சென்னை, செப்.13- சென்னை கோடம் பாக்கம், மேற்கு ஜோன்ஸ் சாலை பகுதியில் உள்ள மயான பூமியின் மேம்பாட்டு பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரம ணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- உடல் உறுப்பு கொடை செய்வதில் தமிழ்நாடு உலகத்திற்கே முன்மாதிரி யாக உள்ளது. மூளைச் சாவு அடைந்து உடலுறுப்பு கொடை வழங்கியவர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என்ற அறிவிப்புக்கு பின்னர் இதுவரை 513 கொடையாளர்கள் உடலுறுப்பு கொடை வழங்கி இருக்கிறார்கள். 2 ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்டோர் உடலுறுப்பு கொடை செய்திருப்பது வரலாற்று சாதனை. அவர்களை மேலும் சிறப்பிக்கும் வகையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் “வால் ஆப் ஹானர்” என்ற மதிப்புச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை மூளைச் சாவு அடைந்து உடலுறுப்பு கொடை செய்தவர்களின் பெயர்களை இதில் பதிய வைக்கும் பணி நிறைவுற்று வருகிற 30ஆம் தேதி திறந்து வைக்கப்படுகிறது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த அரசு மருத்துவமனைகளிலும் “வால் ஆப் ஹானர்” செய்யப்பட இருக்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உட லுறுப்பு கொடை செய்தவர்களின் பெயர்கள் அந்தந்த மருத்துவமனைகளில் உள்ள சுவர்களில் நிலைத்திருக்கும்.