போபால், செப்.9 மத்தியப் பிரதேசத்தில் தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டி ருந்தவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் புகார்
மத்தியப் பிரதேச மாநி லத்தைச் சேர்ந்த சோஹன் சிங் மீது பாலியல் வன்கொடுமை புகார் எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் கடந்த 2005-ஆம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், சில குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரம் இல்லை எனக் கூறி ஆயுள் தண்டனையை 7 ஆண்டு களாக குறைத்து கடந்த 2017-இல் உத்தரவிட்டது. ஆனால் 8 ஆண்டுகள் கழித்து கடந்த ஜூன் மாதம்தான் சோஹன் சிங் விடுதலை செய்யப்பட்டார்
ரூ.25 லட்சம் இழப்பீடு
இந்நிலையில், தண்டனை காலத்துக்கும் கூடுதலாக சிறையில் அடைத்து வைத் திருந்ததாகக் கூறி சோஹன் சிங் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் கே.வி.விஸ்வநாதன் அமர்வு விசாரித்தது. இந்த மனு நேற்று (8.9.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது, தண்டனைக் காலம் முடிந்த பிறகும் சோஹன் சிங்கை விடுதலை செய்யாதது அடிப்படை உரிமையை மீறும் செயல் என கண்டனம் தெரிவித்தனர்.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக் குரைஞர், சோஹன் சிங் அவ்வப்போது ஜாமீனில் வெளியில் வந்த காலத்தை கழித்ததால் 4.7 ஆண்டுகள் மட்டுமே கூடுதல் தண்டனை அனுபவித்துள்ளார் என தெரிவித்தார்.
வழக்கின் தீர்ப்பில் சோஹன் சிங்குக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மாநிலத்தில் இதுபோல தண்டனைக் காலம் முடிந்தும் யாராவது விடுதலை செய்யப்படாமல் இருக்கிறார்களா என விசாரணை நடத்துமாறு மத்தியப் பிரதேச சட்ட சேவைகள் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.