சென்னை, செப்.11- பட்டியலின மக்க ளுக்கும், சிறுபான்மை மக்களை ஒடுக்கும் நோக்கில் அரசமைப்பு சட்டத்தை பா.ஜனதாவினர் முடக்க நினைக்கிறார்கள் என்று செல்வப்பெருந்தகை பேசி உள்ளார்.
துறை கூட்டம்
தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை யின் மாநில செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட் டம் எஸ்.சி. துறை மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் தலைமை யில் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் ராஜேந்திர பால் கவுதம், அகில இந்திய காங்கிரஸ் தமிழ்நாடு பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு சட்ட மன்ற காங்கிரஸ் தலைவர் எஸ்.ராஜேஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
ஒருபோதம் அநீதி வெல்ல முடியாது
கூட்டத்தில் செல்வப்பெருந்தகை பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் பட்டியலின மக்களுக்கான சலுகைகள் அவர்களுக்கு போய் சேர்கிறது. ஆனால், பா.ஜனதா ஆட்சியில் அதை சரியாக நடைமுறைபடுத்தவில்லை. அம்பேத்கர் எழுதிய அரசமைப்பு சட்டத்தை நசுக்குவதற்கும், பொசுக்குவ தற்கும் நினைக்கிறார்கள். கடந்த 11 ஆண்டுகளாக பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் அரசமைப்பு சட்டத்தை முடக்க நினைக்கிறார்கள். இதை முடக்க விட்டுவிட்டால் முதல் பாதிப்பு பட்டி யலின மக்களுக்கும். சிறுபான்மை மக்களுக்கும் தான் ஏற்படும்.
நீதியை ஒருபோதும் அநீதி வெல்ல முடியாது. அநீதியை ஏதாவது ஒருநாள் நீதி வெல்லும். ராகுல் காந்தியை பிரதமராக உட்கார வைப்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
எஸ்.சி.துறைக்கு முன்னுரிமை
கிரிஷ் சோடங்கர் பேசும் போது, “தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் 21 ஆயிரம் கிராம கமிட்டிகள் அமைக்கப்பட்டு அனைத்தும் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு உள்ளது. இது கடந்த ஓர் ஆண்டாக நடைபெற்றுள்ள அமைதிப்புரட்சி ஆகும். இன்னும் 2 மாதங்களில் எஸ்.சி. துறை சார்பில் 10 ஆயிரம் கிராமக் கமிட்டிகள் தனியாக அமைக்க வேண்டும்” என்றார்.
கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியான பதவிகளில் எஸ்.சி. துறைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் தனித் தொகுதிகளை பெறும்போது எஸ்.சி. துறையினருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
