பி.ஜே.பி கூட்டணிக்குள் நடைபெறும் நிகழ்வுகள் வேதனை அளிக்கிறது புலம்புகிறார் நயினார் நாகேந்திரன்

2 Min Read

திருநெல்வேலி செப்.9-  “தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் வெளியேற நான்தான் காரணம் என கூறுவது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை. தற்போது கூட்டணிக்குள் நடைபெறும் நிகழ்வுகள் எனக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

பேட்டி

திருநெல்வேலியில் நேற்று (8.9.2025) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:  கடந்த 2001இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் டிடிவி தினகரன் முக்கிய பங்கு வகித்தார். என்னை போன்றவர்கள உயர் நிலைக்கு வர காரணமாக இருந்தவர். எனக்கு அவருடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

அதிமுகவில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தேன். தற்போது அமித் ஷா வழிகாட்டுதலின்படி நடந்து வருகிறோம். மாநில தலைவராக செயல்பட்டு வருகிறேன். பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக நான் அறிவிக்கவில்லை. ஒன்றிய உள்துறை அமைச்சர அமித் ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.

திருநெல்வேலியில் நடைபெற்ற பூத் முகவர்கள் மாநாட்டில் கூட மேனாள் தலைவர் அண்ணாமலை, அமித் ஷாவை வைத்துக்கொண்டு பழனிசாமியை முதலமைச்சராக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்று பேசினார்.  நாடாளுமன்ற தேர்தலில் எங்களுடன் கூட்டணியில் இருந்தவர்கள் வரும் சட்டப் பேரவை தேர்தலிலும் கூட்டணியில் இருப்பார்கள் என்று தினகரனிடம் கூறியிருக்கிறேன். பலமுறை அவரிடம் நேரிலும் தொலைப்பேசியிலும் பேசி இருக்கிறேன். அப்போது  அவர் வெளியேறுவது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இப்போது அவர் கூட்டணியில் இல்லை என்று கூறியிருக்கிறார்.

மன வேதனை

அதிமுகவுக்கு 30 சதவீதத்துக்கும் அதிகமான வாக்கு வங்கி இருக்கிறது. இருந்தபோதிலும் கூட்டணியில் சிறிய கட்சி, பெரிய கட்சி என்பது முக்கியமல்ல. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு நான்தான் காரணம் என்று டிடிவி தினகரன் கூறுவது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை. எனக்கு விளங்கவில்லை. அதிமுக கட்சியில் பிளவுபட்டிருக்கும் தலைவர்கள் அனைவரும் இணைய வேண்டும் என நானும் ஆரம்ப காலத்திலிருந்து கூறி வருகிறேன். எல்லா தலைவர்களிடமும் இது குறித்து பேசியிருக்கிறேன்.செங்கோட்டையனை எங்கள் கட்சிக்கு அழைக்க முடியாது. நாங்கள் அதிமுக கூட்டணியில் இருக்கிறோம். அவர்கள் கட்சி விவகாரத்தில் தலையிட்டு செங்கோட்டையனை கட்சியில் சேர்க்க முடியாது. செங்கோட்டையனை நானும் தொடர்பு கொள்ளவில்லை. அவரும் என்னை தொடர்பு கொண்டு பேசவில்லை.

முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க தமிழ்நாடு பாஜகவும் வலியுறுத்தும். தற்போது சுதந்திரப் போராட்ட வீரர்களை சாதிய தலைவர்களாக மாற்றி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் இதுபோன்ற சூழல் ஏற்படுகிறது. அதனை தவிர்க்கலாம். எனக்கு பழனிசாமி, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் நண்பர்கள்தான். டிடிவி தினகரன் எனக்கு நெருங்கிய நண்பர். தேசிய ஜனநாயக கூட்டணி வரும் சட்டப் பேரவை தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறும். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகுவதும், தற்போது நடைபெறும் நிகழ்வுகளும் எனக்கும் மன வருத்தம் தான்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் நடைபெறும் நிகழ்வுகள் எனக்கு மன வேதனையளிக்கிறது. வரும்  சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *