மணி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி சார்பில் பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு!

13 Min Read

பள்ளிக்கூடம் ஓர் அறிவுச் சோலை – ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கக்கூடிய சிறப்பான ஓர் இடம்!
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் படிப்பதற்கு
இப்பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்!
மணி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி சார்பில் பெரியார் உலகத்திற்கு
நன்கொடை வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு!

ஆசிரியர் உரை

Contents

கபிஸ்தலம், செப்.10 பள்ளிக்கூடம் ஓர் அறிவுச் சோலை. ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கக்கூடிய சிறப்பான ஓர் இடம். நம்முடைய பல்கலைக் கழகமான பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திலிருந்து பேராசிரியர்களை இங்கே வரவழைத்து, இங்குள்ள மாணவர்களிடையே வகுப்பு எடுப்பதற்கான ஆயத்தங்கள் செய்யலாம். நீங்களும், சுற்றுலாவுக்குச் செல்வதுபோன்று, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்குச் சென்று பார்க்கலாம். அங்கே படிப்பதற்கு, உங்களுக்கெல்லாம் முன்னுரிமை கொடுக்கப்படும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

மணி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை!

கடந்த 8.9.2025 அன்று தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலத்தில், பெரியார் கல்வி சமூகப் பணி அறக்கட்டளையின்கீழ் இயங்கிவரும் மணி மெட்ரிக்கு லேசன் மேல்நிலைப் பள்ளியின் அறக்கட்டளைத் தலைவர் ஆ.ஜெயராமன் – பள்ளித் தாளாளர் நா.குண சேகரன், நிதி அறங்காவலர் சா.கர்ணன் ஆகியோரால் “பெரியார் உலக’’த்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களிடையே திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத்து ரையாற்றினார்.

அவரது கருத்துரை வருமாறு:

இனிய கல்விக் கூடத்தினைசிறப்பாக பல ஆண்டுகளாக இந்தப் பகுதியில் நடத்தி, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள், கிராமத்தில் இருக்கக்கூடிய மக்கள், அதிலும் சரி பகுதி கல்வி கற்பவர்களாகப் பெண்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்குச் சிறப்பாக நடத்தி வரக்கூடிய மணி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி யின் அறக்கட்டளை தலைவர் ஜெயராமன் அவர்களே, பள்ளித் தாளாளர் குணசேகரன் அவர்களே, ஆடிட்டர் சண்முகம் அவர்களே, பள்ளி அறங்காவலர் கலியமூர்த்தி அவர்களே, பள்ளி முதல்வர் முருகானந்தம் அவர்களே, அறங்காவலர் பொம்மி கணேசன் அவர்களே, அருமை ஆசிரியப் பெருமக்களே, மாணவச் செல்வங்களே, கழகப் பொறுப்பாளர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துகளையும், நன்றியையும் முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

21 ஆம் நூற்றாண்டான இந்த நூற்றாண்டு, பெரியாருடைய நூற்றாண்டு!

தந்தை பெரியார் அவர்களுடைய தத்துவங்கள், உல களாவிய தத்துவங்கள் என்பதைத் தெளிவாக எடுத்துச் சொன்னோம். 30 ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக ஒரு கருத்தைச் சொன்னோம். 21 ஆம் நூற்றாண்டான இந்த நூற்றாண்டு, பெரியாருடைய நூற்றாண்டு என்று மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னோம்.

அறிவியல், சமூகவியல் வளர்ச்சியடைந்திருக்கிறது. மாணவச் செல்வங்களே உங்களுக்கு சில செய்திகளைச் சொல்லவேண்டும்.

தளர்ச்சியடையவில்லை, வளர்ச்சியடைந்திருக்கிறது!

இந்தப் பள்ளி கொள்கை உள்ளத்தோடு நடக்கக்கூடிய ஓர் அற்புதமான பள்ளியாகும். அதற்காக நிர்வாகிகளைப் பாராட்டவேண்டும். இங்கே நான் வருவது முதல் முறையல்ல; பலமுறை வந்திருக்கின்றேன். ஒவ்வொரு முறையும் பார்க்கும்போது வளர்ச்சிதான் – தளர்ச்சியடையவில்லை, வளர்ச்சியடைந்திருக்கிறது. இருபால் மாணவர்களும் 50 சதவிகிதம் உள்ளனர். அன்றைக்கு இருந்த பல தோழர்கள், நூற்றாண்டு காண வேண்டிய  அய்யா ராசகிரியார் அவர்கள்,  இன்றைக்கு நம்மிடையே இல்லை.

ஆனால், அவருடைய உழைப்பு என்பது மிகச் சிறப்பானதாகும். அவரைப் போல எண்ணற்ற தோழர்கள் – பாபநாசம் தோழர்கள், கபிஸ்தலம் தோழர்கள் எல்லோரும் சாதாரணமானவர்கள் அல்ல.

குடந்தை வட்டமே மிக நல்ல அளவிற்குச் சிறப்பாக செயல்படுகிறது. ஆகவேதான், நம்முடைய இன எதிரிகள், கொள்கை எதிரிகள் அதிகமாக இந்தப் பகுதியை குறி வைத்துச் செயல்படுகிறார்கள்.

ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கக்கூடிய சிறப்பான ஓர் இடம்!

ஆகவே, இப்படிப்பட்டச் சூழலில், இந்தப் பள்ளிக்கூடம் ஓர் அறிவுச் சோலை. ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கக்கூடிய சிறப்பான ஓர் இடம்.

தந்தை பெரியார் அவர்கள் ஒரு சமூக விஞ்ஞானி.  ‘இனிவரும் உலகத்தை’ப்பற்றி பெரியார் சொன்னதை, மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் படிக்கவேண்டும்.

சமூக விஞ்ஞானத்தினால்தான், நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில், தந்தை பெரியாருடைய படத்தைத் திறந்து வைத்துப் பெருமைப்படுத்தியிருக்கிறார்.

மிகப்பெரிய அளவில் மக்களால் பாராட்டப்படுகின்றன!

உலகத்தில் இரண்டு பல்கலைக் கழகங்கள்தான் மிகப்பெரிய அளவில் மக்களால் பாராட்டப்படுகின்றன. ஒன்று, லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகம். இன்னொன்று கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகம். பண்டிட் ஜவகர்லால் நேரு போன்றவர்கள் படித்த பல்கலைக் கழகம்.

இரண்டு பல்கலைக் கழகங்களுக்கும் நான் சென்றி ருக்கின்றேன். பல்கலைக் கழகங்கள் என்றால், நம்மூரில் இருப்பதுபோன்று பிரமாண்டமான கட்டடங்கள் அந்த வளாகத்திற்குள் இருக்கும் என்று நினைத்தேன்.

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்குள் சென்றால், நம்மூரில்   சொல்வதைப்போன்று, ஒரு சிற்றோடை –  தேம்ஸ் நதிக் கரையில் அமைந்துள்ளது.

அதேபோன்று, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகம், பல கல்லூரிகள் இணைந்ததாகும்.

மானமிகு மாண்புமிகு முதலமைச்சர்

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

நம்முடைய மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் உரையாற்றும்போது, “நான் இங்கே வருவதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பெரியாருடைய நூற்றாண்டு விழாவிற்காக இங்கே வந்திருக்கின்றார்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதேபோல், அய்ரோப்பாவிலும் சுயமரியாதை இயக்கம் மிகப்பெரிய அளவிற்கு இருக்கிறது.

‘‘பெரியார் உலக மயம்;
உலகம் பெரியார் மயம்!’’

இன்றைக்குப் ‘‘பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்’’ என்று ஆகி இருக்கிறது.

பெரியாருடைய கருத்துகளை இன்றைய இளைஞர்களுக்கு, மாணவச் செல்வங்களுக்குத் தெரி யப்படுத்தவேண்டும்.

ஒரு சிறிய உதாரணம், பரிசோதனைக் குழாய் குழந்தை பிறக்கும் என்று சொன்னார். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, யாரும் நினைத்துப் பார்க்க முடியாத கைப்பேசி, தற்போது எல்லோருடைய கைகளிலும் இருக்கின்றது. தந்திச் சாதனம் கையிலும், பையிலும் இருக்கும் என்று சொன்னார் பெரியார் பல ஆண்டுகளுக்கு முன்பு.

நம்முடைய பள்ளிக்கூடங்களில், புதிதாக வந்துள்ள செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? என்பதைப்பற்றி அறிந்துகொள்வதற்காக சிறப்பு வகுப்பு களை நடத்தவேண்டும். மாணவர்கள் அதைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டும்.

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் இப்பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை!

நம்முடைய பல்கலைக் கழகமான பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகத்திலிருந்து பேராசிரியர்களை இங்கே வரவழைத்து, இங்குள்ள மாணவர்களிடையே வகுப்பு எடுப்பதற்கான ஆயத்தங்கள் செய்யலாம். நீங்களும், சுற்றுலாவுக்குச் செல்வதுபோன்று, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்குச் சென்று பார்க்கலாம். அங்கே படிப்பதற்கு, உங்களுக்கெல்லாம் முன்னுரிமை கொடுக்கப்படும் என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

அறிவியலை சொல்லிக் கொடுக்கின்ற இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம்!

ஆகவே, அறிவியலை சொல்லிக் கொடுக்கின்ற இயக்கம்தான் இந்த இயக்கம். இங்கே மூடநம்பிக்கை களுக்கு இடம் கிடையாது.

அதற்கொரு உதாரணம், கார்கள்தான். இப்போது தயாரிக்கப்படுகின்ற கார்களில் என்ன புதுமை இருக்கிறது என்பதை மாணவச் செல்வங்களே யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்.

ஒரு காரைப் பார்த்ததும், ‘‘இது என்னங்க, பெட்ரோ லில் ஓடுக்கின்ற காரா? டீசலில் ஓடுகின்ற காரா?’’ என்று கேட்கிறோம். அதுபோல, இப்போது என்ன வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது?

(‘‘எலக்ட்ரிக் கார் வந்திருக்கிறது’’ என்று ஒரு மாணவர் சொன்னார்).

சரியாகச் சொன்னீர்கள். எலக்ட்ரிக் கார் இப்போது வந்திருக்கிறது.

90 ஆண்டுகளுக்கு முன்…

90 ஆண்டுகளுக்கு முன், மின்சாரத்தில் கார் ஓடும் என்று சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள்.

நான், ஆஸ்திரேலியாவிற்குச் சென்றிருந்தபோது, அங்கே இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், எலக்ட்ரிக் காரில் என்னை அமர வைத்து, அழைத்துச் சென்றார்.  தானியங்கி முறையில் அக்கார் இயங்கிக் கொண்டிருந்தது. எங்கே திரும்ப வேண்டுமோ, அங்கே திரும்புகிறது. எங்கே நிற்கவேண்டுமோ, அங்கே நிற்கிறது. போக்குவரத்து சிக்னலில், நிற்கிறது. சிக்னலில் விளக்கு எரிந்தவுடன், போகிறது. காருக்கு முன்பும், பின்பும் சரியான இடைவெளியில் அந்தக் கார் சென்றது.

ஆச்சரியப்பட்டு, அந்தத் தோழரிடம் நான் இதுபற்றி கேட்டேன்.

இதுதானுங்க எலக்ட்ரிக் கார் என்றார்.

எங்களுக்கு ஒரு வேலையும் இல்லை என்று அவர் என்னைத் திரும்பிப் பார்த்துச் சொன்னார்.

அதைப் பார்த்து எனக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது. ஸ்டீரியங்கைப் பிடிக்காமல் இருக்கிறாரே என்று.

தானாகவே கியர் மாற்றிக் கொள்கிறது. முன்னால் வண்டி நின்றால், உடனே அதுவே தானாக நிற்கிறது.

காரைச் செலுத்துகிறவர் எதாவது தவறு செய்தால், இன்டிகேட் சத்தம் எழுப்புகிறது.

‘‘என்னங்க சத்தம் வருகிறது?’’ என்று கேட்டேன். இடைவெளியில் கொஞ்சம் முன்பாக நாம் சென்று விட்டோம். அதைச் சரி செய்யுங்கள் என்று நமக்கு இன்டிகேட் செய்கிறது என்று சொல்லி, காரை ஓரடிக்குப் பின் நிறுத்தினார்.

பெரியாருடைய பட்டறிவு, பகுத்தறிவு, சிந்தனை!

இதை, பள்ளிக்கூடத்திற்கே சரி வர செல்லாத பெரியார் சொன்னார் என்றால், அதுதான் அவருடைய பட்டறிவு, பகுத்தறிவு, சிந்தனை.

அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்களின் அறிவு காலத்தை வென்ற அறிவாகும்.

அதனால்தான், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் அவர் படம் திறந்து வைக்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவிற்கு தோழர்களோடு சில மாதங்களுக்கு முன்பு நான் சென்றேன். அங்கே உரையாற்றும்போது சொன்னேன். இப்போதுதான் நாங்கள் ஆஸ்திரேலியாவிற்கு வருகின்றோம். ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் வந்திருக்கிறார் என்றேன்.

எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம்!

இந்தப் புத்தகத்தைப் பாருங்கள், பெரியாரைப்பற்றி ஆய்வு செய்திருக்கிறார்கள்.

நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் கேன்பரா

ஆஸ்திரேலியா தலைநகரில் நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் கேன்பரா உள்ளது. அந்தப் பல்கலைக் கழகத்தில் பெரியாரைப்பற்றி ஆய்வு செய்திருக்கிறார்கள்.

ஆகவேதான், பெரியார் உலக மயம்.

சுமார் 40 ஏக்கர் பரப்பளவில்…
சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பில்…

அப்படிப்பட்ட பெரியாரைப்பற்றி, உங்களைப் போன்ற பள்ளி மாணவர்கள் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், திருச்சி சிறுகனூரில், சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் ஆய்வு அரங்கங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

பெரியாருக்கு முன் சமூகம் எப்படி இருந்தது?

பெரியாருக்குப் பின் சமூக மாற்றம் எப்படி ஏற்பட்டது? அது எப்படி நடந்தது? என்பதைப்பற்றி விளக்கங்கள். சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பில் அப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

உலகத்தில் உள்ள அனைவரும் அங்கு வந்து பார்க்கக்கூடிய நிலை வரும். அதற்கான பணியை செய்து வருகிறோம். அதற்காக நம்முடைய தோழர்கள், சிறப்பான வகையில் பெரியார் உலகத்திற்கான நிதியை அளித்து வருகிறார்கள்.

‘‘இது ஒரு நவீன பகுத்தறிவு மூடநம்பிக்கை!’’

நான், இல்லத்திறப்பு விழாவிற்காக திருப்பாலைத்துறைக்கு வந்தேன். அப்படியே இங்கேயும் வந்தேன். பெரியார் உலகத்திற்காக நிதி கொடுப்பதற்காக 6 மாதமாக காத்துக் கொண்டிருக்கிறார்.

நான் வேடிக்கையாக சொன்னேன், ‘‘இது ஒரு நவீன பகுத்தறிவு மூடநம்பிக்கை’’ என்று.

நானே வந்துதான் அந்த நிதியைப் பெறவேண்டும் என்பது. நம்முடைய தோழர்களுடைய பாசம் அப்படிப்பட்டது.

பேராசிரியர் என்.வி.ராமசாமி

சிதம்பரம் பல்கலைக் கழகத்தில், பி.ஏ. ஹானர்ஸ் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தேன். எங்களுடைய பேராசிரியராக இருந்தவர் என்.வி.ராமசாமி, மிகவும் கண்டிப்பானவர். நூறு வயதிற்குமேல் வாழ்ந்தவர் அவர்.

இப்படித்தான் அவர், புதிய வீட்டைக் கட்டி முடித்துவிட்டு, பெரியார் அய்யா வந்துதான் திறக்கவேண்டும் என்று சொல்லி மூன்று மாதங்களுக்குமேல் காத்திருந்தார். மின்சார இணைப்புகள் எல்லாம் வாங்கி வைத்திருந்தார். அதைக்கூட அய்யா அவர்கள் வந்துதான் சுவிட்ச் போடவேண்டும் என்று காத்திருந்தார்.

நீங்கள் வந்துதான் ‘சுவிட்ச் ஆன்’ செய்யவேண்டும் என்று காத்திருக்கிறோம்!

அய்யா பெரியார் அவர்கள் அந்த இல்லத்திற்கு வரும்போது,  மெழுகுவத்திதான் எரிந்து கொண்டிருந்தது. என்னங்க, மின்சாரம் இல்லையா? என்று கேட்டார்.

‘‘இல்லீங்க அய்யா, நீங்கள் வந்துதான் சுவிட்ச் ஆன் செய்யவேண்டும் என்று காத்திருக்கிறோம்; அதுவரையில் மெழுகுவத்தி வெளிச்சத்தைத்தான் நாங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்’’ என்றார்.

ஆடிட்டர் சண்முகம்!

அதுபோன்று, நம்முடைய தோழர்கள் பாசத்தோடு இருக்கக்கூடியவர்கள். ஆடிட்டர் சண்முகம் அவர்கள், எங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டி. நம்முடைய அறக்கட்டளையிலும் உறுப்பினர் அவர். முக்கிய ஆலோசனைகள் குறித்து கலந்து பேசுபவர்களில் சண்முகமும் ஒருவர்.

ஏனென்றால், எல்லாவற்றையும்பற்றி நிதானமாக சண்முகம் சொல்வார். சண்முகம் குடும்பம் வேறு, எங்களுடைய குடும்பம் வேறு அல்ல. கலைமணி, முழுக்க முழுக்க எங்களால் வளர்க்கப்பட்டவர். அவரும் ஆடிட்டராக ஆகிவிட்டார்.

அவர்களுடைய சார்பாக இரண்டு லட்சம் ரூபாயும், மணி மெட்ரிகுலேசன் பள்ளி சார்பாக ஒரு லட்சம் ரூபாய்; பாபநாசம் பெனிஃபிட் பண்ட் சார்பாக ஒரு லட்சம் ரூபாய்; மணி மெட்ரிகுலேசன் முதல்வர் முருகானந்தம் ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார்கள்.

நாங்கள் விதை நெல்லை எடுத்து சமைக்கமாட்டோம்!

இப்படி எல்லோரும் நிதியளித்திருக்கிறார்கள். நிதி சேர்கிறது என்பது முக்கியமல்ல. சில பேர் கேட்கிறார்கள், ‘‘பெரியாரிடம் இல்லாத பணமா?’’ என்று.

உண்மைதான். ஆனால், நாங்கள் விதை நெல்லை எடுத்து சமைக்கமாட்டோம்.

விவசாயிகளுக்குத் தெரியும், விதை நெல்லை எடுத்து சமைக்கமாட்டார்கள் என்று.

நம்முடைய தாய்மார்கள், சகோதரிகள் எல்லாம் இங்கே இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இந்த உணர்வு படைத்தவர்கள்தான்.

உங்களையெல்லாம் பார்க்கின்றபொழுது எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்படுகிறது.

என்னுடைய மருத்துவர் சொன்னார், ‘‘உங்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்து நான்கு வாரங்கள்தான் ஆகின்றது. இப்போது ஏன் வெளியூர் பயணம் மேற்கொள்கிறீர்கள்?’’ என்று.

என் உடல்நலத்திற்குத்
தேவையான மருந்து!

நான் சொன்னேன், ‘‘மருந்து அங்கேதான் இருக்கு. அதுதான் என் உடல்நலத்திற்கு மிகவும் தேவை’’ என்றேன்.

உங்களுக்கெல்லாம் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேபோன்று, பட்டுக்கோட்டை அழகிரி அவர்களுடைய பெயரில் உள்ள பள்ளியில், ஒரு லட்சம் ரூபாய் நிதி கொடுத்திருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் என்னுடைய பெயரே ‘‘5 லட்சம்’’ என்று வைத்திருந்தார்கள். உங்கள் எல்லோருக்கும் அது தெரியும்; அதைப்பற்றிச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

‘‘இதோ வர்றார் பாருங்க, 5 லட்சம்’’ என்பார்கள்.

ரூ.5 லட்சத்திற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு!

அதேபோன்றுதான், அண்ணா அவர்கள், ரூ.5 லட்சத்திற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு.

‘‘அய்யோ 5 லட்சம் ரூபாயை விட்டுவிட்டுப் போகிறேமே, பெரியாரிடமிருந்து அதை வசூல் செய்யவேண்டும்’’ என்று தி.மு.க. பிரிந்தபோது சிலர் சொன்னார்கள்.

அண்ணா சொன்னார், ‘‘பெரியாரிடம் இருந்தால், அந்தப் பணம் எப்பொழுதுமே பத்திரமாக இருக்கும். மற்றவர்களிடம் இருந்தால்தான் நாம் கவலைப்படவேண்டும்’’ என்றார்.

ஒரு வாரத்தில், சிலை திறப்பதற்கான நிதியை வசூல் செய்தோம்!

கடலூரில், பெரியார்மீது செருப்பு வீசிய இடத்தில், பெரியாருக்கு சிலை திறந்தோம். மறைந்த நீதிபதி ஜனார்த்தனம், அப்போது அவர் வழக்குரைஞர்; நம்முடைய அறக்கட்டளை உறுப்பினர் சுப்பராயன் அவர்கள். அவர் ஒரு வியாபாரி.  கழகப்  பொருளாளராக இருந்த கள்ளக்குறிச்சி கோ.சாமிதுரை, சுற்று வட்டாரத்தில் அவர்களுக்கு நிறைய தெரிந்தவர்கள் இருந்தார்கள்.

சுப்பராயன்தான், கார் ஓட்டுவர். ஒரு வாரத்தில், சிலை திறப்பதற்கான நிதியை வசூல் செய்தோம். இதை ஏன் சொல்கிறேன் என்றால், மக்களுடைய ஆதரவு எப்போதும் உண்டு என்பதற்காகத்தான்.

நான் வேடிக்கையாக சொல்வேன், ‘‘மதிய சாப்பாடு, ஒன்றரை லட்சம் ரூபாய் இல்லாமல் சாப்பிட முடியாது’’ என்று.

நீங்கள் கொடுக்கின்ற சாப்பாட்டைவிட, 5 லட்சம் ரூபாயோடு என்னை அனுப்புகிறீர்கள். அதற்காக நன்றி, மகிழ்ச்சி!

மாணவச் செல்வங்கள் சிறப்பாகப் படிக்கவேண்டும்.

ஒரு புதிய திட்டத்தைச் சொல்கிறேன்.

‘‘இதோ பெரியாரில் பெரியார்!’’

திருவண்ணாமலை மாநாட்டில், பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் பேசிய உரையை, ‘‘இதோ பெரியாரில் பெரியார்’’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டு இருக்கின்றோம்.

மாநிலம் தழுவிய அளவில் போட்டிகள்!

பெரியாருடைய பெருமைகளை மக்கள் தெரிந்து கொள்வதற்காக, மாணவர்கள் தெரிந்துகொள்வதற்காக, மாநிலம் தழுவிய அளவில் ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்திருக்கின்றோம். அந்தப் போட்டியில், மாணவர்கள் மட்டும்தான் கலந்துகொள்ளவேண்டும். இதேபோன்று இன்னொரு போட்டியில் ஆசிரியர்கள் மட்டும்தான் கலந்துகொள்ளவேண்டும்.

அந்தப் போட்டிகளுக்காக ‘‘இதோ பெரியாரில் பெரியார்’’ புத்தகம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். 20 நாள்கள் கால அவகாசம் கொடுக்கின்றோம். அந்தப் புத்தகத்திலிருந்து 10 கேள்விகள் கேட்கப்படும். அய்ந்து கேள்விகளுக்குப் பதில்  எழுதினால் போதும்.

உலகமே தெரிந்துகொண்டிருக்கும்போது, உள்ளூர் பிள்ளைகள் தெரிந்துகொள்ளவேண்டும்!

பதில் எழுதியவர்களுக்குப் பரிசு கொடுக்கப்படும். மாநில அளவில் உள்ள இளைய தலைமுறையினர் பெரியாரைத் தெரிந்துகொள்ளவேண்டும். ஏனென்றால், உலகமே தெரிந்துகொண்டிருக்கும்போது, உள்ளூர் பிள்ளைகள் தெரிந்துகொள்ளவேண்டும் அல்லவா!

அதற்காகத்தான் அந்தப் போட்டிகளை ஏற்பாடு செய்திருக்கின்றோம். அதற்கு, நம்முடைய பொறுப்பாளர்கள், பள்ளித் தோழர்கள் ஒத்துழைப்புக் கொடுக்கவேண்டும்.

முதலில், பட்டுக்கோட்டையில் உள்ள பள்ளியில் உரையாற்றும்போது சொன்னேன். அடுத்த அறிவிப்பு ‘விடுதலை’யில் அறிக்கை வரும்.

போட்டியில் கலந்துகொள்வதற்கு கட்டணம் ஏதும் கிடையாது!

‘‘இதோ பெரியாரில் பெரியார்’’ புத்தகத்தைப் படியுங்கள்.  அதற்குப் பிறகு நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ளலாம். போட்டியில் கலந்துகொள்வதற்கு கட்டணம் ஏதும் கிடையாது.

மணி மெட்ரிகுலேசன் பள்ளி, நன்றாக வளர்ச்சி பெற்று இருக்கிறது. ஒவ்வொரு முறையும் நான் வரும்போது, ‘‘வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி’’ என்று வளர்ச்சியை நோக்கிப் போகட்டும். மேலும் இந்தப் பள்ளி வளர்ச்சியடையவேண்டும் என்று கேட்டு, நம்முடைய பள்ளி மாணவர்கள், இங்கே பள்ளிப் படிப்பை முடித்தவுடன், நம்முடைய பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் சேருகிறார்கள் என்றால், முதல் முன்னுரிமை இதுபோன்ற பள்ளி மாணவர்களுக்குத்தான் உண்டு.

ஏனென்றால், பெரியார் கல்வி நிறுவனங்களில் இந்தப் பள்ளியும் ஒன்று என்றுதான் நாங்கள் கருதுகி றோம்.

வாய்ப்பளித்த உங்கள் எல்லோருக்கும் நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்கொடை அளித்தவர்களுக்கும் நன்றி!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத்துரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *