லண்டன், செப்.8- பென்னிகுவிக் குடும்பத்தினரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லண்டனில் நேற்று (7.9.2025) நேரில் சந்தித்தார், அப்போது பென்னி குவிக் சிலையை இங்கிலாந்தில் நிறுவியதற்கு, குடும்பத்தினர் நன்றியை தெரிவித்தனர்.
பென்னிகுவிக்
தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களால் பெரிதும் போற்றப்படக்கூடியவராக ஜான் பென்னிகுவிக் இருந்து வருகிறார். அப்படி என்ன செய்தார்?. 152 அடி உயர கம்பீரத் தோற் றத்துடன் இன்றும் பெயர் சொல்லி வரும் முல்லைப் பெரியாறு அணையை இயற்கையுடன் போராடி கட்டியவர் இவர்தான்.
அப்போதைய ஆங்கிலேய அரசின் பொறியாளராக இருந்த பென்னி குவிக், ஆங்கிலேய அரசு முதலில் ஒதுக்கிய நிதியில் அணையை கட்டிக் கொண்டிருந்தபோது பெய்த மழையால், அணை வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டது. பின்னர், ஆங்கிலேய அரசு அதற்கான நிதியை மேலும் வழங்காத நிலையில், சொந்த நாடான இங்கிலாந்து சென்று தன்னுடைய வீட்டை விற்று அதில் கிடைத்த பணத்தை கொண்டு தான் இந்த அணையை கட்டி முடித்தார்.
சிலை
இந்த அணையால் தமிழ்நாட்டில் மேற்சொன்ன மாவட்ட மக்களின் தண்ணீர் பஞ்சத்தை போக்கி விவசாயத் துக்கு பயன்படும் உன்னதமான பணியை செய்த பென்னிகுவிக், அனைவரின் மனங்களையும் இன்றளவும் வென்று இருக்கிறார். இது ஏதோ வார்த்தைக்கு சொல்வது இல்லை. இந்த பகுதி மக்கள் “நீர் இருக்கும் வரை நீர் இருப்பீர்” என்ற வாசகத்துடன் பென்னிகுவிக் உருவப் படத்தை தங்கள் வீடுகளில் வைத்து இப்போதும் வணங்குகின்றனர்.
அதுமட்டுமா? அவருடைய பெயரை தங்கள் பிள்ளைகளுக்கும் சிலர் சூட்டி இன்றளவும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த வெள்ளைக்கார தியாகி, தன் இறுதி மூச்சை இங்கிலாந்தின் கேம்பர்ளியில் முடித்துக்கொண்டார். பென்னிகுவிக்கின் தியாகத்தை போற்றும் வகையில் இங்கிலாந்து நாட்டில் கேம் பர்ளியில் தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு அவரது சிலை திறந்து வைக்கப்பட்டது.
முதலமைச்சருடன் சந்திப்பு
இந்த நிலையில் லண்டன் சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பென்னிகுவிக் குடும்பத்தினர் நேரில் சந்தித்து, சிலை நிறுவியதற்காக நன்றியை தெரிவித்தனர்.
மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னிடம் சில கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்திருக்கின்றனர். இந்த சந்திப்பின் போது துர்கா ஸ்டாலினும் உடன் இருந்தார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
முல்லைப்பெரியாறு அணையைத் தந்து நம் மக்களின் மனங்களில் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னி குவிக் சிலையை, அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் நிறுவியதற்காக, அவரது குடும்பத்தினரும், செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தைச் சார்ந்தவர்களும் நன்றி தெரிவித்தனர். நேரில் அவர்கள் வைத்த கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றுவோம். வாழ்க ஜான் பென்னி குவிக் புகழ்.
இவ்வாறு முதலமைச்சர் மு.கஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.