சென்னை விமான நிலையத்தில் குளறுபடிகள் ஒன்றிய அமைச்சருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்

சென்னை, செப். 7– விமான நிலையத்தின் குளறுபடிகளுக்கு தீா்வு காண கோரி ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சா் கிஞ்சரப்பு ராம்மோகனுக்கு தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் 6.9.2025 அன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சென்னை விமான நிலையத்தில் நிறுத்தப்படும் மதுரை செல்லும் விமானங்களுக்கு பயணி செல்வதில் மன உளைச்சல் ஏற்படுகிறது. மதுரைக்கு செல்லும் ஏடிஆா் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு பயணிகள் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்படுகின்றனா். விமானங்கள் நீண்ட தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளதால் அதை அடைய நீண்ட நேரம் ஆகிறது.

மேலும், விமானங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் பேருந்து களில் இருக்கைகள் குறைவாகவே உள்ளதால், முதியவா்கள், குழந்தை கள் நின்று கொண்டே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

சென்னை விமான நிலையத்தின் 1,301 ஏக்கா் நிலப்பரப்பின் சுற்றுச்சுவா் ஒட்டியுள்ள ஒட்டு மொத்த பாதையையும் கடந்து கடைக் கோடியில் இந்த விமானங்கள் நிறுத்தப்படுவதற்கான காரணம் வாகன நிறுத்தக் கட்டணம் குறைவு என்பதாகக் கூறப்படுகிறது. இதனால் பயணிகளுக்கு எந்த பயனும் இல்லை என்பதும், கட்டணம் கட்டுக்குள் இல்லாதிருப்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே. அதுமட்டுமல்லாமல் சென்னையில் இருந்து மதுரை, தூத்துக்குடி மற்றும் திருச்சி ஆகிய ஊா்களுக்கு செல்ல ஏடிஆா் விமானங்களே இயக்கப்படுகின்றன.

அதிக அளவில் மக்கள் பயணிக்கும் இந்த வழித்தடங்களில் ஏா் பஸ் ரக விமானங்கள் இயக்கப் படுவதே சரியாக இருக்கும். எனவே, இந்தப் பிரச்னைகளுக்கு உடனடியாக தீா்வு காண வேண்டும் என அவா் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *