ஆடிய ஆட்டம் என்ன?
அரசு இல்லத்தை காலி செய்யும் ராஜபக்சே
கொழும்பு, செப். 12- இலங்கையில் தற்போது ஆட்சியில் இருக்கும் தேசிய மக்கள் சக்தி கூட்டணி, தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதியின்படி மேனாள் அதிபர்களின் சலுகைகளை ரத்து செய்யும் மசோதாவை கொண்டு வந்தது. இந்த மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் (10.9.2025) நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து மேனாள் அதிபர் மகிந்த ராஜபக்சே (80), கொழும்புவில் உள்ள அரசு வீட்டை விட்டு நேற்று (11.9.2025) வெளியேறினார். ராஜபக்சே கடந்த 2015 முதல் இந்த வீட்டில் வசித்து வந்தார்.
ராஜபக்சே கடந்த 2004 முதல் 2005 வரை பிரதமராகவும் 2005 முதல் 2015 வரை அதிபராகவும் பதவி வகித்தார். பிறகு மீண்டும் 2019 முதல் 2022 வரை பிரதமராக பதவி வகித்தார். அவர் தற்போது அம்பாத்தோட்டை மாவட்டம், தங்கல்ல பகுதியில் இருக்கும் வீட்டில் குடியேறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேபாளத்தை போலவே பிரான்சிலும்
வீதியில் இறங்கிய பொதுமக்கள்
போராட்டம் தீவிரம்! தீ வைப்பு என்ன காரணம்?
பாரிஸ், செப். 12- பிரான்ஸ் நாட்டில் அரசு கொண்டு வந்த சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. தலைநகர் பாரிஸ் உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாகன்ங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் போர்க்களம் போல முக்கிய இடங்கள் காட்சி அளிக்கின்றன. போராட்டக்கார்கள் சுமார் 200 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அய்ரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் போராட்டம் வெடித்து இருக்கிறது. “அனைத்தையும் முடக்குங்கள்” என்ற முழக்கத்துடன் இயைவழியில் முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக, இந்த போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. தலைநகர் பாரிஸ் உள்பட பல்வேறு இடங்களில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் போராட்டம்
சாலைகளில் மறியல் செய்ததும், பொதுச் சொத்துகளுக்கு தீ வைத்ததாலும் போராட்ட இடம் வன்முறை களம் போல காட்சியளித்தது. காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்கார்களை விரட்டியடித்தனர். மேலும் போராட்டக்காரர்கள் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் புருனே ரிடேல்லே கூறுகையில், ரென்னேஸ் நகரில் பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது. தென்மேற்கு பகுதியில் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பவர் லைன் சேதப்படுத்தப்பட்டதால் ரயில்கள் இயங்க வழியில்லை. கிளர்ச்சி போன்ற சூழலை உருவாக்க போராட்டக்காரர்கள் முயற்சிக்கிறார்கள்.
காவல்துறையினர் ரோந்து
பிரான்ஸ் முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், நாடு முழுக்க 80,000 காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய இடங்களில் காவல்துறையினர் தடுப்புகள் வைத்துள்ளனர். இதனையும் மீறி, பிரான்சில் பல்வேறு இடங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.