புதுடில்லியைச் சேர்ந்த அஸ்வின் குமார். இவர் தொழில் முறை ஜோதிடரும் கூட சமீபகாலமாக தன்னிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்கள் கூட்டம் குறைந்து கொண்டே வருவது குறித்து பிரபலமான மற்றொரு ஜோதிடரிடம் பரிகாரம் கேட்டாராம்.
அதற்கு மற்றொரு பிரபல ஜோதிடர் உனக்கு தோஷம் உள்ளது, ஆகையால் தான் கூட்டம் உனக்குக் கூடவில்லை. நீ ஜோதிடம் பார்க்கவருபவர்களிடம் பிரபலமாகவேண்டும் அதற்கு எதையாவது புதுமையாகச் செய், இதுதான் பரிகாரம் என்று கூறியுள்ளார்.
இதனை அடுத்து ஜோதிடர் அஸ்வின் குமார் பலவிதமான நடவடிக்கையில் இறங்கினார். கடைசியில் இஸ்லாமியர்கள் பெயரில் குண்டு வைப்போம் என்று புரளி கிளப்பினால் தான் பிரபலமாகிவிடுவோம் என்று கூறி, பாகிஸ்தானில் உள்ள முலதான் நகரில் இருந்து மின்னஞ்சல் அனுப்புவதாக மும்பை காவல்துறைக்கு மிரட்டல் தகவல் விடுத்துள்ளார். மேலும் இதற்கு அய் எஸ் மற்றும் அல்கொய்தா பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்க உள்ளனர் என்றும், விநாயகர் சிலை கரைப்பிற்கு 34 வாகனங்களில் 400 கிலோ RDX வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், ‘லஷ்கர்-இ-ஜிஹாதி’ என்ற தாக்குதல் திட்டத்தின் பெயரில் 14 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை அடுத்து மும்பை 2 நாட்களாக உச்சபட்ச பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டது.
கடுமையான மழையிலும் கூட நகருக்குள் வரும் வாகனங்கள் கடுமையான பாதுகாப்பிற்கு உள்ளாக்கப்பட்டது. இந்த நிலையில் மின்னஞ்சல் அனுப்பிய அய்.பி. முகவரியை வைத்து அனுப்பிய வரைக் கண்டறிந்தனர்.
அவர் புதுடில்லிக்கு அருகே உள்ள நொய்டா பகுதியில் வசிக்கும் ஜோதிடர் என்று தெரியவந்தது. பிரபாஸ் என்ற பெயரில் அனுப்பியிருந்ததும் தெரியவந்தது. விசாரணையில் தான் பிரபலமாக இவ்வாறு எழுதியதாகவும், இதன் மூலம் தன்னுடைய ஜோதிடத்தொழில் கொடிகட்டிப் பறக்கும் என்பதால் இதைச் செய்ததாகக் கூறியுள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
எப்படி இருக்கிறது! ஜோதிடமே ஓர் ஏமாற்று வேலை. பித்தலாட்டம் – அறிவியலுக்குப் பொருந்தாத மூடக் குப்பையாகும்.
மெத்த படித்த மேதாவிகள்கூட அச்சத்தாலும், ஆசையாலும் ஜோதிட மூடநம்பிக்கைக்குப் பலியாகும் கூத்து நாட்டில் நடக்கத்தான் செய்கிறது.
காந்தியாருக்கு 125 வயது என்று பிரபல ஜோதிடர் கணித்தது உண்டே! என்ன நடந்தது? நவக்கிரகம் ஒன்று சேரப் போகிறது. உலகம் அழியப் போகிறது என்று கூக்குரல் போட்டார்களே, சரியான தமாஷாகத்தான் முடிந்தது.
ஜோதிடத்தில் நவக்கிரகம் என்கிறார்களே – அந்த நவக்கிரகத்தில் சூரியன் இடம் பெற்றது எப்படி? சூரியன் கிரகமல்ல – ஒரு நட்சத்திரம் என்று கூடத் தெரியாத மூடர்கள்தான் ஜோதிடம் சொல்கிறார்கள் என்றால், அதைவிட விஞ்ஞானம் படித்த அடி முட்டாள்களும் நம்புகிறார்களே!
நவக்கிரகத்தில் பூமிக்கு இடமில்லை; ஆனால் அதன் துணைக் கிரகமான சந்திரனுக்கு இடம் உண்டு. ராகு, கேது என்கிறார்களே, அது மாதிரி ஏதாவது உண்டா?
டில்லியைச் சேர்ந்த ஒரு ஜோதிடன் தன்னைப் பிரபலப்படுத்துவதற்காக மின்னஞ்சல் மூலம் காவல்துறைக்குக் குண்டு வைக்கப் போவதாகப் புரளியைக் கிளப்பினான்; கடைசியில் அவனே மாட்டிக் கொண்டு சிறைக்குள் கிடக்கிறானே – இதிலிருந்து தெரியவில்லையா ஜோதிடத்தின் யோக்கியதை? அதுவும் ஓர் இஸ்லாமியர் பெயரில் புரளியைக் கிளப்பினான் என்றால் – அதன் பின்னணியையும் புரிந்து கொள்ளலாம்.