பெரியார் என்ற பேராயுதம் தான் நம் போராயுதம்
பெரியார் இந்தியாவை ஆளப்போகிறார்; ஆசியாவை ஆளப்போகிறார்;
உலகையே ஆளப்போகிறார்! பெரியார் உலகமயம்! உலகம் பெரியார் மயம்!
மதுரை, செப். 8- சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மற்றும் ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மதுரை பேருந்து நிலையம் அருகில் உள்ள கோ.புதூர் பகுதியில் மதுரை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு திறந்தவெளி மாநாடு, 6.9.2025 அன்று மாலை 6 மணி முதல் இரவு 9;30 வரை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் முருகானந்தம் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்க வேண்டி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் ச.பால்ராஜ் முன் மொழிந்தார். மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் செயலாளர் வீர பழனிவேல்ராஜன் அதை வழிமொழிந்து கழகத் தலைவரை நிகழ்ச்சியின் தலைவராக தெரிவு செய்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி தரும்படி கேட்டுக் கொண்டார். தலைமை செயற்குழு உறுப்பினர் வே.செல்வம், மாவட்டச் செயலாளர் சுரேஷ், பெரியார் பெருந்தொண்டர் புதூர் பாக்கியம், புறநகர் மாவட்டத் தலைவர் எரிமலை, புறநகர் மாவட்டச் செயலாளர் முத்துக்கருப்பன், மாவட்டக் காப்பாளர் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர்.
மாநாட்டில் கழக வெளியீடுகளாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை மக்கள் முன் அறிமுகப்படுத்தினார் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன். மதுரை சுகாதாரக் குழுவின் தலைவர் ஜெயராஜ் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து மேடையில் வீற்றிருக்கும் பெருமக்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது. கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பிரின்சு, “சுயமரியாதை இயக்கம் சந்தித்த எதிர்ப்புகளும், சாதித்த சாதனைகளும்” எனும் தலைப்பில் உரையாற்றினார்.
பெரியார் உலகத்திற்கு பெரும் நிதி!
திருச்சியை அடுத்த சிறுகனூரில் அமைய உள்ள, பெரியார் உலகம் நன்கொடை வழங்குபவர்கள் பட்டியலை தலைமை செயற்குழு உறுப்பினர் மதுரை வே.செல்வம் வாசித்தார். தோழர்கள் வரிசையாக வந்து காசோலைகளை கழகத்தலைவரிடம் வழங்கி மகிழ்ந்தனர். குறிப்பாக மதுரை மாவட்டத் தோழர்கள் கடந்த 15 நாட்களாக கடைவீதிகளில், இந்த கூட்டத்தை அடையாளப்படுத்தி துண்டறிக்கைகள் வழங்கி, 10 ரூபாய், 20 ரூபாய் என்று 60,000/- ரூபாய் வசூல் செய்த தொகை, அத்துடன் தோழர்கள் பற்றாக்குறைக்கு பங்களித்து 1 லட்சம் நிதி வழங்கினர். குமரி மாவட்டத்தின் செயலாளர் வெற்றி வேந்தன் 67 ஆம் தவணையாக விடுதலை சந்தா ரூ. 28,000/- வழங்கினார். அதேபோல் கழகத் தலைவரின் வேண்டுகோளை ஏற்று, ஏற்கெனவே பொன் முத்துராமலிங்கம் சென்னைக்குச் சென்று 1 லட்சம் ரூபாய் நேரில் வழங்கியதையும் நினைவுபடுத்தினார். அதைத் தொடர்ந்து மேனாள் அமைச்சர், தி.மு.க.உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர் பொன்.முத்துராமலிங்கம் உரையாற்றினார். இறுதியாக கழகத் தலைவர் தலைமை உரை ஆற்றினார்.
திராவிடத்தின் சிறப்பு எது?
பெரியாரை உலகமயமாக்கிய கழகத் தலைவர் தனது உரையில், ”பெரியாரின் கொள்கைகள் வீதிகளிலே விவாதிக்கப்பட்டன; பின்னர் பள்ளிகளில்; அடுத்து கல்லூரிகளில்; பட்டிமன்றங்களில்; இப்போது பல்கலைக்கழகங்களில் விவாதிக்கிறார்கள்; மதிப்பிடுகிறார்கள்; அதுவும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் அநித விவாதம் நடைபெறுகிறது. இதுதான் திராவிடத்தின் சிறப்பு” என்று எடுத்த எடுப்பிலேயே சிறந்த கருத்தை எடுத்து வைத்தார். அப்படிப்பட்ட தத்துவத்தைத் தந்த தந்தை பெரியாருக்கு, அமையவிருக்கும் பெரியார் உலகத்திற்கு மதுரை மாவட்டத் தோழர்கள் 10 லட்சத்துக்கும் மேலாக நன்கொடை வழங்கியதை எடுத்துரைத்து நன்றி தெரிவித்தார். அத்துடன் கடைவீதிகளில் சென்று துண்டறிக்கைகள் கொடுத்து 60,000/- ரூபாய் திரட்டியதை பாராட்டிப் பேசினார்.
திராவிடர் இயக்கத்தை அசைக்க முடியாது!
தொடர்ந்து, “ஒரு மாநிலம் இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது. உலகிற்கே வழிக்காடுகிறது” என்று திராவிட இயக்கத்தின் பெருமையை சுட்டிக்காட்டினார். மதுரை தனக்கு புதிது அல்ல என்பதற்காக, மதுரை மண்ணின் திராவிடர் கழகத்தின் பழைய தோழர் பாக்கியம் அவர்களையும், அவர் நடத்திய கூட்டங்களையும் நினைவுகூர்ந்தார். அத்துடன் மதுரை கருஞ்சட்டை மாநாட்டையும் சேர்ந்து நினைவூட்டினார். 1946இல் நடைபெற்ற இரண்டு நாள் மாநாட்டில்தான், இரண்டாம் நாளில் பந்தலில் தீ வைக்கப்பட்டது என்று குறிப்பிட்டார். அதே மதுரையில் தான் தந்தை பெரியாருக்கு சிலை வைக்கப்பட்டதையும் குறிப்பிட்டு கடந்த காலம் நிகழ்காலம் இரண்டையும் ஒருசேர நினைவூட்டினார். அதேபோல் 1944 இல் கடலூரில் தந்தை பெரியார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தையும் குறிப்பிட்டுக் காட்டி விட்டு, “திராவிடர் இயக்கத்தை அசைக்க முடியாது” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.
இலையுதிர் காலம் உண்டு!
வேர் உதிர் காலம் உண்டா?
அதே எண்ணவோட்டத்தில், “சிலர் திராவிடர் இயக்கத்தை வேரோடு பிடுங்கி எறிந்து விடுவோம் என்று பேசியிருக்கிறார்கள்” என்று பெயர் குறிப்பிடாமல் சொல்லிவிட்டு, “வேரை கண்டுபிடித்தால்தானே பிடுங்குவதற்கு?” என்றார். அத்துடன், “இலையுதிர் காலம் உண்டு, வேர் உதிர் காலம் உண்டா?” என்று நுட்பமான ஓர் உவமையைக் குறிப்பிட்டார். வேரை பிடுங்குவதற்கு மண்ணை தோண்டினால், அந்த மண்ணே சரிந்து தோண்டுபவரையே மூடிவிடும். அவர்களைக் காப்பாற்றவும் நாங்கள்தான் வர வேண்டி இருக்கும் என்பதையும் நகைச்சுவையுடன் சொல்லி, திராவிடர் இயக்கத்தை வீழ்த்துவது அவ்வளவு சுலபமானது அல்ல என்பதை கோடிட்டுக் காட்டினார். தொடர்ந்து, “சுயமரியாதை இயக்கத்தை ஒரு Stock taking போல பார்க்க வேண்டுமானால்; மதிப்பீடு செய்து பார்க்க வேண்டுமானால் ஒரு நுட்பத்தை நாம் காணமுடியும்” என்று சொல்லிவிட்டு, “பெரியார் கொள்கைகளை ஏற்காதவர்களுக்கும், கொள்கை எதிரிகளுடன் சேர்ந்து எங்களை எதிர்ப்பவர்களுக்கும் சேர்ந்துதானே நாங்கள் போராடுகிறோம்” என்று அந்த நுட்பத்தை அறிவித்தார். மக்கள் உணர்ந்து கைதட்டினர். “எல்லாரும் படிக்கணும் என்று தானே போராடுகிறோம். எல்லாருக்கும் எல்லாம் என்றுதானே சொல்கிறோம்” என்று அதற்கு சான்றும் காட்டினார். ”பேதமில்லாத வாழ்க்கைதானே சுயமரியாதை இயக்கத்தின் நோக்கம்” என்று தான் சொன்ன சான்றுக்கு, தத்துவ முத்திரை குத்தினார்.
பெரியார் உலகை ஆளப்போகிறார்!
மேலும் அவர், “இதையெல்லாம் அறியாமல் ஒப்பனை செய்கிறவர்கள் சிலர் ஊராள நினைக்கிறார்கள். ஒப்பனைகள் நிச்சயம் கலையும். மானமும் அறிவும் மனிதர்க்கு என்பதை உணர்வார்கள்” என்று பூடகமாகப் பேசினார். தமிழ்நாட்டின் முதலமைச்சர், இலண்டன் மாநகரில் ஜி.யூ.போப், கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர் இல்லம் – அங்கு வைக்கப்பட்டிருந்த பெரியார் அம்பேத்கர் புத்தகங்கள் ஆகியவற்றைக் கண்டு மகிழ்ந்து வெளியிட்ட பதிவுகள் குறித்து தத்துவரீதியாக விளக்கிப் பேசினார். தமிழ்நாடு முதலமைச்சரை உற்சாகப் பெருக்குடன் பாராட்டினர். அதன்பிறகு மனுதர்மத்தின் 8 ஆம் அத்தியாயம் 415 ஆம் சுலோகம் ஆகியவற்றை புத்தகத்தைப் பார்த்து படித்துக் காட்டி, ”இந்த ஆபத்தை கொண்டு வருவதற்குத்தான் பி.ஜே.பி.ஆட்சி காத்திருக்கிறது” என்று எச்சரித்தார். ”மனுதர்மத்தை எதிர்ப்பதால்தான் தி.மு.க. ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள்” என்பதையும் சொல்லி, “நடப்பது அரசியல் போராட்டம் அல்ல. ஆரியர் – திராவிடர் போராட்டம். ஆகவே எச்சரிக்கையாக இருங்கள். அது எங்களுக்காக அல்ல, உங்களுக்காக, உங்கள் சந்ததிக்காக. ஆகவே, பெரியார் என்ற பேராயுதம் தான் நம் போராயுதம்
பெரியார் இந்தியாவை ஆளப்போகிறார்; ஆசியாவை ஆளப்போகிறார்; உலகையே ஆளப்போகிறார்! பெரியார் உலகமயம்! உலகம் பெரியா மயம்! ” என்று கூறி தனது உரையை பெரியாரியலின் தத்துவ விளக்கமாகவே ஆற்றி, நிறைவு செய்தார்.
கலந்து கொண்டு சிறப்பித்தவர்கள்!
நிகழ்ச்சியில் பெரியார் மருத்துவக் குழுமத்தின் இயக்குநர் குன்னூர் மருத்துவர் கவுதமன், தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் ராகவன், மேனாள் மண்டலத் தலைவர் இசக்கிமுத்து, பகுதிக் கழகச் செயலாளர் புண்ணியமூர்த்தி, மண்டலச் செயலாளர் ராஜேஷ் கண்ணன், மாநில மகளிரணி துணைச் செயலாளர் பாக்கியலட்சுமி, 15 ஆவது வட்டச் செயலாளர் மகேந்திரன் உள்ளிட்ட பொறுப்பாளர்களும், இந்தியா கூட்டணியை சேர்ந்த கட்சிகளின் பிரதிநிதிகளும், பொதுமக்களும், திராவிடர் கழக மதுரை மாவட்ட அனைத்து பொறுப்பாளர்களும், தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தோழர் அழகுபாண்டி அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். நிகழ்ச்சியில் தொடக்கத்தில் தூறல் விழுந்தது. பின்னர் இயற்கையின் ஒத்துழைப்புடன் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.