அறியாமை புதைக்கப்பட்டு சுயமரியாதை விதைக்கப்பட்டு கொள்கை முதலீடுகளை செய்து வந்திருக்கும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகரை உச்சிமோந்து தாய்க் கழகம் வரவேற்கிறது! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சமூகநீதிக்கான சரித்திர நாயகராம் நமது மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் முதல் வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தை 2021இல் தொடங்கினார். அமெரிக்கா, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் நாடுகளுக்குச் சென்று வந்தார். எடுத்த எடுப்பிலேயே ரூ.18,498 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகளைக் கொண்டு வந்தார். 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளுக்கு வழி செய்தார்.
அடுத்த கட்ட பயணமாக கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி புறப்பட்டு ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு இன்று விடியற்காலை 3 மணிக்கு வந்தடைந்தார். முதலீடுகளை மட்டுமல்ல; அங்கு வாழும் தமிழர் குடும்பங்களின் விலை மதிக்கவே முடியாத அன்பையும் திரட்டி வந்தார். முதலீட்டாளர்களின் நன்னம்பிக்கையையும் ஈட்டி வந்தார்.
ஜெர்மனி பயணத்தை வெற்றிகரமாக முடித்து இலண்டன் சென்றார். அங்கு நான்கு நாட்கள் முழுமையாக தங்கினார்.
இந்த ஒரு வார பயணத்தில் ரூ.15,516 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார். 17,613 பேருக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
‘திராவிட மாடல்’ ஆட்சியில் தமிழ்நாடு – இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்த வேகத்தில் சென்றால் முதலிடத்தில் தமிழ்நாடு மிளிரும் என்பதில் அய்யமில்லை.
இந்தச் சுற்றுப் பயணத்தில் உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் நெஞ்சில் சிலிர்ப்பூட்டும் வரலாற்றுச் சிறப்பான நிகழ்ச்சி என்பது – லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் படத்தினை தந்தை பெரியாரின் பேரன் என்று தன்னைப் பெருமையாகக் கூறிக் கொள்ளும் நமது திராவிட மாடல் ஆட்சியின் நாயகர் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள், உலகப் புகழ் பெற்ற பல்கலைக் கழக அரங்கில் திறந்து வைத்து, மகிழ்ச்சிக் கடலில் மிதந்தார்! வரலாற்றில் கிடைத்தற்கரிய பெரும் பேறு என்று புளகாங்கிதம் அடைந்தார்.
பெரியாரை முதலீடு செய்திருக்கிறோம்! அன்று தமிழர் தலைவர் சொன்னதும், இன்று தமிழ்நாடு முதலமைச்சர் சொன்னதும்!
‘‘நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று, முதலீடுகளை வாங்கிக் கொண்டிருக்கின்றார். ஆனால், அவர் முதலீடுகளை வாங்குவது மட்டுமல்ல; முதலீடு செய்துவிட்டும் வந்திருக்கிறார்.
உடனே சொல்வார்கள், ‘‘பார்த்தீர்களா, அவர் ஏதோ சொந்தக் காரணத்திற்காக, வியாபாரம் செய்வதற்காக வெளிநாட்டில் முதலீடு செய்வதற்காகப் போயிருக்கிறார்?’’ என்று! ஆமாம், முதலீடுதான் செய்திருக்கிறார். ஆனால், என்ன முதலீடு தெரியுமா?
பெரியார் என்ற முதலீட்டை, லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் செய்திருக்கிறார். ‘‘உலகம் பெரியார் மயம்; பெரியார் உலக மயம்’’ என்று சொல்லி, பெரியாரை முதலீடு செய்திருக்கிறார். எதிரிகள் அவரிடம் கிட்டே போக முடியாது. அப்படிப்பட்ட தனிச்சிறப்பு பெரியாருக்கு உண்டு.’’
(05.09.2025 அன்று உரத்தநாடு தெற்கு ஒன்றியம் தொண்டராம்பட்டில் தமிழர் தலைவர் ஆற்றிய உரையிலிருந்து…)
கேள்வி: எதிர்க்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உங்களுடைய வெளிநாட்டு பயணம் என்பது உங்களுடைய முதலீட்டிற்காக நடத்தினார் என்ற விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். அதை பற்றி…
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பதில்: ஒரு வகையில் அவர் சொல்வது முதலீடு செய்யப்போனதைப்பற்றி திரித்து சொல்லியிருக்கிறார். என்னைப்பொருத்தவரை சொல்ல விரும்புவது, சுயமரியாதை கொள்கையில் முதலீடு செய்துவிட்டு வந்திருக்கிறேன். தந்தைப் பெரியாரின் உணர்வுகளை பெரியாரைப் பற்றி அந்த நாட்டில் முதலீடு செய்துவிட்டு வந்திருக்கிறேன். அதுதான் உண்மை. அந்த அடிப்படையில் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன்.
(இன்று (8.9.2025) காலை தனது அய்ரோப்பியப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இருந்து)
தந்தை பெரியாரின் சிந்தனைகள் உலகளாவிய சமூக மாற்றத்திற்கு வழிகாட்டுபவை என்பதை ஏற்ற இறக்கத்துடன் எழுச்சியுரை ஆற்றினார்.
உலகமயமாகிறார் பெரியார் என்று நாம் தொடர்ந்து கூறி வந்ததை, தமக்கே உரித்தான அழுத்தமான ஆணித்தரமான சொற்களால் ஓங்கி ஒலிக்கப்பட்ட உரை அது!
அறியாமை புதைக்கப்பட்டு சுயமரியாதை விதைக்கப்பட்டு கொள்கை முதலீடுகளை செய்து வந்திருக்கிறார்.
அதற்காக முதல்வருக்கு நமது தனித்த பாராட்டுகள்!
‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ என்றாரே தந்தை பெரியாரைப்பற்றி புரட்சிக் கவிஞர்.
அந்தப் பாடல் வரிகள் தான் நம் நெஞ்சங்களில் எல்லாம் அலையடித்து பாய்ந்தன.
கார்ல் மார்க்ஸ் நினைவிடம், அண்ணல் அம்பேத்கர் தங்கிப் படித்த இடங்களைப் பார்த்தது – அவரது சிந்தனை ஓட்டம் எத்தகையது என்பதற்கான அடையாளமாகும்.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து வந்தார் என்பது ஒரு பக்கம், தமிழ்நாட்டின் தனிப் பெரும் உயர் சிந்தனையாளரான தந்தை பெரியாரின் சீலங்களை உலகம் உணரும் வண்ணம் அதுவும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலகே திருப்பிப் பார்க்கும் வகையில் முரசொலித்து திரும்பும் அருமைச் சகோதரர் நமது மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை உச்சி மோந்து ஆரத் தழுவி உளப் பூர்வமாகத் தாய்க் கழகமாம் திராவிடர் கழகம் வரவேற்கிறது – வாழ்த்துகிறது!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
8.9.2025