ஜாதிப் பாகுபாடு காட்டுகிறார்களா? ஆசிரியர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய உத்தரவு

2 Min Read

சென்னை, செப்.11 பள்ளிகளில் ஜாதி பாகுபாட்டுடன் செயல்படும் ஆசிரியர்களை, உடனடியாக இடமாறுதல் செய்ய, பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளி மாணவர்கள் இடையில் ஜாதி மோதல் ஏற்படுவதை தடுத்து, அவர்கள் ஒற்றுமையாக பழகி, படிக்க வழி செய்ய வேண்டும் என, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான, ஒரு நபர் குழு, கடந்த ஜூன் 18ல் அறிக்கை அளித்தது.

அதன் அடிப்படையில், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் பிறப்பித்துள்ள உத்தரவு: பள்ளிகளில் ஜாதி மற்றும் வகுப்புவாத எண்ணத்தை, மாணவர்களிடம் உண்டாக்கி, பிரிவினையை ஏற்படுத்தும் ஆசிரியர்கள் குறித்து புகார் வந்தால், அவர்களை உடனடியாக, வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர் நலத்துறை வாயிலாக, மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க, விவரங்கள் தேவை என்றால், மாணவர்களை தனியாக, தலைமை ஆசிரியர் அலுவலகத்துக்கு அழைத்து பேச வேண்டும். இந்த தகவல்களை பொதுவெளியில் பகிரக்கூடாது.

மாணவ, மாணவியர் பள்ளிக்கு கைப்பேசி எடுத்து வரக்கூடாது. இது குறித்து, அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மாணவர்களுக்கான தொந்தரவுகள், பிரச்சினைகள் குறித்து, அவர்கள் வெளிப்படையாக புகார் அளிக்க, பள்ளிகளில் ‘மாணவர் மனசு’ புகார் பெட்டி வைக்க வேண்டும். அதை, வாரம் ஒரு முறை, தலைமை ஆசிரியர் முன்னிலையில் திறந்து, புகார்களை ஆலோசனைக் குழு வாயிலாக விசாரித்து, முதன்மைக் கல்வி அலுவலர்கள், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரி பா.ஜ.க.,வில் இருந்து மூத்த நிர்வாகிகள் விலக முடிவு

புதுச்சேரி, செப்.11 புதுச்சேரி பா.ஜ., மேனாள் தலைவர் சாமிநாதனை தொடர்ந்து, மூத்த நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளனர்.

புதுச்சேரியில், கடந்த காலங்களில் பா.ஜ., பெயரளவிலான கட்சியாகவே இருந்தது. கடந்த 2015ஆம் ஆண்டில், அக்கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்ற சாமிநாதன், கட்சியை மக்களிடம் கொண்டு சென்றார். கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., கட்சியுடன் கூட்டணி அமைத்து, பா.ஜ., ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முக்கிய பங்காற்றினார்.

இந்நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு சாமிநாதன் மாற்றப்பட்டு, கட்சியின் மாநில தலைவராக செல்வகணபதி எம்.பி., நியமிக்கப்பட்டார். அதன்பின், சாமிநாதனுக்கு கட்சியில் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. மாறாக, அவர் நியமித்த நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக மாற்றப்பட்டனர். அவர்களுக்கு வேறு பதவிகள் எதுவும் வழங்காமல் புறக்கணிக்கப்பட்டனர். இதன் காரணமாக, கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியிருந்த சாமிநாதன், பா.ஜ.,வில் இருந்து விலகுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். இதை, பா.ஜ.,வில் புறக்கணிக்கப்பட்ட மேனாள் நிர்வாகிகள் பலரும் வரவேற்றுள்ளனர். அத்துடன், சாமிநாதனை தொடர்ந்து, மூத்த நிர்வாகிகள் பலரும் பா.ஜ.,வில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் அய்ந்து மாதங்களே உள்ள நிலையில், பா.ஜ.,வில் உள்ளவர்கள் கட்சியில் இருந்து விலகுவது, கட்சி நிர்வாகிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *