சென்னை, செப். 7– ஈரோடு, கோபிச்செட்டி பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மேனாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், “கட்சியிலிருந்து வெளியே சென்றவர்களை 10 நாட்களுக்குள் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களை இணைத்து கட்சியை ஒன்றுபடுத்த நான் பாடுபடுவேன்” என தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கு சசிகலா, பன்னீர்செல்வம் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் செங்கோட்டையனின் மாவட்ட செயலாளர் பதவி மற்றும் அமைப்பு செயலாளர் பதவிகளை பொதுச்செயலாளர் பழனிசாமி பறித்துள்ளார். இதைத் தொடர்ந்து செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்யபாமா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர், தங்களையும் கட்சி பதவிகளில் இருந்து நீக்குமாறு பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர். மேலும் கட்சியின் அண்மைக்கால போக்கு பிடிக்காமல், தமிழ்நாடு முழுவதும் கட்சி பணிகளில் இருந்து விலகியுள்ள அ.தி.மு.க.வினர் செங்கோட்டையனின் வலியுறுத்தலுக்கு பலம் சேர்க்க குரல் கொடுத்து வருகின்றனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர்கள் கூறியது:
பழனிசாமி தனது சுயநலத்துக்காகவே கட்சி ஒன்றிணைப்புக்கு மறுக்கிறார். கட்சி நலனுக்காக தனது பிடிவாதத்தை தளர்த்த வேண்டும். எதற்கெடுத்தாலும், அம்மாவின் அரசு, எனது தலைமையிலான அம்மாவின் அரசு என்றெல்லாம் பேசி வரும் பழனிசாமி, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட நிரந்தர பொதுச்செயலாளர் பதவியை பறித்து தான்
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். 2026 தேர்தலில் வெற்றி பெற கட்சி ஒன்றிணைப்பு அவசியம். செங்கோட்டையனின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
பக்தியாவது சக்தியாவது!
மலைக் கோவிலுக்கு சென்ற ஆறு பக்தர்கள்
ரோப் கார் கேபிள் அறுந்து உயிரிழப்பு
ரோப் கார் கேபிள் அறுந்து உயிரிழப்பு
ஆமதாபாத், செப்.7– மலைக்கோவிலுக்கு சென்றபோது ரோப் கார் கேபிள் அறுந்து விழுந்து பக்தர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம் பஞ்ச்மகால் மாவட்டம் பாவகத்தில் மாகாளி கோவில் உள்ளது. 800 அடி உயர மலையில் அமைந்துள்ள இந்த மலைக்கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து 2 ஆயிரம் படிக்கட்டுகள் வழியாக செல்ல முடியும். அல்லது அந்த கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலமாக செல்லவும் வசதி உள்ளது.
இந்தநிலையில் தற்போது கோவிலை புனரமைக்கும் பணி நடந்துவருகிறது. இதற்கு தேவையான கட்டுமான பொருட்கள் ரோப் கார் உதவியோடு அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு வருகிறது. அந்தவகையில் சிமெண்டு மற்றும் மணல் மூட்டைகள், கடப்பாரை, மண்வெட்டி உள்ளிட்ட கட்டுமான பொருட்களுடன் தொழிலாளர்கள் 4 பேர் அடிவாரத்தில் இருந்து ரோப் காரில் ஏறினர்.
6 பேர் உயிரிழந்தனர்
உடன் 2 பக்தர்களும் வந்துள்ளனர். மதியம் 3 மணியளவில் அந்த ரோப் கார் கோவில் நோக்கி மேலே சென்று கொண்டிருந்தது. அப்போது அதிக பாரம் காரணமாக அந்த ரோப் கார் ‘கிடுகிடு’வென ஆடியது.
இதனால் ரோப் காரில் சென்றவர்கள் பயத்தில் அலறினர். அப்போது கண்இமைக்கும் நேரத்தில் ரோப் கார் கேபிள் அறுந்து விழுந்தது. அந்த ரோப் கார் சுமார் 60 அடி உயரத்தில் இருந்து கீழே காட்டுப்பகுதியில் விழுந்தது. இந்த விபத்தில் ரோப் காரில் இருந்த பக்தர்கள் உள்பட 6 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். மலைக்கோவிலுக்கு சென்றபோது ரோப் கார் கேபிள் அறுந்து விழுந்து 6 பேர் உயிரிழந்த சம்பவம் பக்தர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.