அடுத்த குறி காசி – மதுரா மசூதிகளாம்!

3 Min Read

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இந்த மசூதி முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பால் கி.பி. 1669-இல் கட்டப்பட்டதாகும். ஹிந்துத்துவ வாதிகள் இந்த மசூதி காசி விசுவநாதர் கோவிலின் ஒரு பகுதியை இடித்துக் கட்டப்பட்டது என்று கூறி,  மசூதி உள்ள இடம்  காசி விஸ்வநாதர் கோவிலுக்கான இடம், இதனால் மசூதியை இடிக்கவேண்டும் என்று   தொடர்ந்து கூறி வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பாகவத்தும்  இப்பொழுது அதையே வலியுறுத்தியுள்ளார்.

மதுராவில் உள்ள ஷாஹி இத்கா மசூதி, கிருஷ்ண ஜன்மபூமி (கிருஷ்ணர் பிறந்த இடம்) என்று நம்பப்படும் இடத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது. இந்து அமைப்புகளின் வாதப்படி, இந்த மசூதியும் முன்பு இருந்த கிருஷ்ணர் கோயிலை இடித்து அவுரங்கசீப்பால் கட்டப்பட்டது. இந்துக்களின் மிக முக்கியமான புனிதத் தலங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. எனவே, மசூதியை அகற்றி அங்கும் மீண்டும் கோயிலைக் கட்ட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த இரண்டு சர்ச்சைகளிலும் முக்கியமாகப் பேசப்படும் ஒரு சட்டம் “வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம், 1991” ஆகும். இந்தச் சட்டம், ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியாவில் இருந்த வழிபாட்டுத் தலங்களின் தன்மையை மாற்றக் கூடாது என்று கூறுகிறது. அதாவது, ஒரு வழிபாட்டுத் தலம் இந்திய நாடு விடுதலை அடைந்த நேரத்தில் கோயிலாக இருந்திருந்தால், அது கோயிலாகவே தொடர வேண்டும்; மசூதியாக இருந்திருந்தால், அது மசூதியாகவே இருக்க வேண்டும் என்பதுதான் அந்தச் சட்டம் அயோத்தியில் உள்ள இராமன் கோயில்-பாபர் மசூதி விவகாரத்திற்கு மட்டும் இந்தச் சட்டம் பொருந்தாதோ!

இந்து அமைப்புகள் இந்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. அதே நேரத்தில், முஸ்லிம் அமைப்புகள் இந்தச் சட்டத்தைப் பாதுகாக்கவும், அதன்மூலம் இந்த வழிபாட்டுத் தலங்களின் நிலையை உறுதிப்படுத்தவும் கோரின.

இந்த சட்டத்தைப் பற்றி உச்சநீதிமன்றமே கவனம் செலுத்தவில்லை என்பது அதிர்ச்சிக்குரியது. கேட்டால் அந்தத் தீர்ப்பை எழுதியது கடவுளாம்! மக்களின் மனப்போக்கை அறிந்து வழங்கப்பட்ட தீர்ப்பாம்.

மனிதன் காட்டுமிராண்டிக் கால சிந்தனையி லிருந்து இன்னும் விடுபடவில்லை; மதவெறித் தனத்திலிருந்தும் வெளியேறவில்லை என்பதோடு மட்டுமல்ல – அந்த மதவெறியை ஆயுதமாக்கி பிற  மதக்காரர்களைக் கொலை செய்வது, இன்னொரு மதக்காரரின் வழிபாட்டுத் தலத்தை அடித்து நொறுக்குவது என்கிற காட்டுமிராண்டிச் சிந்தனையில்தான் கிடந்துழலுகிறான்.

‘மெத்த படித்த (?) மேதாவிகள்’ என்று தன் முதுகைத் தட்டிக் கொள்ளும் நீதிமன்றமே தடுமாறும் அவல நிலை! எங்கே போய் முட்டிக் கொள்வதோ!

‘‘என்வீட்டுப் பிள்ளைகளிலேயே யோக்கிய சிகாமணி யார் என்றால், அதோ கூரையில் ஏறிக் கொள்ளி வைக்கிறானே அவன்தான்’’ என்றானாம் ஒரு அப்பா! அதற்கொரு எடுத்துக்காட்டு இதோ.

‘ஜென்டில்மேன்’ என்று பொதுவாகப் பிரச்சாரம் செய்யப்படும் அடல் பிஹாரி வாஜ்பேயி ஒரு முறை சொன்னார்.

‘‘காசி, மதுரா பிரச்சினை எங்கள் அஜண்டாவில் இல்லை, அவ்வளவுதான். இது அஜண்டாவில் இல்லையென்றால் அதன் பொருள் என்ன? தற்சமயம் அஜண்டாவில் இல்லை – அவ்வளவுதான்! எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாராலும் உறுதியிட்டுக் கூற முடியாது.’’ (‘டைம்ஸ் ஆப் இந்தியா’ 8.1.1998)

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் இப்ெபாழுது சொல்லுவதைப் பார்த்தால் வாஜ்பேயி சொன்ன அந்தத் தருணம் வந்து விட்டதாகவே தெரிகிறது.

இந்தப் போக்கில் நாடு சென்றால் – மக்கள் வாழும் தகுதியற்ற நாடாக இந்தியா மாறிவிடும் எச்சரிக்கை!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *