சென்னை, செப்.14– சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்துக்காக ரூ.150 கோடியை ஒதுக்கீடு செய்து,மாநகராட்சி ஒப்பந்தம்் கோரியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் இராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலத்துக்குட்பட்ட தூய்மை பணியை தனியாரிடம் ஒப்படைத்தது மாநகராட்சி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி முதல் அந்த இரு மண்டலங்களை சேர்ந்த தூய்மைப்பணியாளர்கள் தொடர்ந்து 13 நாட்களாக மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டனர். இதற்கு பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆக.14ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தூய்மை பணியாளர்கள் நலனுக்காக 6 சிறப்பு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி தூய்மைப் பணியாளர்கள் பணியின் போது உயிரிழந்தால் அவர்களது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும், நகர்ப்புற தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு, அந்தந்த நகராட்சிகளின் மூலம் இலவசமாக வழங்கப்படும் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
அந்தவகையில் சென்னை மாநகரில் தினசரி பணியில் இருக்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு காலை, மதியம், இரவு என 3 வேளையும் உணவு வழங்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி இந்த திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.50 கோடி வீதம் 3 ஆண்டுகளுக்கு ரூ.150 கோடியை ஒதுக்கீடு செய்து, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக உணவு தயாரித்து வழங்கும் நிறுவனங்களை தேர்வு செய்ய, சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் கோரியுள்ளது.