சென்னை, செப்.14 சீதாராம் யெச்சூரியின் முதலாமாண்டு நினைவுநாளையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உடற்கொடை செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சீதாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நேற்று (13.9.2025) தமிழ்நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, சென்னை தியாகராயர் நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் உடற்கொடை இயக்கம் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாநில தலைவர் பெ.சண்முகம் முதல் நபராக உடற்கொடை செய்த உறுதி மொழி படிவத்தை வழங்கினார்.
தொடர்ந்து, தலைமை குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், வாசுகி, மத்திய குழு உறுப்பினர்கள் சம்பத், பாலபாரதி, மாவட்ட செயலாளர்கள் ராமகிருஷ்ணன், வேல்முருகன், செல்வா உள்ளிட்டோர் உடற்கொடை செய்த உறுதிமொழி படிவத்தை தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் உறுப்பினர் செயலர் என்.கோபாலகிருஷ்ணனிடம் வழங்கினர்.
ஆராய்ச்சிக்கு பயன்படும்
சென்னை, கோவை, ஈரோட்டில் 350-க்கும் மேற்பட்டோர் (12.9.2025) உடற்கொடை செய்தனர். தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் உடல் தானம் செய்தனர்.
நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: இந்தியாவிலேயே ஒரு தலைவரின் நினைவு நாளை உடற்கொடை வழங்கி, மருத்துவத்துறையை புத்துணர்ச்சி யூட்டும் நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது இதுவே முதல்முறை. ஒருவர் இறந்துவிட்டால் அவர் இந்து மதமாக இருந்தாலும் வேறு எந்த மதமாக இருந்தாலும், அவரது உடலை உடற் கூராய்வுக்கு பயன்படுத்தக் கூடாது என்ற தத்துவக் கோட்பாடு இந்த நாட்டில் நீண்ட காலமாக இருக்கிறது. அந்த கோட்பாட்டுக்கு மாற்றாக தான், மனிதன் இறந்த பிறகும் அவனது உடல் இந்த உலகுக்கு பயன்படுத்த முடியும் என்ற அடிப்படையில் தற்போது இந்த உடற்கொடை நிகழ்வு நடைபெற்றுள்ளது. உடற்கொடை செய்வதன் மூலம், இந்த உடல் மண்ணுக்கு போய் வீணாவதை விட, மருத்துவத்துறைக்கும், புதிய ஆராய்ச்சிக்கும் பயன்படும். இவ்வாறு அவர் பேசினார்.