலைவர் ஆசிரியர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, எழுத்தாளர் மனோஜ் மிட்டா, கலந்துரையாடலில் பங்கேற்ற பெருமக்கள், நிறைவுரையை எழுச்சிகரமாக வழங்கிய மாண்புமிகு. உயர்கல்வித்துறை அமைச்சரும், சென்னை பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான முனைவர் கோவி.செழியன் உள்ளிட்ட ஒவ்வொருவரின் உரையும், சிந்தனையூட்டும் வகையிலும் ஆதாரங்கள் அடிப்படையிலும் அமைந்தன.

கருத்தரங்கினைக் குறித்து ஏராளமானவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தார்கள். அதில் குறிப்பாக இரண்டு செய்திகளைச் சொன்னார்கள். ஒன்று பங்கேற் பாளர்கள் முதல் நாளிலிருந்து இரண்டாம் நாள் மாலை வரை கட்டுக்கோப்புடன் கருத்துக்களைக் கேட்டது; இரண்டாவதாக அமைப்பாளர்கள் நேர மேலாண்மையைச் சரியாகக் கையாண்டது.
இக்கருத்தரங்கின் வெற்றி நம்முடைய தலைவர், 93 வயது இளைஞர் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு நாம் அளிக்கக்கூடிய பிறந்தநாள் பரிசு என்று குழுவிலுள்ள நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். அது சரிதானே?
ஏதோ அழைத்தார்கள், வந்தோம் பேசினோம்…. என் றில்லாமல் ஒவ்வொரு கருத்தாளரும் சிரத்தையுடன் தயார் செய்து அறிவார்ந்த செறிவார்ந்த உரையினை வழங்கினார்கள். அவர்களுடைய உரைகளின் முக்கிய சாரங்களைத் தொகுத்து புத்தகமாக்கித் தொடக்க விழாவில் தமிழர் தலைவர் வெளியிட, மரியாதைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பெற்றுக் கொண்டது கூடுதல் சிறப்பு! பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் உடனடியாக மின் பிரதி அனுப்பப்பட்டது. இது தவிர, பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் கருத்தரங்க பெட்டகம் வழங்கப்பட்டன. அதில் நாடாளுமன்ற உறுப்பினர் ராசா அவர்கள் எழுதிய மூன்று புத்தகங்களும் மாடர்ன் ரேஷனலிஸ்ட் இதழும் வழங்கப்பட்டன.
பல்வேறு உரைகள் கேட்போரின் அறிவைத் தூண்டுவதாக அமைந்திருந்த போதிலும் இரு வித்தியாசமான நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் தாண்டி நின்றன.
ஒன்று இளம் மாணவர் களைக் கொண்டு நடத்தப்பட்ட விவாத அரங்கு. கலந்து கொண்ட ஆறு பேரில் அய்ந்து பேர் பெண்கள்; ஒருவர் ஆண். இவ்விளைஞர்களின் கருத்து களைக் கேட்டவர்களுக்கு – பெரியாரின் கொள்கைகள் இன்று மட்டுமல்ல நாளையும் இந்த உலகை வெல்லும் என்று உறுதியளித்தது.
இது தவிரச் சமூக நலத்துறை மாணவர்கள் இரு நாட்களும் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் வழிகாட்டுதல்கள் மூலம் நடத்திய கலை நிகழ்ச்சி எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டது. அதைப்போலவே மிகக் குறுகிய காலத்தில் தந்தை பெரியார் மற்றும் சுயமரியாதை இயக்க வரலாறு குறித்து ஆங்கிலத்தில் ஆவணப்படம் உருவாக்கிய பெரியார் விஷன் ஓடிடி, பெரியார் வலைக்காட்சித் ேதாழர்கள், குறிப்பாக உடுமலை அவர்களும், ஆங்கிலத்தில் ஆக்கம் செய்த வீ.குமரேசன் அவர்களும், கலை நிகழ்ச்சிக்குக் கூடுதல் உதவி அளித்த இறைவி அவர்களும் நன்றிக்கு உரியவர்கள். மேலும் அமெரிக்காவிலிருந்து டாக்டர் சோம இளங்கோவன், முனைவர் அரசு செல்லையா, இலண்டனிலிருந்து ஹரிஷ் மற்றும் ஜப்பானிலிருந்து கமலக்கண்ணன் ஆகியோர் திராவிட இயக்கம் குறித்துப் பேசி அனுப்பிய காணொளிகள் திரையிடப்பட்டன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோரும் வாழ்த்துகளை அனுப்பியிருந்தார்கள். மேலும் பெரியார் புத்தக நிலையம் சார்பில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. பல ஆயிரம் ரூபாய்க்கு நூல்கள் விற்பனையானதை அறியும்போது கூடுதல் மகிழ்ச்சி. பல்வேறு ஊர்களில் இருந்து இந்த நிகழ்ச்சிக்கென வந்திருந்த பல தரப்பினரும் பங்கெடுத்து இதன் அவசியத்தை உணர்த்
தியது.
இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சையத் நாசிர் உசேன் அவர்கள் ஒரு வேண்டுகோளை வைத் தார். ‘‘திராவிடம் என்பது தமிழர்களுக்கானது மட்டுமல்ல, அது எங்களுக்கும் உரியது. ஆந்திரா கேரள மக்களுக்கும் உரியது.
எனவே தென் மாநிலங்கள் இணைந்து வரும் சனவரியில் திராவிட இயக்க வரலாறு குறித்த மாபெரும் கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட வேண்டும். அதற்கு நானும் உங்களோடு உறுதுணையாக இருந்து வெற்றிகரமாக நடத்துவதற்கு உதவுவேன்’’ என்று
சொன்னது கருத்தரங்கு இத்தோடு முடியவில்லை இன்னும் பல பரிணாமங்களில் தொடரப் போகிறது என்பதற்குச் சாட்சியாக விளங்கியது.
