காஞ்சிபுரம், செப். 7– காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறந்த உயிர்ம உழவர்களுக்கான நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நம்மாழ்வார் விருது
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வெளியிட்ட அறிக்கை:
உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் உழவர்களை ஊக்கப்படுத்துவதற்கும், கவுரவப்படுத்துவதற்கும் சிறந்த உயிர்ம உழவர்க்கான நம்மாழ்வார் விருது வழங்கும் திட்டம் 2023-2024ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2025-2026ஆம் ஆண்டிலும் இவ்வமையில் மூன்று உழவர்களுக்கு பாராட்டுப் பத்திரத்துடன் தலா ரூ. 2 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
இந்த விருதுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் ஏக்கர் பரப்பில் உயிர்ம வேளாண்மையில் சாகுபடி செய்ய வேண்டும். முழு நேர உயிர்ம உழவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் உயிர்ம வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும். உயிர்ம வேளாண்மைக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
செப். 15ஆம் தேதிக்குள்….
இந்த விருதுக்கு பதிவு செய்ய விரும்பும் உழவர் அக்ரிஸ்நெட் வலைதளத்தில் செப். 15ஆம் தேதிக் குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான பதிவுக் கட்டணம் ரூ.100.
விருதுக்கு தேர்வு செய்யப்படும் தகுதிகள்: உயிர்ம வேளாண்மையில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருக்க வேண்டும். மண்ணில் உயிர்ம கரிமச் சத்து அளவு 1.5 சதவீதத்துக்கு அதிகமாக இருத்தல் வேண்டும். செலவு ஆதாய விகிதம் குறைந்த பட்சம் 1.2 ஆக இருத்தல் வேண்டும்.
உயிர்ம வேணண்மையில் ஓர் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்திருத்தல் வேண்டும். வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களை உயிர்ம வேளாண்மை முறையில் சாகுபடி செய்திருக்க வேண்டும். ஒருங்கிணைந்த பண்ணை முறையைப் பின்பற்றி வேளாண்மையை மேற்கொள்ளுதல் வேண்டும்.
விதைகள் உற்பத்தி, இயற்கை இடுபொருள் உற்பத்தி ஆகியவற்றில் தற்சார்புடன் இருத்தல் வேண்டும்.
இயற்கை வேளாண் இடுபொருள்: உற்பத்தி செய்யப்பட்ட இயற்கை வேளாண் இடுபொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்து லாபம் ஈட்டுபவராக இருத்தல் வேண்டும். பாரம்பரிய விதைகளைப் பயன்படுத்துபவராக இருத்தல் வேண்டும். அதிக அளவு உழவர்களை உயிர்ம வேளாண்மையில் ஊக்கப்படுத்தி பின்பற்றச் செய்திருத்தல் வேண்டும்