உடல் நலத்தில் அலட்சியம் வேண்டாம்!
நமது நண்பர்கள் பலரும் தங்களது உடல்நலம் காப்பதில் போதிய கவனத்தை ஏனோ செலுத்த மறந்து விடுகின்றனர்! அலட்சியம்தான் காரணம்!!
இன்னும் சிலர், ‘ஆங்… எனக்கொண்ணும் வராதுங்க – நான் இது வரைக்கும் ஆஸ்பத்திரிக்கே போனதில்லைங்க. மருந்து சாப்பிட்டதே இல்லீங்க; ஊசின்னாலே என்னவென்று எனக்குத் தெரியாதுங்க.’
இப்படியெல்லாம் மிகப் பெருமையாகத் தம் முதுகைத் தாமே தட்டிக் கொள்ளுபவர்களும் உண்டு.
உண்மையிலேயே அப்படி அவர்களது உடல் நலம் நல்ல ஆரோக்கியம் ததும்பும் உடல் நிலையாக இருப்பின் மகிழ்ந்து கொண்டாட வேண்டிய ஒன்றுதான்?
ஆனால் பலருக்கு என்றோ ஒரு நாள் லேசான நெஞ்சுவலி, நடக்க முடியாத இடுப்பு வலி, மடக்க முடியாத கை வலி, கால் வலி, பிறகு மருத்துவரிடம் சென்று காட்டியபின், அவரது அறிவுரைப்படி சில பரிசோதனைகள், ‘எக்கோ’ என்ற பரிசோதனைக்கு அடுத்த கட்ட ஆய்வு என்று பல நிலைகளை அடுத்தே நமது உடலில் புதைந்திருக்கிற அல்லது நம்மால் இதுவரை அறியப்படாத நோய்பற்றி நமக்கு வெளிச்சம் கிடைக்கும். இவைகள் எல்லாம் விளங்கத் துவங்கும்!
பொதுவாக நாம் அனைவரும் நம் வயதைப் பற்றி மட்டும் கவனித்து முடிவு எடுக்காமல் – உடலில் எந்த நேரமும் எந்தத் தொற்றும் எவருக் கும் ஏற்படலாம் என்ற நிலை அண்மைக்காலத்தில் உலகெங்கும் உருவாகி விட்டது!
கோவிட் கொடுந்தொற்று எத்தனை இலட்சக் கணக்கான உயிர்களை உலகெங்கும் பலி கொண்டுள்ளது!
நம் நாட்டில் சுமார் 5 இலட்சம் பேர்களை நாம் இழந்து துன்புற்றோம்; அத்துயரத்திலிருந்தும் – அதனால் ஏற்பட்ட சமூக தீய விளைவுகளிலிருந்தும் மீள முடியவில்லையே!
இப்போது அது பல்வேறு “அவதாரங்கள்” எடுத்து மீண்டும் மனித குலத்தை விரட்டத் தொடங்கியுள்ளது!
புதுப்புது வைரஸ் நோய் கிருமிகள் முன்பை விட வலிமையாகி, நம்மை பெரு வலிக்குள்ளாக்கி கொடுமைப்படுத்துகின்றனவே.
எனவே நம் நண்பர்கள், நமது மக்கள் 60 வயது, 70 வயது, 80,90 வயதுடைய எல்லோரும் ஒவ்வொரு ஆண்டும் தங்களது வயது, மருத்துவர்கள் அறிவுரை இவற்றையெல்லாம் வைத்து, முழு உடற்பரிசோதனை (Full Body Check-up)யைக் கட்டாயம் செய்து பார்த்து “நிம்மதி” அடைய வேண்டும்.
குறிப்பாக இப்போதெல்லாம் 25 வயதுள்ள இளைஞர்களுக்குக்கூட திடீர் மாரடைப்பு, இதயத் தாக்குதல் முதலியன ஏற்படுகின்றன!
நான் நமது குடும்பத்து மகளிர் தோழர்கள், தாய்மார்களுக்கு உரிமையுடனும், பாசம் கலந்த கவலையுடனும் கூறுவது, உடற்பரிசோதனை – குறிப்பாக மகளிர் – மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பைப் புற்றுநோய் (Uterus), ஆசன வாய்ப் புற்றுநோய் போன்ற பலவற்றுக்கு பரிசோதனை களை செய்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தவறக் கூடாது.
சில மகளிர் தோழர்கள் தங்களுக்கு உடலில் ஒரு வகை மேடு, வீக்கம், அதனையொட்டிய சில சங்கடமான மனநிலை இவைகளைப்பற்றி தங் களது வாழ்விணையரிடமோ, அல்லது அன்னை யர்களிடமோ கூட பகிர்ந்து கூறிடாமல், கூச்சப் பட்டோ, வெட்கப்பட்டோ தயங்கி மறைத்துப் பெரியதாகி உயிர்க் கொல்லி என்ற நிலை வரும் வரையில் ‘மூச்சு விடுவதில்லை!’ நியாயமா?
என்னே கொடுமை! இப்படி நாம் நமது அலட்சியத்தாலும், வெட்கம் கூச்சத்தாலும் மரணத்திற்கு விரைந்து அழைப்பு – அவசர ‘எக்ஸ்பிரஸ் கால்’ கொடுப்பது நியாயமா?
ஒவ்வொருவரும் உடற் பரிசோதனையை கட்டாயம் செய்து கொள்ளுங்கள். நம்பத் தகுந்த நாணயம் உள்ள பல ஆயுள் காப்பீடு நிறு வனங்களில் ‘ஹெல்த் இன்ஷுரன்ஸ்’ ஏற்பாடு செய்தல் கட்டாயமாகக் கொள்ளல் வேண்டும். சங்கடம் ஏற்படும்போது அதுநமக்கு ஒரு நாள் நிச்சயம் பயன் தரும் – உறுதி.
அலட்சியம் ஆபத்தாக முடியும் – கவனம்!