30.12.1944 – குடிஅரசிலிருந்து…
உலகில் ஒவ்வொரு நாடும் இழந்த சுதந்திரத்தை, உரிமையை மீண்டும் பெறுவதற்காகவும், தம் தம் கலை, மொழி, நாகரிகம், பழக்கவழக்கம் ஆகியவைகளைப் பாதுகாக்கவும் போராடிக் கொண்டு வருகின்றன. நேச தேசங்களும் இவைகளுக்காகத் தான் பாடுபடுவதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. இவ்வாறு தாங்கள் இழந்த சுதந்திரத்தை – உரிமையைப் பெறுவதற்காகப் போராடும் நாடுகள் எத்தகையன என்பதையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அவைகள் யாவும் சில ஆயிரம் மக்கள் முதல், 6 கோடி மக்கள் வரை உடையவைகளே. அந்நாடுகளின் நிலப்பரப்பும் நம் நாட்டு ஜில்லாக்கள், மாகாணங்களை ஒத்ததாகத்தான் இருக்கும்.
இவைகள் யாவும் தம் தம் சுதந்திரங்களைக் கடந்த ஒரு சில வருடங்களுக் குள்ளாகத்தான் இழந்திருக்கின்றன. இதற்குக் காரணம் ஹிட்லரிசம் எனப்படும் ஆரியனிசமேயாகும். இன்று விஞ்ஞான வளர்ச்சிய டைந்திருப் பதானால், ஆரியனிசம் விஞ்ஞானத்தின் உதவி கொண்டு, மற்ற நாடுகளின் சுதந்திரத்தைப் பறித்து ஆரியத்தை நிலைநிறுத்தப் பாடுபடுகிறது. ஆனால் இவ் ஹிட்லரிசம் எனப்படும் ஆரியனிசத்தை அய்ரோப்பாவிலிருந்தே, ஏன் உலகில் இருந்தே அழித்து ஒழிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது; அதன் கொடுமையை எண்ணிப் பார்த்தவர்களால். இதே ஆரியனிசம்தான் இந்தியா என்று சொல்லப்படும் இவ்வுபகண்டத்தில் இருந்து வருகிறது. இது பன்னெடு நாட் களாக இவ்வுபகண்ட மக்களை வாட்டி வதைத்து மக்களது சுதந்திரங்களையும் உரிமைகளையும் பறித்து பகுத்தறிவற்ற விலங்காக ஆக்கிவைத்து வந்திருக்கிறது – வருகிறது. நேற்று சுதந்திரம் இழந்த நாடுகள் போடும் கூக்குரல் கேட்கிறது உலகிற்கு; ஆனால் பன்னெடு நாட்களாக அழுத்துதலைத் தாங்கமாட்டாமல் இவ்வுபகண்டத்தின் மக்கள் போடும் கூக்குரல், கதறும் கதறல் கேட்கிறதில்லை இவ்வுலகிற்கு. இதற்குக் காரணம் எதுவாய் இருக்க முடியும்?
ஹிட்லரிசத்தின் – ஆரியனி சத்தின் கொடுமையை உள்ளபடி இவ்வுலகம் உணர்ந்திருக்குமானால், அவ் ஆரியனிசம் உலகில் எப்பகுதியில் எவ்வுருவில் இருந்தாலும் அதன் தன்மை ஒரே விதமாகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்திருக்கும். அவ்வாறு இல்லாமல் ஒரு இடத்தில் ஒரு விதமாகவும், மற்றொரு இடத்தில் வேறு ஒரு விதமாகவும் இருக்கும் என்று உணர்ந்திருக்குமே யானால் அதன் நாணயத்தில் யாருக்கும் சந்தேகம் தோன்றாமல் இருக்க முடியுமா என்று கேட்கிறோம்.
இவ்வுபகண்டத்தில் ஆரியனிசம் பரவுவதற்கு முன் மக்கள் எவ்வளவு உயர்நிலையில், சுயேச்சையாக இருந்தார்கள் என்பதைப் பழந்தமிழ் நூல்களின் வாயிலாகவும், புதை பொருள் ஆராய்ச்சிகளில் இருந்தும் தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு இருந்த மக்கள், தங்கள் பண்பிழந்து, கலை இழந்து, மொழி இழந்து ஆரியத்திற்கு அடிமையாயிருந்து வருகின்றனர். இவ்வடிமைத்தனத்தை உணர்ந்த ஒரு சிலர் தங்கள் மக்களைத் தட்டி எழுப்ப தன்மான உணர்ச்சியை ஊட்டப் பாடுபட்டால், அவ்வாறு பாடுபடுகிறவர்களை அந்நாளில் பலவிதக் கொடுமைகளுக்கு உள்ளாக்கி, அவ்வுணர்ச்சி பரவ முடியாதபடி செய்து வந்திருக்கிறார்கள். இதற்கு ஆதாரங்கள் மலைமலையாக வேண்டுமானாலும் நம்மால் குவிக்க முடியும். இதற்குக் காரணம் அந்நாளில், மக்கள் போதுமான அறிவு பெறாதிருந்ததினாலும், ஆட்சியில் இருந்தவர்களை ஆரியம் தனது வலையில் சிக்க வைத்து இருந்ததினாலும், ஆரியத்தை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தவர்களையும், உணர்ச்சியூட்டி வந்தவர்களையும், ஆட்சி பலத்தால் – உதவியால், அத்தகைய கிளர்ச்சிகள் தலை எடுக்காமலும் உணர்ச்சிகள் பரவாமல் தடுத்து வந்தார்கள் என்பதேயாகும். ஆனால், பிரிட்டிஷ் ஆட்சியின் பயனாக ஓரளவுக்கு பொதுமக்கள் அறிவுபெற முடிந்ததினாலும், ஆட்சி ஆரிய ஆதிக்கத்திற்கு அடங்கியதாக இருந்தாலும், மற்ற மக்களுக்கும் சிறிதாவது ஆதிக்கம் இருந்து வருவதாலும், ஆரியம் முன்போல் தனது முழு சக்தியையும் காட்ட முடியவில்லை; கிளர்ச்சியை அடக்க முடியவில்லை; உணர்ச்சியைத் தடுக்க முடியவில்லை. எனினும், அது தன் விஷமத்தனத்தைப் பற்பல ரூபங்களில் காட்டிக்கொண்டுதான் வருகிறது என்பதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
இன்று பொதுவாக இவ்வுபகண்டம் முழுவதும் விழிப்படைந்து விட்டது என்றே சொல்லலாம். ஆரியத்தின் பெருமையை இவ்வுபகண்ட மக்கள் யாவரும் உணர்ந்து விட்டார்கள் ஆங்காங்கு பற்பல உருவங்களில் கிளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. உணர்ச்சி காட்டப்பட்டு வருகின்றன. இதைக் கண்டு ஆரியனிசம் கலக்கமுற்று இருக்கிறது. எவ்வாறு இவைகளை எதிர்த்து அழிப்பது என்பதில் காலதேசவர்த்தமானத்திற்கு ஏற்ப புதுப்புது வழிகளைக் கண்டுபிடிப்பதில் முனைந்திருக் கின்றது. இந்நாட்டிலே ஆரியனிசம் இது போலவேதான் மேல்நாடுகளில் ஹிட்லரிசம் தனக்கெதிராக செய்யப்படும் கிளர்ச்சிகளையும், உணர்ச்சிகளையும் எதிர்த்து அழிக்க விஞ்ஞானத்தின் உதவி கொண்டு நாள்தோறும் புதுப்புது வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றது. ஆனால் இதற்குச் சரியான பதில் நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன அந்நாடுகளில்; இந்நாட்டிலோ மக்கள் வாழாவிருக்கின்றனர்.
ஆகவே, இந்நாட்டில் ஆரியனிசத்தின் கொடுமையை உள்ளபடி உணர்தல் மக்களது நீங்காக் கடமை. மக்கள் விழிப்படைந்துள்ள இந்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு கிளர்ச்சியைப் பலப்படுத்த வேண்டியதாகும். இதுவரை, இவ்வுபகண்டத்தில் தோன்றிய கிளர்ச்சிகளை அடக்கி ஒடுக்கியதுபோல் இப்பொழுதும் செய்து விடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கலாம் ஒரு சிலர். ஆனால், அவர்களுக்கு அம்மனக்கோட்டையைத் தகர்த்தெறிவோம் என்பதை எடுத்துக்காட்ட வேண்டும்.
ஆரியனிசத்தை எதிர்த்து நடைபெறும் கிளர்ச்சியில் சேரும் மக்களுக்கு எவ்வளவு தூரம் தொல்லைகள் கொடுக்கலாமோ, எவ்வளவு தூரம் அவர்களை இழிவுபடுத்தலாமோ, எவ்வளவு தூரம் செல்வாக்கற்றவர்களாகச் செய்ய முடியுமோ, அவ்வளவு தூரம் ஆரியனிசம் முயன்று பார்க்கும். ஏனெனில், அய்ரோப்பாவில் ஹிட்லரிசம் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து ஒரு சில வருடங்கள்தான் ஆகின்றன. இதற்குள், தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த எவ்வளவோ முயற்சிகள் செய்து வருகையில், கிளர்ச்சியை அடக்கப் பல வழிகளை வகுத்து வருகையில் இவ்வுபகண்டத்தில் ஆயிரக்கணக்கான வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி இனிது வாழ்ந்து வந்த ஆரியனிசம் லேசில் விட்டு விடுமா? தன்னாலானமட்டும் முயன்றுதான் பார்க்கும்.
அய்ரோப்பாவில், ஹிட்லரிசத்தை ஒழிக்க எவ்வளவு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன, எவ்வளவு பொருள்கள் செலவழிக்கப்படுகின்றன, எவ்வளவு உயிர்கள் பலியிடப்படுகின்றன என்பதை எண்ணிப் பாருங்கள். ஒரு சில வருடங்களாக வேரூன்றி இருக்கும் ஹிட்லரிசத்தை ஒழிக்க இவ்வளவு பெரு முயற்சிகள் எடுக்கப்படுகையில் பல ஆயிரம் வருடங்களாக ஆணிவேர் சல்லிவேர்கள் விட்டு வானளாவி உயரப் படர்ந்திருக்கும் ஆரிய விஷ விருட்சத்தை வெட்டி வீழ்த்துவதென்றால் எவ்வளவு பெருமுயற்சி செய்ய வேண்டும், எடுத்துக் கொள்ள வேண்டும், எவ்வளவு மன உறுதி வேண்டும் என்பதை எண்ணிப் பாருங்கள்.
ஏன் இவ்வாறு சொல்லுகிறோமென்றால், ஹிட்லரிசம் மக்களை அடிமைப்படுத்தி சுதந்திரம் அற்ற மக்களாகச் செய்து விடும் என்று அஞ்சப்படுகிறது. ஆனால், இந்நாட்டில் வெகு நாட்களுக்கு முன்னமே, அவ்வாறு செய்துவிட்டது. பன்னெடு நாட்களுக்கு முன்னிருந்தே அந்நிலைமையிலிருக்கும் மக்களை விடுவிப்பதற்காக முயலும் காரியத்தை ஆதரிக்க வேண்டியதல்லவா உள்ளபடி, ஹிட்லரிசத்தின் கொடுமையிலிருந்து மக்களை விடுவிக்கப் பாடுபடுவர்களின் கடமை? இன்று நாட்டிலே நடைபெறும் காரியங்களைப் பார்க்கவில்லையா? அவ்வாறு எண்ணுவதற்கில்லை. ஆரியத்தை எதிர்க்கிறவர்களுக்கும் அவர்களுக்குத் துணை நிற்கிறவர்களுக்கும் எவ்வளவு தூரம் தொல்லை கொடுக்கலாமோ அவ்வளவு தூரம் தொல்லை கொடுக்கப்பட்டு வருகிறது. விபீஷணர்களையும், சுக்ரீவன்களையும், அனுமார்களையும் புதிது புதிதாக உற்பத்தி செய்து வரப்படுகிறது. ஆரியனிசத்தால் அந்நாளில் தோற்றுவிக்கப்பட்ட விபீஷணர்களையும், சுக்ரீவன்களையும், அனுமார்களையும் இன்று தன்மானமற்ற – சூடு சுரணையற்ற ஒரு சிலர் பூஜித்து வணங்கி வருவது போல எதிர்காலத்தில் தங்களையும் வணங்குவார்கள் என்று இவர்கள் – இவ்விபீஷணர் முதலியோர் ஒரு வேளை எண்ணலாம். ஆனால், இவர்களுக்கு, இவர்களது வாழ்நாளிலேயே தங்களைப் போன்றவர்களை வணங்குவார்களா அல்லது இத்தகையவர்கள் சந்ததிகளே இனி இவ்வுபகண்டத்தில் மட்டிலுமல்ல; உலகிலேயே தோன்றாமல் செய்து விடுவார்களா என்பதை பகுத்தறிவு உலகம் உணர்த்தி விடும் என்பதில் சிறிதும் அய்யமில்லை.
இவ்வுபகண்டத்தில், அதிலும் குறிப்பாக, தென்னாட்டில் உள்ள மக்கள் யாவரும் ஓர் இனம் – ஒரு நாட்டு மக்கள்; எங்களுக்குள் வேற்றுமை இல்லை – உயர்வு தாழ்வு இல்லை; நாங்கள் அடிமைப்படவும் மாட்டோம்; அடிமை கொள்ளவும் மாட்டோம் என்ற உணர்ச்சி ஒவ்வொருவர் உள்ளத்திலும் கொழுந்து விட்டெரியும் இந்நேரத்தில், அதனை அணைக்க ஆரியனிசம், துரோகிகளைக் கொண்டும் பலவித உபாயங்களைக் கொண்டும் முயலுமானால், இதைக் கண்ணுறும் எவர் மனந்தான் துடிக்காமல் இருக்கும்.
ஆகவே, இவர்களது எண்ணத்தில் மண்விழச் செய்வதற்கு ஒரே ஒரு வழிதான் இன்று நம் முன் உள்ளது; அதாவது, திராவிட இன உணர்ச்சியின் பாற்பட்டு ஓர் இனமென்று திரண்டு எழுந்து, உறுதி தளராத பெரியார் தலைமையில் நின்று போராடுவதுதான். இப்போராட்டத்தைத் துவக்குவதற்கு நாம் எல்லாம் ஒன்று திரள வேண்டும். அவ்வாறு ஒன்று திரளுவதற்குத் திராவிடர் கழகந்தான் இன்று ஏற்ற அமைப்பாக இருந்து வருகிறது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து, திராவிடர் கழகத்தில் ஆயிரக்கணக்கில் அல்ல லட்சக்கணக்கில், கோடிக் கணக்கில் உறுப்பினர்களாகச் சேர வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். திராவிடர் கழகம் எவ்வளவுக்கெவ்வளவு பலமடைகிறதோ அவ்வளவுக்கவ்வளவு நமது இலட்சியம் ஈடேறுவதற்குரிய காலத்தைக் குறுக்கியவர்களாவோம் என்பதோடு, இதனைப் பார்க்கும் நம் பெரியாரின் உள்ளமும் பூரித்து இன்னும் பல திட்டங்களைத் தந்து பல வழிகள் வகுத்துத் தருவார்கள் என்பதில் அய்யமில்லை. இதற்காக திராவிடர் கிளர்ச்சி திக்கெட்டும் பரவும்படி செய்வதோடு திராவிட முழக்கம் எங்கும் முழங்கும்படி செய்ய வேண்டும். ஆரியனிசத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் உண்மையான ஆர்வம் இருப்பவர்களும் இந்நாட்டு மக்களை ஆரிய அடிமைத் தளையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களும், முதலில் செய்ய வேண்டியது திராவிடர் கழகத்திற்கு எவ்வளவு உறுப்பினர்களைச் சேர்க்க முடியுமோ, அவ்வளவு பேர்களைச் சேர்ப்பதுடன், எதிரிகளின் சதிகளை – நடவடிக்கைகளை அழித்து ஒழிக்கவும் முன்வரவேண்டும். இதற்கு முன்மாதிரியாக, அய்ரோப்பாவில் ஹிட்லரிசமாகிய ஆரியனிசத்தை அழிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறதை நாம் கண்முன் பார்க்கிறோம். பார்த்தும் வாளா இருக்கலாமா? எனவே நாம் உறுதி தளராது ஊக்கத்தைக் கைவிடாமல் நிற்போமானால் வெற்றி நமதே!
குடிஅரசு – தலையங்கம் – 30.12.1944