சென்னை செப்.9- கூட்டணிக் கட்சிகளை பிளவு படுத்தி, கூறு போடுவதுதான் பாஜகவின் வழக்கம் என்று தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
கூறுபோடும் பணி
சென்னையில் நேற்று (8-9-2025) அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைப்போம் என்று பேசியிருக்கிறார். 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடந்தது. 4 ஆண்டுகள் இவர் முதலமைச்சராக இருந்தார். அப்போது ஏன் வாய் திறக்கவில்லை. இவர் செய்வது சந்தர்ப்பவாத அரசியல். முத்துராமலிங்க தேவர் மீது எந்த பற்றும் பழனிசாமிக்கு கிடையாது.
செங்கோட்டையன் விவகாரம் அவர்களுடைய உட்கட்சி பிரச்சினை. பாஜக எங்கெல்லாம் கூட்டணி வைக்கிறார்களோ அந்தக் கட்சியை பிளவு படுத்தி, கூறு போடுவது தான் வழக்கம். மகாராஷ் டிராவில் சிவசேனா கட்சியில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவை பிரித்தது போல பாஜக எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் கட்சியை பிளவுபடுத்தி கூறு போடும் பணியை செய்து வருகிறது. இவ்வாறு கூறினார். முன்னதாக அகில இந்திய காங்கிரஸ் ஊடகத் துறை தலைவர் பவன் கேரா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே உடை என மக்கள் மீது திணிக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வாக்குரிமையை அரசியல் சாசனம் வழங்கியுள்ளது. அந்த உரிமையை கூட கொடுக்காமல் வாக்கு திருட்டில் தேர்தல் ஆணையமும், பாஜகவும் ஈடுபடுகின்றன.
ஒவ்வொரு மாநிலத்தி லும் கடைக்கோடி நிலையி லிருந்து காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தி வருகிறோம். இளைஞர்கள் அதிக அளவில் கட்சியில் சேர்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் காங்கிரஸ் வலிமை பெற்று வருகிறது. கருநாடகா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் வலிமையாக உள்ளது. கேரளா வில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வலுவாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பொறியியல் பட்டதாரிகளுக்கு
தொழில் பழகுநர் பயிற்சி
சென்னை, செப்.9- தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது: ஒன்றிய அரசின் தொழில் பழகுநர் பயிற்சி வாரியத்தின் தென்மண்டல அலுவலகத்துடன் இணைந்து மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் பொறியியல் பட்டதாரிகளுக்கும் பொறியியல் டிப்ளமோதாரர்களுக்கும் ஓராண்டு கால தொழில்பழகுநர் பயிற்சி (அப்ரண்டீஸ்) அளிக்கப்பட உள்ளது. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் அல்லது ஆட்டோமொபைல் படித்திருக்க வேண்டும். கடந்த 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் படித் தவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரி https://nats.education.gov.in விண்ணப்பிக்க கடைசி நாள் அக். 16ஆம் தேதி ஆகும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் பழகுநர் பயிற்சி பெறுவோருக்கு மாதம் தோறும் ரூ.18 ஆயிரம் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. பயிற்சியை நிறைவு செய்தவுடன் தொழில் பழகுநர் பயிற்சி வாரியத்தின் சான்றிதழ் பெறலாம். தொழில் பழகுநர் சான்றிதழ் சில அரசு பணிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சிலவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது