சுயமரியாதைத் திருமணம் என்பது, சமூகத்தை வாழ வைப்பது – சமூகத்தை ஒற்றுமைப்படுத்துவது!

12 Min Read

பள்ளிக்கூடத்திற்கே சரிவர செல்லாத ஒருவர், பகுத்தறிவுப் பகலவனாகி, இன்றைக்கு எல்லோருக்கும் கல்வி அறிவை ஊட்டக்கூடிய ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்திற்குச் சென்றிருப்பதற்குக் காரணம் என்ன?
சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைக் குடும்பம் குடும்பமாகப் பின்பற்றி வருவதுதான்!

பட்டுக்கோட்டை, செப்.9  பள்ளிக்கூடத்திற்கே சரிவர செல்லாத ஒருவர், பகுத்தறிவுப் பகலவனாகி, இன்றைக்கு எல்லோருக்கும் கல்வி அறிவை ஊட்டக்கூடிய ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்திற்குச் சென்றிருக்கின்றார் என்றால், இந்தக் கொள்கை எந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்கின்றது என்பதை நீங்கள் எல்லோரும் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும். மேலும் பல வெற்றிகளைப் பெறக்கூடிய வாய்ப்புகளைப் பெற்றிருக்கின்றோம். காரணம் என்ன? இந்தக் கொள்கைகளைக் குடும்பம் குடும்பமாகப் பின்பற்றி வருவதுதான். சுயமரியாதைத் திருமணம் என்பது, சமூகத்தை வாழ வைப்பது – சமூகத்தை ஒற்றுமைப்படுத்துவது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

மணமக்கள்: வீ.வீரமணி – இரா.காயத்ரி

கடந்த 5.9.2025 அன்று காலை பட்டுக்கோட்டையில்  உள்ள கே.கே.டி. திருமண மண்டபத்தில்,  பெ.வீரையன் – வீ.மாலதி ஆகியோரின் மகன் வீ.வீரமணிக்கும்,  உ.இராசாராம் – உமாமகேசுவரி ஆகியோரின் மகள் இரா.காயத்திரிக்கும் நடைபெற்ற மணவிழாவிற்குத் தலைமை தாங்கிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

மிகுந்த பெருமைக்கும், மகிழ்ச்சிக்கும் உரிய மணவிழா நிகழ்ச்சியாக எங்களுடைய பட்டுக்கோட்டை கழகத் தலைவர் மானமிகு வீரையன், அவருடைய அன்பு வாழ்விணையர் மாலதி ஆகியோருடைய செல்வன் தோழர் வீரமணி அவர்களுக்கும், வேதாரண்யம் வட்டம், பஞ்சநதிக்குளம் கிழக்குத் தெற்குக் காடு திருவாளர்கள் இராசாராம் – உமாமகேசுவரி ஆகியோருடைய செல்வி காயத்திரி அவர்களுக்கும் நடைபெறக்கூடிய இந்த சிறப்பான வாழ்க்கை இணையேற்பு விழாவிற்கு வருகை தந்துள்ள உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மணவிழாவில் கலந்துகொள்வது என்பதை மிக முக்கியமான ஒரு கடமை என்று கருதித்தான் நான் இங்கே வந்திருக்கின்றேன்.

எனக்கு அண்மையில் ஒரு பெரிய அறுவைச் சிகிச்சை நடந்தது. அந்த அறுவைச் சிகிச்சையில் இருந்து இன்னும் முழுமையாக வெளியே வரவில்லை.

இரண்டு மாதங்களுக்கு வெளியூர் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுரை சொன்னார்கள்.

மருத்துவர்களின் அறிவுரையை மீறித்தான்…

ஆனால், அவர்களின் அறிவுரையை மீறித்தான், நண்பர் வீரையன் இல்ல மணவிழாவினைத் தவிர்க்கக் கூடாது; தவிர்க்க முடியாது என்பதற்காகத்தான், பட்டுக்கோட்டைப் பகுதியில் உங்களையெல்லாம் சந்திக்கக் கூடிய வாய்ப்பைப் பெறுகிறேன்.

