சென்னைப் பல்கலைக் கழகத்தில் சிறப்பானதோர் அறிவு விருந்து!

3 Min Read

 கவிஞர் கலி. பூங்குன்றன்

 

சென்னைப் பல்கலைக் கழகம் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் 1857இல் உருவான ஒன்று. இந்தியாவில் அப்ெபாழுது உருவாக்கப்பட்ட பல்கலைக் கழகங்கள் மூன்று. சென்னை, மும்பை, கொல்கத்தா பல்கலைக் கழகங்கள் அவை.

தமிழ்நாட்டின் தலைநகரமாம் சென்னையில் உள்ள அப்பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை என்ற ஒன்றை உருவாக்குவதற்குப் படாதபாடுபட வேண்டியிருந்தது.

ஆற்றலும், பெருமையும் மிக்க துணைவேந்தர் களைப் பெற்றது சென்னைப் பல்கலைக் கழகம். டாக்டர் எ.ஏல். முதலியார் கால் நூற்றாண்டைக் கடந்து துணைவேந்தராக இருந்து வரலாறு படைத்தார் (1942 முதல் 1969).

சுயமரியாதை இயக்கக் கொள்கையில் சூள் கொண்ட கல்வி நெறிக்காவலர் நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள் தொடர்ந்து இருமுறை துணை வேந்தராக – சமூக நீதிச் சுடராக ஒளி வீசினார்.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள் உலகம் தழுவிய அளவில் உயர் பதவிகளில் மிளிர்ந்தனர் – மிளிர்கின்றனர்.

தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கம், அவர்களின் கொள்கைகளான சமூகநீதி, பெண் விடுதலை, ஜாதி ஒழிப்பு, சுயமரியாதை எனும் பொருள்களில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.எச்.டி. பட்டம் பெற்றோர் எண்ணற்றோர்.

தந்தை பெரியார், அவர்தம் சிந்தனைகளின் தாக்கம் இப்பல்கலைக் கழகத்தில் மிக்குண்டு.

இப்பல்கலைக் கழகத்தில் கல்வி நெறிக் காவலர் நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள் 1979 ஏப்ரலில் ஆற்றிய பெரியார் அறக்கட்டளைச் சொற்பொழிவு ‘புரட்சியாளர் பெரியார்’ என்ற நூலாக வெளிவந்து மணம் வீசுகிறது.

அத்தகைய சென்னைப் பல்கலைக் கழகத்தில், அப்பல்கலைக் கழகமும் (Anna Centre For public Affair), திராவிட வரலாறு ஆய்வு மய்யமும் இணைந்து, இரு நாள் கருத்தரங்குகள், இத்திங்கள் 11,12 ஆகிய நாட்கள் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மற்றும் திராவிட இயக்கத்தின் மரபுச் சுவடுகள்பற்றி [A Centenary of Self Respect Periyar and the Legecy of the Dravidian Movement Commemorating 100 year’s (1925-2025)] பல்வேறு தலைப்புகளில் கற்றுத் துறை போன அறிஞர்கள், பேராசிரியர்கள் கருத்துரை வழங்க உள்ளனர்.

இது ஓர் அரிய அறிவு விருந்து – அரிய வாய்ப்பாகும்.

பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் கி. வீரமணி, மேனாள் ஒன்றிய அமைச்சரும், மக்களவை உறுப்பினருமான
ஆ. இராசா, தொல் பொருள் ஆய்வு நிபுணர்
ஆர். பாலகிருஷ்ணன் தமிழ்நாடு உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு முனைவர் கோவி. செழியன், வெளி மாநிலங்களைச் சேர்ந்த கல்வியாளர்கள், மேனாள் துணைவேந்தர்கள், மூத்த ஊடகவியலாளர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் என்று பல துறைப் பெரு மக்கள் பங்கேற்று கருத்துரை வழங்க உள்ளனர்.

இதுபோன்ற வாய்ப்புக் கிட்டுவது அரிதினும் அரிது. நமது மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் உருவப் படத்தினைத் திறந்து பகுத்தறிவு, சுயமரியாதை, பெண் விடுதலை, சமதர்மக் கோட்பாடுகள் என்னும் முதலீடை செய்து வந்துள்ள ஒரு சில நாட்களில், நமது சென்னைப் பல்கலைக் கழகத்தில் இப்படியொரு விலை மதிக்க முடியாத கருத்து  விருந்து கிடைப்பதை தட்டிக் கழிக்க முடியுமா? கழிக்கலாமா?

கட்சி எல்லைகளைக் கடந்த – அறிவுத் தாகம் உள்ளோர், ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கிற இருபால் மாணவர்கள் – பல நூல்களை ஒரே இடத்தில் இரண்டே நாட்களில் கற்கின்ற வாய்ப்பை நழுவ விடலாமா?

குறிப்பு நோட்டுகளுடன் வருக! விலை மதிப்பில்லா மாணிக்கமாகக் கொட்டும் அருவியில் நீராட வாரீர்! வாரீர்!

தவறவிட்ட பின் வருந்திப் பயனில்லை.

சரித்திரம் படைத்த சென்னைப் பல்கலைக் கழகம் புதியதோர் பொன்னேட்டைப் பொறிக்கிறது. அதில் நாமும் பங்கேற்று இருக்கிறோம் என்பதைப் பிற்காலத்தில் நினைத்து நினைத்து மகிழக் கூடிய மகத்தான நிகழ்ச்சி இது!

மாந்த வாரீர்! வாரீர்!!

சந்திப்போம் – சிந்திப்போம்!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *