சென்னை, செப்.12- சென்னை கோட்டத்தில் நடப்பாண்டில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 228 பேர் மின்சார ரயில் மோதி உயிரிழந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தண்டவாளத்தை கடந்து…
சென்னையில் எழும்பூர், சென்டிரல் உள்பட அனைத்து முக்கியமான ரயில் நிலையங்களிலும் நடைபெறும் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள், ரயில்களில் படிகளில் தொங்கி பயணிப்பவர்கள், தண்டவாளத்தை கடந்து செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விழிப்புணர்வு
அதுமட்டுமின்றி இதுகுறித்து ரயில் பயணிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை கோட்டத்தில், சுவரொட்டிகள், ஒலி அறிவிப்புகள், டிஜிட்டல் பிரச்சாரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து ரயில்வே பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
விழிப்புணர்வு நிகழ்ச்சி யில் கூறப்பட்டதாவது: எந்தச் சூழ்நிலையிலும் ரயில் தண்டவாளங்களில் அத்துமீறி நுழையக்கூடாது, ஓடும் ரெயிலில் ஏறவோ, இறங்கவோ கூடாது, படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். ரயில் வரும்போது தண்டவாளங்களை கடக்க வேண்டாம், ரயில் நிலையங்களில் நடைமேடையில் உள்ள மஞ்சள் பாதுகாப்பு கோட்டிற்குப் பின்னால் நிற்க வேண்டும் உள்பட பயணிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது.
ரயில் மோதியதில்…
என்னதான் ரயில்வே நிர்வாகம், ரயில்வே காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும் ஆங்காங்கே ரயில்வே தண்டவாளங்களை கடக்கும்போது ரயில் மோதி உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில், நடப்பாண்டில் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 228 பேர் மின்சார ரயில் மோதி உயிரிழந்துள்ளதாகவும். 34 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தவறி விழுந்து 24 பேர் உயிரிழப்பு
சென்னை கோட்டத் தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையில் மின்சார ரயில்களில் பயணம் செய்தபோது தவறி விழுந்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 45 பேர் காயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியபோது, ‘தண்டவாளங்களில் அத்துமீறி நுழைதல் மற்றும் படிகட்டில் பயணிப்பது போன்ற ஆபத்தான செயல்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும், ரயில்வே ஊழியர்களை நியமித்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. பயணிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். ரயில்வேயின் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படையினர் பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்’ என்றார்கள்.