மருத்துவர்களிடமே நான் மிகவும் பணிவன்புடன் சொன்னேன், ‘‘எனக்கு மருந்து உங்களிடமிருந்து கிடைப்பதைவிட, சுற்றுப்பயணம் சென்று, தோழர்களையெல்லாம் சந்திக்கின்றபோது, கழகக் குடும்ப நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றபோது கிடைக்கும் சிகிச்சையைவிட சிறந்த சிகிச்சை வேறு இருக்க முடியாது; அதைவிட மாமருந்து வேறு இருக்க முடியாது” என்று சொன்னேன்.

ஆகவே, இந்த மணவிழாவிற்கு வந்து உங்கள் அனைவரையும் பார்க்கின்றபோது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த ஊருக்கு உள்ளே வரும்போதுகூட, பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரியை நினைத்துக்கொண்டுதான் வரவேண்டும்.

ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள் இன்று. வீரமணி – காயத்ரி ஆகியோருடைய வாழ்க்கை இணையேற்பு விழா இன்றைக்கு நடைபெறுகிறது.

பெரியார் உலகமயமாகி இருக்கிறார்;

உலகம் பெரியார் மயமாகி இருக்கிறது!

இன்றைக்கு அகிலமே ஒரு பெரிய மகிழ்ச்சி யோடு இருக்கின்ற நாளாகும். எத்தனையோ மணவிழாக்கள் நடைபெறலாம்; இன்றைக்கு நடைபெறும் மணவிழாவிற்கு ஒரு சிறப்பு என்ன வென்றால், இன்றைக்குப் பெரியார் உலகமயமாகி இருக்கிறார்; உலகம் பெரியார் மயமாகி இருக்கிறது.  நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில், தந்தை பெரியார் அவர்களுடைய படத்தைத் திறந்து வைத்து, அற்புதமான சுயமரியாதை இயக்கப் பேருரையை நிகழ்த்தியதை நாம் எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்தோம்.

பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரியை பார்க்காத இன்றைய தலைமுறையினர் இங்கே இருக்கிறார்கள். எங்களைப் போன்றவர்களுக்கு அந்த நல்வாய்ப்பு கிடைத்தது. அவருடைய உரையையும் கேட்கக்கூடிய வாய்ப்பும் இருந்தது.

கம்பீரமாக நின்று அவர் பேசுகின்ற உரை, வெறும் ஆரவார உரையோ, வெறும் கைத்தட்டலுக்காகவோ பேசப்படுகின்ற உரையல்ல அது.

எதிர்ப்பிலே, எதிர்நீச்சல் அடித்த இயக்கம், இந்த இயக்கம்!

அவர் உரையாற்றும்போது, ‘‘ஏ, தோழா!’’ என்று தொடங்குவார்.

‘‘எங்களுடைய கொள்கையின் மகத்துவம் தெரியுமா, உங்களுக்கு? ஈட்டி எட்டிய வரையில் பாயும், பணம் பாதாளம் வரைக்கும் பாயும்; ஆனால், எங்கள் பெரியார் இராமசாமியினுடைய கொள்கை இருக்கிறதே, அது அண்ட பிண்ட சராசரங்கள் அத்தனையும் பாய்ந்து, அதற்கு அப்பாலும் பாயும்’’ என்று சொன்னார்.

அதற்கு அடையாளம் என்னவென்றால், இன்றைக்கு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில், நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பெரியாருடைய படத்தைத் திறந்து வைத்திருக்கிறார்.

பல வெற்றிகளைப் பெறக்கூடிய வாய்ப்புகளைப் பெற்றிருக்கின்றோம்!

பள்ளிக்கூடத்திற்கே சரிவர செல்லாத ஒருவர், பகுத்தறிவுப் பகவலனாகி, இன்றைக்கு எல்லோருக்கும் கல்வி அறிவை ஊட்டக்கூடிய ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்திற்குச் சென்றிருக்கின்றார் என்றால், இந்தக் கொள்கை எந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்கின்றது என்பதை நீங்கள் எல்லோரும் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும். மேலும் நாம் பல வெற்றிகளைப் பெறக்கூடிய வாய்ப்புகளைப் பெற்றிருக்கின்றோம்.

காரணம் என்ன?

இந்தக் கொள்கைகளைக் குடும்பம் குடும்பமாகப் பின்பற்றி வருவதுதான்.

இளைஞரணியில் இருந்த காலத்திலிருந்து நம்முடைய இயக்கத்தில் இருப்பவர் வீரையன்!

இந்த மணவிழாவினை தவிர்க்க முடியாமல் நான் வந்ததற்குக் காரணம், நம்முடைய வீரை யன் அவர்கள், இளைஞரணியில் இருந்த காலத்தி லிருந்து நம்முடைய இயக்கத்தில் இருப்பவர்.

இங்கே அதிரடி அன்பழகன் உரையாற்றினார். அன்பழகனை பட்டுக்கோட்டை சதாசிவம் தயாரித்தார்.

அதேபோன்று, அத்திவெட்டி என்றால், ஒரு காலத்தில் எல்லோரும் பயப்படுவார்கள். அதற்கான காரணம் எல்லோருக்கும் தெரியும்; அதுகுறித்து விளக்க வேண்டிய அவசியம் இல்லை.

எனக்கு ஒன்று நினைவிற்கு வந்தது; நாங்கள் படித்த பல்கலைக் கழகத்திற்கு, மூப்பனார் அவர்களையும், தோழர் நல்லகண்ணு அவர்களையும் அழைத்திருந்தோம்.

அங்கே வந்த அவர்கள், பல்கலைக் கழகத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு, அதில் நம்முடைய ஜி.கே.மூப்பனார் அவர்கள் உரையாற்றும்போது, ‘‘கிராமப் பகுதிகளைச் சேர்ந்த எங்களை இங்கே அழைத்திருக்கிறார்கள். கொள்கையில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து உண்டு. ஆனால், நானும், நல்லகண்ணு அவர்களும் ஒரே மேடையில் அமர்ந்திருக்கின்றோம்’’ என்றார்.

எப்போதும் அய்ந்து நிமிடங்களுக்குமேல் பேசாதவர், அன்று அரை மணிநேரம் உரையாற்றினார்.

ஜி.கே.மூப்பனாரின்
உணர்வுபூர்வமான உரை!

‘‘ஒரு பெரிய மாற்றம் என்னவென்றால், பெரியார் மட்டும் பிறந்து, இந்த சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியிருக்கவில்லை என்றால், நானும், நல்ல கண்ணுவும் ஒன்றாக அமர்ந்திருப்போமா? அவருடைய கையில் ஓர் அரிவாள் இருக்கும்; என்னுடைய கையில் ஓர் அரிவாள் இருக்கும். நாங்கள் இரண்டு பேரும் அரிவாளைத்தான் தூக்கிக் கொண்டு இருந்திருப்போம்’’ என்றார்.

அதுபோன்று, அரிவாளுக்கு முக்கியத்துவம் கொடுத்த அத்திவெட்டி. அப்படிப்பட்ட ஓர் அத்தி வெட்டியிலிருந்து எங்களுக்கு ஓர் அன்பழகன்; எங்களுக்கு ஒரு வீரையன்; எங்களுக்கு ஒரு பெரியார்செல்வன்.

இங்கே உரையாற்றிய சித்தார்த்தன் அவர்கள், மணமகன் வீரமணி அவர்கள் மிகவும் தெளிவானவர் என்று சொன்னார்.

மணமகள் காயத்ரி அவர்களை சிறப்பாகப் படிக்க வைத்திருக்கிறார்கள். அதற்காக அவருடைய பெற்றோ ரைப் பாராட்டவேண்டும்.

கல்விக் குடும்பம் இணைந்து,
கொள்கைக் குடும்பமும் இணைந்திருக்கின்றது!

அதேபோல மணமகன் வீரமணி எம்.இ. படித்தவர்.  அதைவிட ஒரு சிறப்பு என்னவென்றால், பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகத்தினுடைய தயாரிப்பு அவர்.

இங்கே கல்விக் குடும்பமும் இணைந்திருக்கின்ற, கொள்கைக் குடும்பமும் இணைந்திருக்கின்ற ஓர் அற்புதமான நிகழ்ச்சி இது.

மிகவும் முரட்டுத்தனமாக இருப்பார் நம்முடைய வீரையன். எந்தக் கூட்டமாக இருந்தாலும் அவருடைய கருத்தை எடுத்துரைப்பார். ஆனால், பல மடங்கு அன்பு காட்டுவார் அவர்.

1990 இல், வீரையன் – மாலதி ஆகியோரின் மணவிழாவினை நடத்தி வைத்தேன்!

இந்த மணவிழாவிற்கு தவிர்க்காமல் வரவேண்டும் என்பதற்குக் காரணம், 1990 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 19 ஆம் தேதி என்னுடைய தலைமையில்தான், வீரை யன் – மாலதி ஆகியோரின் மணவிழாவினை நடத்தி வைத்தேன்.

இன்றைக்கு அவர்களுடைய மகனுக்கு மண விழாவினை நான் நடத்தி வைக்கவிருக்கிறேன். இவர்களுடைய பிள்ளைகளுக்கும் மணவிழாவினை நான் நடத்தி வைப்பேன்.

நீங்கள் எல்லாம் நினைக்கலாம், இவருக்கு 92 வயதாகிறது; இன்னமும் இவருக்குப் பேராசையைப் பாருங்கள் என்று. அது பேராசையல்ல, இந்தக் கொள்கை அவ்வளவு நாள் வாழும் என்பதுதான் அதனுடைய தத்துவமாகும். இந்தக் கொள்கையை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது.

இந்தக் கொள்கை உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கின்றது. இந்த மணவிழாவிற்கு நிறைய பேர் வந்திருக்கிறீர்கள். நிறைய ஆண்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள். மகளிர், மிகவும் வசதியாக நாற்காலியில் அமர்ந்திருக்கின்றார்கள்.

பெண்களுக்குத் தைரியத்தைக் கொடுத்தவர்தான் பெரியார்; அதைக் கொடுத்தது சுயமரியாதை இயக்கம்!

ஒரு நூறாண்டுக்கு முன்பு, இப்படி ஆண்கள் நிற்க, பெண்கள் நாற்காலியில் அமர்ந்திருக்க முடியுமா? நூறாண்டுக்கு முன்பு நாற்காலி இருந்தது; ஆனால், அந்த நாற்காலியில் பெண்கள் அமரக்கூடிய தைரியம் இருந்ததா? அந்தத் தைரியத்தைக் கொடுத்தவர்தான் பெரியார். அதைக் கொடுத்தது சுயமரியாதை இயக்கம்.

‘‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு?’’ என்று கேட்டார்கள்.

‘‘அடுப்பங்கரைக்கு அனுப்பாதே, பெண்களைப் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பு’’ என்று சொன்னவர் தந்தை பெரியார்.

ஊதாங்குழல் என்றால் இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தெரியாது. பாட்டிமார்க ளுக்குத்தான் ஊதாங்குழல் தெரியும்.

திருகியவுடன் எரிகின்ற அடுப்பைக் கலைஞர் கொடுத்தி ருக்கிறார். அதனால், ஊதாங்குழலைப்பற்றி இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தெரியவில்லை.

பெண்களுக்குச் சம உரிமை, சொத்துரிமை, படிப்புரிமை, உத்தியோக உரிமைகள் கிடைத்தன!

அப்படிப்பட்ட ஓர் அற்புதமான நிலை, மாற்றம். பெண்களுக்குச் சம உரிமை, சொத்துரிமை, படிப்பு ரிமை, உத்தியோக உரிமை இவை அத்தனையும் கிடைத்திருக்கின்றன.

அதன் காரணமாகத்தான், மணமகள் காயத்ரி எம்.பி.ஏ. படித்திருக்கிறார். அதற்காக அவருடைய பெற்றோரைப் பாராட்டவேண்டும்.

நமக்கெல்லாம் படிப்பு வராது; படிக்கக் கூடாது என்று சொன்னார்கள் அன்றைக்கு. அதே நிலையை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று நினைக்கின்றது இன்றைய ஒன்றிய பா.ஜ.க. அரசு.

எனவேதான், இந்தக் கொள்கை வளரவேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும்.

அந்த அடிப்படையில், இந்த இல்லத்தில் வீரையன் மணவிழாவை மட்டும் நான் நடத்தவில்லை. அதற்குப் பிறகு அவருடைய சகோதரரின் மணவிழா 2001 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதையும் நான்தான் நடத்தி வைத்தேன்.

அத்திவெட்டியில், பெரியசாமி இல்லத் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு என்னை அழைத்துத்தான் அவர்களுடைய இல்லத்தைத் திறந்தார்கள்.

அதேபோன்று அவர்களுடைய மகள் எழில்மதி – காமராஜேசுவரன் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவிற்கு வர வாய்ப்பில்லாமல் போனது.

கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்

கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களு டைய தலைமையில், அம்மணவிழாவிற்கான வரவேற்பு விழாவினை மே மாதத்தில் நடத்தினார்கள்.

ஆகவே, இந்தக் குடும்பம் மிக முக்கியமான ஒரு கொள்கைக் குடும்பம். அந்த இல்லத்து மணவிழாவினை நடத்தி வைப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

மணமக்கள் எல்லா வகையிலும் சிறப்பாக வாழ்வார்கள். மூடநம்பிக்கைக்கு இடமிருக்கக்கூடாது.

ஒரு பக்கம் வரதட்சணைக் கொடுமை; இன்னொரு பக்கத்தில் ஆணவக் கொலைகள் நடைபெறுகின்றன.

நம்முடைய ஜாதியை விட்டுப் போய்விட்டார்கள். நம்முடைய ஜாதியில் பெண் எடுக்கவில்லை. காதல் திருமணம் செய்துகொண்டார்கள் என்று குமுறுகிறார்கள்.

பெற்றோர்கள், தாய்மார்கள் இங்கே நிறைய பேர் இருக்கிறீர்கள். ஒரு பெண்ணை, பெற்று, வளர்த்து, ஆளாக்கி, நல்ல அளவிற்குப் படிக்க வைத்து, கவுரவ மான பணியை செய்துகொண்டிருக்கும்போது, அவருக்கேற்ற துணையை அவர் தேடிக்
கொள்கிறார்.

ஜாதிக்கு என்ன அடையாளம்?

இதில் என்ன கோளாறு? இதில் எங்கே ஜாதிப் பிரச்சினை இருக்கிறது?

உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனைக்குச் செல்கையில், ‘‘என்னுடைய ஜாதி டாக்டர்தான் என்னைப் பரிசோதிக்கவேண்டும்; என்னுடைய ஜாதி நர்சுதான் என்னைக் கவனிக்கவேண்டும்’’ என்று, உங்கள் ஜாதி டாக்டருக்காகவோ, உங்கள் ஜாதி நர்சுக்காகவோ காத்திருப்பீர்களா?

ஆனால், மணவிழாவிற்கு மட்டும் ஏன் ஜாதிப் பார்க்கிறீர்கள்? ஜாதிக்கு என்ன அடையாளம்? ஜாதிக்குத் தனி அடையாளம் உண்டா?

ரத்தப் பிரிவில்கூட, அறிவியல் பூர்வமாக சில பிரிவுகளை (ஏ1, பி பாசிட்டிவ்) உலகம் முழுவதும் ஒரே மாதிரியான பிரிவுகளைத்தான் வைத்திருக்கிறார்கள்.

நீங்கள் எந்தப் பிரிவு ரத்தம் என்று கேட்டால், நம்மாட்களுக்குத் தெரியாது.

ஆனால், நீங்கள் என்ன ஜாதி? என்று கேளுங்களேன். நான் இந்த ஜாதியில், அந்தப் பிரிவு என்று சொல்வார்கள்.

ஜாதி வெறியை, தெரிந்தோ தெரியாமலோ, புரிந்தோ புரியாமலோ, அறிந்தோ அறியாமலோ ஏற்றியிருக்கிறார்கள்.

இவற்றை எதிர்த்துப் பெரியார் பாடுபட்டதினால்தான், இன்றைக்கு இவ்வளவு பெரிய வாய்ப்புகள் வந்திருக்கின்றன என்பதை நன்றாக நீங்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்.

பெற்ற பிள்ளையைக் கொலை செய்ய, கூலிப்படையை அமர்த்துகின்றனர் பெற்றோர்.

ஒரு பக்கத்தில் அறிவியல் வளர்ந்திருக்கின்றது. விண்வெளிக்குச் செல்கிறார்கள். இப்படிப்பட்ட காலகட்டத்தில், இன்னமும் என் ஜாதி, என் ஜாதிப் பெண், என்னுடைய ஜாதி மாப்பிள்ளை என்று சொல்கிறார்கள்.

இங்கே மணமக்கள் இரண்டு பேரும் நன்றாகப் படித்திருக்கிறார்கள்; இரண்டு பேரும் பணியாற்றுகிறார்கள்; இரண்டு பேரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

குஞ்சுகளை வளர்க்கின்றபோதுகூட, தாய்க்கோழி அந்தக் குஞ்சுகளைப் பாதுகாப்பதற்கு எவ்வளவு கவனம் எடுத்துக் கொள்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள்.

நாய்க் குட்டி போட்டிருக்கும்போது, அந்தக் குட்டிகளை வைத்திருக்கும் நாய்க்கு அருகில் சென்றால், அதற்குக் கோபம் வரும்.

அதைவிட உங்களுக்கெல்லாம் தெரிந்த உதாரணத்தைச் சொல்கிறேன்.

ஒரு மிருகத்திற்கு இருக்கக்கூடிய உணர்வுகூட இல்லாமல்…

பன்றி, பல குட்டிகளை ஈன்றிருக்கும். மற்ற நேரங்களில், பன்றி, நம்மைக் கண்டதும் ஓடும். ஆனால், குட்டிப் போட்டிருக்கும்  தாய்ப் பன்றிக்கு அருகில் நாம் சென்றால், சீறிக்கொண்டு வரும்.

ஒரு மிருகத்திற்கு இருக்கக்கூடிய உணர்வுகூட இல்லாமல், தங்களால் வளர்க்கப்பட்ட பெண்ணை, ஆளாக்கப்பட்ட ஒரு பெண்ணை – விரும்பிய ஒருவரை அவர் திருமணம் செய்துகொண்டார் என்பதற்காக, கூலிப்படையை அழைத்து, அவர்களை அழிக்கிறார்கள் என்று சொன்னால், இதைவிடக் கொடுமை, இதைவிட ஒரு அவலம் சமூகத்தில் வேறு உண்டா?

எனவேதான், பெற்றோர்கள், குறிப்பாக தாய்மார்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள். 18 வயதாகிறது, படிப்பும் கொடுத்தாகி விட்டது.  கலைஞர் போன்றவர்களுடைய முயற்சியினால், அம்பேத்கருடைய முயற்சியினால், பெரியாருடைய செங்கல்பட்டு மாகாண மாநாட்டுத் தீர்மானத்தினால், பெண்களுக்குச் சொத்துரிமை வந்தாகி விட்டது.

மனப் பொருத்தம்தான் மிகவும் முக்கியம்!

எல்லாவற்றிலும் சுதந்திரமாக இருக்கின்ற காலத்தில், தேவையில்லாமல் ஜோதிடம் பார்த்துவிட்டு, ஜாதகம் சரியில்லை என்று சொல்வது ஏன்? இரண்டு பேருடைய மனப் பொருத்தம்தான் மிகவும் முக்கியம்.

ஆகவேதான், இந்த மணமக்கள் எல்லா வகையிலும் சிறப்பாக இருக்கவேண்டும் என்று சொல்லிக் கொண்டு, இவர்களுக்கு அறிவுரை சொல்லவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், மிகவும் தெளிவானவர்கள்.

இல்லறத்திற்குப் பிறகு தொண்டறம்!

ஆகவே, அவர்களுக்கு அறிவுரை தேவையில்லை. முன்பு இல்லறத்திற்குப் பின்பு துறவறம் என்று சொன்னார்கள். அதைப் பெரியார்தான் மாற்றினார், இல்லறத்திற்குப் பிறகு தொண்டறம் என்று.

மற்றவர்களுக்கு உதவுங்கள்; உங்கள் பெற்றோரிடம் அன்பு காட்டுங்கள்; உங்களிடமிருந்து, உங்கள் பெற்றோர் எதையும் எதிர்பார்க்கவில்லை. பாசத்தை, மரியாதையை எதிர்பார்க்கிறார்கள். அந்தப் பாசத்தை மறக்காமல் அவர்களிடம் காட்டுங்கள். எல்லாவற்றையும்விட ஆடம்பரமற்ற எளிமையான வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டும்.

சுயமரியாதைத் திருமணம் என்பது, சமூகத்தை வாழ வைப்பது – சமூகத்தை ஒற்றுமைப்படுத்துவது!

மணவிழாக்களுக்கான அழைப்பிதழ் 200 ரூபாய் மதிப்பில் அச்சடிக்கிறார்கள். அதேபோன்று ஆடம்பரமான மண்டபங்களில் நடத்துகிறார்கள்.

இவற்றையெல்லாம் தவிர்க்கப்படக் கூடியதுதான் சுயமரியாதைத் திருமணமாகும்.

எனவே, சுயமரியாதைத் திருமணம் என்பது, சமூகத்தை வாழ வைப்பது. சமூகத்தை ஒற்றுமைப்படுத்துவதாகும்.

இந்தக் கொள்கையை ஏற்றவர்கள் வளர்ந்திருக்கிறார்களா, இல்லையா? கெட்ட நேரம் என்பதெல்லாம் எங்களுக்குக் கிடையாது. எல்லா நேரமும் நல்ல நேரம்தான் எங்களுக்கு.

என்னுடைய மணவிழா ராகுகாலத்தில்தான் நடைபெற்றது!

என்னுடைய துணைவியார் இங்கே வந்திருக்கிறார். 1958 ஆம் ஆண்டு, தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் எங்களது மணவிழா ஏற்பாடுகளைச் செய்தனர். அதன்படி, ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு மாலையை மாற்றிக் கொண்டோம்.

இன்றைக்கு 66 ஆண்டுகள் ஆகிவிட்டன. இராகு காலம் எங்களை என்ன செய்தது? அதற்காக ஏன் பயப்படவேண்டும்? நாங்கள் நல்ல நாள் பார்க்கவில்லை; அம்மணவிழாவில் பங்கேற்க பெரியார், தனது வாய்ப்புக்கேற்ப என்ன நாள் சொன்னாரோ அதைத்தான் நாங்கள் பார்த்தோம்.

ஆகவேதான், இந்த இயக்கம் எதைச் சொல்லுகிறதோ, அதைச் செய்யும். அதுதான் திராவிட இயக்கம்.

சொன்னதைச் செய்யும்; அது செய்வதையே சொல்லும். இன்னுங்கேட்டால், மக்கள் நலன் கருதி, சொல்லாததையும் செய்யும், ஆட்சியில் இருந்தால்!

இந்தக் குடும்பம், எங்கள் குடும்பம்; நம்முடைய குடும்பம்!

எனவே, இந்த மணமக்கள் அறிவார்ந்த மணமக்கள். எல்லா வகையிலும் சிறப்போடு இருக்கவேண்டும். இந்தக் குடும்பம் எங்கள் குடும்பம்; நம்முடைய குடும்பம்.

ஆகவேதான், நான் உடல்நலத்தை உங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்கின்ற உணர்வோடுதான், இந்த மணவிழாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த வாய்ப்பை அளித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மணமக்கள் செல்வர்கள் வீரமணி –  காயத்ரி ஆகிய இருவரும் இப்போது வாழ்க்கை இணையேற்பு விழா உறுதிமொழி கூறி, மணவிழாவை நடத்திக் கொள்வார்கள்.

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *