குன்றத்தூர், செப்.12 தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும் தெளிவாகப் புரிந்துகொண்ட மண் நம் தமிழ்நாடு என்பதால், பாசிச பா.ஜ.க.வால் நெருங்க முடியாத கோட்டையாக விளங்கிக்கொண்டு இருக்கிறது என்றார் துணை முதலமைச்சர் உதயநிதி.
குன்றத்தூரில், அண்ணல் அம்பேத்கரின் உருவச் சிலையை, தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் உருவச் சிலையை இன்றைக்கு குன்றத்தூரில் திறந்து வைப்பதில் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலையைத் திறந்து வைப்பதன் மூலம் குன்றத்தூருக்கு மேலும் ஒரு சிறப்பு வந்திருக்கிறது.
திராவிட இயக்கக் கொள்கைகளுக்கும், அண்ணல் அம்பேத்கரின் கருத்துகளுக்கும் மிகமிக நெருங்கிய தொடர்பு உண்டு.
தந்தை பெரியாரும் – அண்ணல் அம்பேத்கரும் சமூகப் புரட்சியாளர்கள்!
நம் திராவிட இயக்கத்துக்கும், அம்பேத்கரின் கருத்துகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இரண்டுமே சமத்துவத்தையும், சமூக நீதியையும்தான் வலியுறுத்துகின்றன. அதனால்தான் தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும் சமூகப் புரட்சியாளர்கள் என்று பெருமையாக அழைக்கிறோம். அதனால்தான் அம்பேத்கர் அவர்களை `தாடி இல்லாத பெரியார்’ என்றும், பெரியார் அவர்களை `தாடி வைத்த அம்பேத்கர்’ என்றும் நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவார்.
ஒரு காலத்தில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அறிவு, திறமை, தகுதி கிடையாது என்றும், தாங்கள்தான் அறிவுஜீவிகள் என்று பிற்போக்குக் கூட்டம் நினைத்துக் கொண்டிருந்தது. இன்றைக்கும் ஒரு சில கூட்டம் நினைத்துக்கொண்டு இருக்கிறது. அந்த கூட்டம் வாயடைத்துப் போகின்ற வகையில், இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதித் தந்த அறிவாசான்தான் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அதனால்தான் இன்றைக்கும் அனைவருக்குமான தலைவராக, எல்லோரும் கொண்டாடுகின்ற தலைவராகத் திகழ்ந்துகொண்டு, உயர்ந்து நிற்கின்றார்.
நம் முதலமைச்சர் அவர்கள் ஒரு வார காலம் அரசுப் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இங்கிலாந்து, ஜெர்மனி சென்று வந்தார். லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை முன்னிட்டு, தந்தை பெரியாரின் உருவப் படத்தைத் திறந்துவைத்து, நமக்கெல்லாம் பெருமை சேர்த்தார். அதுமட்டுமல்ல, முக்கியமாக லண்டனில் இருக்கின்ற அண்ணல் அம்பேத்கர் வாழ்ந்த வீட்டிற்கும், முதலமைச்சர் அவர்கள் சென்று பார்த்து வந்தார்.
தந்தை பெரியாரின், அண்ணல் அம்பேத்கரின் கொள்கைகளை முதலீடுச் செய்யத்தான்…
அண்ணல் அம்பேத்கர் வாழ்ந்த இல்லத்தில், அந்த வீட்டுச் சுவற்றில் அண்ணல் அம்பேத்கர் அவர்களும், தந்தை பெரியார் அவர்களும் பேசிக்கொண்டு இருந்த ஓர் ஒளிப்படம், தன் மனதை மிகவும் கவர்ந்தது. அது மிகவும் எனக்கு பிடித்த ஒளிப்படம் என்று முதலமைச்சர் அவர்கள் கூறியிருக்கிறார். ஆகவே, நம் முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் என்பது வெறும் முதலீடுகளை ஈர்க்க மட்டுமல்ல. தந்தை பெரியாரின், அண்ணல் அம்பேத்கரின் கொள்கைகளை முதலீடுச் செய்யத்தான் அங்கு செல்கிறேன் என்று சொல்லி, சென்று வந்தார் நம் முதலமைச்சர் அவர்கள்.
எந்த மக்களிடையே பிரிவினைவாதத்தை உருவாக்கி, அதில் குளிர் காயலாம் என்று நம் இன எதிரிகள் நினைக்கிறார்களோ, அந்த மக்கள் அனைவரும் இன்றைக்கு ஒன்றுகூடி இருக்கிறோம். இந்த சிலைக்கு நாம் மரியாதை செலுத்தியிருக்கிறோம்.
இந்த ஒற்றுமையைத்தான் எப்படியாவது குலைக்க முடியுமா என்று நம் இன எதிரிகள் காத்துக்கொண்டு, முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள். இந்த சூழ்ச்சிக்கெல்லாம் நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் என்றைக்கும் பலியாக மாட்டார்கள் என்று இந்தக் கூட்டத்தில், உங்களின் எழுச்சியைப் பார்க்கும்போது தெளிவாகத் தெரிகிறது.
குறிப்பாக, இந்த நிகழ்ச்சிக்கு மகளிர் அதிகமாக வந்திருக்கிறீர்கள். இந்த சிலையைத் திறந்து வைக்கும்போது ‘டாக்டர் அம்பேத்கர் வாழ்க, அண்ணல் அம்பேத்கர் வாழ்க’ என்று முழக்கம் போட்டீர்கள். அம்பேத்கர் கொடுத்த அரசியலமைப்புச் சட்டத்தை எப்பாடுபட்டாவது காப்பாற்ற வேண்டும் என்ற உறுதிமொழியை, இந்தச் சிலைக்கு முன்பு நாம் அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டு மக்கள் மிகப்பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்தீர்கள்!
அம்பேத்கர் அவர்கள் தந்த அரசியலமைப்புச் சட்டத்தை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று பாசிச பா.ஜ.க. துடித்துக்கொண்டு இருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நம் தலைவர் அவர்களின் முயற்சியால், இந்தியா கூட்டணி உருவானது. அதன் காரணமாகத்தான் தமிழ்நாட்டில் 39, புதுச்சேரியில் ஒரு தொகுதி உள்பட 40–க்கு 40 தொகுதிகளிலும், தமிழ்நாட்டு மக்கள் மிகப்பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்தீர்கள்.
அதன் காரணமாகத்தான், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அடைந்த வெற்றியை, அவர்களால் தமிழ்நாட்டில் பெற முடியவில்லை. எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல், மெஜாரிட்டி பெற முடியாமல், பா.ஜ.க. இப்போது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கிறது.
தனிப்பெரும்பான்மை மட்டும் கிடைத்திருந்தது என்றால், நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை, பாசிச பா.ஜ.க. என்றைக்கோ மாற்றியிருக்கும். அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி, அதற்குப் பதிலாக மனுதர்மத்தை, சட்டமாகக் கொண்டு வந்தாலும், வந்திருப்பார்கள்.
பாசிச பா.ஜ.க.வால் நெருங்க முடியாத கோட்டையாக நம் தமிழ்நாடு இருக்கிறது!
பாசிசக் கூட்டத்தின் அந்தக் கனவைத் தகர்த்தெறிந்தவர் நம் முதலமைச்சர் அவர்கள் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் அங்கங்களாக இருக்கின்ற காங்கிரஸ் பேரியக்கமும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், இன்றைக்கு தி.மு.கழகத்துடன் கைகோர்த்து நிற்கின்றன. அதனால்தான் பாசிச பா.ஜ.க.வால் நெருங்க முடியாத கோட்டையாக நம் தமிழ்நாடு விளங்கிக்கொண்டு இருக்கிறது.
அந்த ஒற்றுமையை சிதைக்க, பா.ஜ.க. எவ்வளவோ முயற்சிகளைச் செய்துகொண்டு இருக்கிறது. ஆனால், அவர்களின் எண்ணம் ஒருபோதும் தமிழ்நாட்டில் நிறைவேறாது. ஏனென்றால், அண்ணல் அம்பேத்கரையும், தந்தை பெரியாரையும் தெளிவாகப் புரிந்துகொண்ட மண் நம் தமிழ்நாடு என்றார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.