சென்னை, செப்.13- சென்னை நீதிமன்றத்தில், வரதராஜ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,
“சட்டம்-ஒழுங்கு காவல்துறை தலைமை இயக்குநராக இருப்பவர் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பாகவே புதிய காவல்துறை தலைமை இயக்குநரை தேர்வு செய்யவேண்டும். இந்த விதியை பின் பற்றாமல் நிர்வாகப் பிரிவு காவல்துறை தலைமை இயக்குநராக இருந்த வெங்கட்ராமனை பொறுப்புகாவல்துறை தலைமை இயக்குநராக நியமித்தது சட்டவிரோதம் ஆகும். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசின் இந்த நடவடிக்கை சந்தேகத்தை எழுப்புகிறது. எனவே, பொறுப்பு காவல்துறை தலைமை இயக்குநர் வெங் கட்ராமன் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றம் பிறப்பி த்துள்ள உத்தரவின் அடிப்படையில் புதிய காவல்துறை தலைமை இயக்குநர் நியமனத்தை மேற்கொள்ள அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். சிறீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், காவல்துறை தலைமை இயக்குநர் நியமனம் தொடர்பான உச்ச நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் சார்பில், சட்டம்-ஒழுங்கு காவல்துறை தலைமை இயக்குநர் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு முறையாக தகவல் தெரிவித்துள்ளது என்று கூறப்பட்டது. இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த விவ காரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு, உயர் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.