அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
சென்னை, செப்.7– ஒன்றிய அரசு நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பேணிக்காக்கும் வகையில் ‘பி.எம் மின்சார டிரைவ்’ மற்றும் பி.எம். மின்சார பேருந்து சேவை என்ற 2 திட்டங்களை செயல்படுத்துகிறது. அதில் பி.எம். மின்சாரப் பேருந்து சேவை திட்டம் 2023ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
அதற்காக ஒன்றிய அரசு ரூ.57 ஆயிரத்து 613 கோடி ஒதுக்கியது. 2 பிரிவுகளாக செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் ஒரு பிரிவாக 10 ஆயிரம் மின்சாரப் பேருந்துகள் 169 நகரங்களில் இயக்கப்படும்.
40 லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20 லட்சம் முதல் 40 லட்சம் வரையிலான மக்கள் தொகை நகரங்களுக்கு தலா 150 பேருந்துகளும், 5 லட்சம் முதல் 20 லட்சத்திற்கு தலா 100 பேருந்துகளும், 5 லட்சத்திற்கு கீழ் உள்ள நகரங்களுக்கு தலா 50 பேருந்துகளும் வழங்கப்படும்.
இந்த மின்சாரப் பேருந்துகளை நிதி கொடுத்து வாங்கி பராமரித்து இயக்கும் பொறுப்பு தனியாருக்கு வழங்கப்பட்டு உள்ளது. ஒப்பந்தம் மூலம் இந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். 2037ஆம் ஆண்டு வரை அவர்கள் அந்தப் பேருந்துகளை இயக்க வேண்டும். ஒரு கிலோ மீட்டருக்கு கட்டணம் என்ற அடிப்படையில் அந்தப் பேருந்துகள் இயக்கப்படும் தூரத்திற்கு ஒன்றிய அரசு பணம் வழங்கி விடும்.
அதே நேரத்தில் பயணச் சீட்டு வருமானம், பேருந்து மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயை மாநில அரசு முழுமையாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், சார்ஜிங் நிலையம் அமைப்பது போன்ற கட்டமைப்பு வசதிகளுக்கு மாநில அரசு தான் பொறுப்பு. இருந்தாலும், அதற்கான நிதி உதவியையும் ஒன்றிய அரசு வழங்கும்.
ஒன்றிய அரசின் இந்தத் திட்டத்திற்கு பல மாநிலங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இதுவரை பல்வேறு மாநிலங்களுக்கு 7 ஆயிரத்து 293 பேருந்துகள் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டு, அதில் 6,518 பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. அது தவிர சார்ஜிங் வசதி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த 8 மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு ரூ.437 கோடி விடுவித்துள்ளது.
ஒன்றிய அரசு, இந்தப் பேருந்து திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 11 நகரங்களை தேர்வு செய்துள்ளது. அந்த அடிப்படையில் கோவைக்கு 150 மின்சாரப் பேருந்துகள், மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகியவற்றுக்கு தலா 100 பேருந்துகளும், அம்பத்தூர், ஆவடி, தூத்துக்குடி, நெல்லை, வேலூர் ஆகியவற்றுக்கு தலா 50 பேருந்துகளும் என மொத்தம் 900 மின்சாரப் பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசு, பிரதமரின் இந்த மின்சாரப் பேருந்துகளை தங்களது மாநிலத்திற்கு வேண்டாம் என்று நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஒன்றிய அரசின் அதிகாரி ஒருவர் கூறும் போது, பிரதமர் மின்சாரப் பேருந்துகள் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 9 சதவீத பேருந்துகள் வழங்கப்பட்டு உள்ளது. அதற்காக 11 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது.
ஆனால், தமிழ்நாடு அரசுக்கு இந்த திட்டத்தின் கீழ் பேருந்துகள் பெற விருப்பம் இல்லாததால் அவர்களிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை என்றார். இந்த நிலையில், இது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்கள் அமைச்சர் சிவசங்கரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், ஒன்றிய அரசு திட்டத்தின் கீழ் செயல்படுத்தினால் நிதி சரியாக வராது. பெயர்கள் மட்டும் அவர்களுடையதாக இருக்கும். எனவே தான் தமிழ்நாடு அரசு சுயமாகவே மின்சாரப் பேருந்து திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.