சென்னை, செப்.7– தமிழ்நாட்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) மூலம் நவீன உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக 9.7 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது.
சென்னையில் நடக்கவுள்ள “சென்னை ஓபன்” டென்னிஸ் போட்டிக்கு முன்னதாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள SDAT உடற்பயிற்சி கூடம் புதுப்பிக்கப்படும். மாநிலம் முழுவதும் 25 உடற்பயிற்சி கூடங்கள் புதுப்பிக்கப்பட உள்ளன. இதன் மூலம் விளையாட்டு வீரர்கள் குறைந்த செலவில் தரமான பயிற்சி பெற முடியும்.
SDAT – தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம். இவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள உடற்பயிற்சி கூடங்களை நவீனமாக்க திட்டமிட்டுள்ளனர். மொத்தம் 9.7 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வேளச்சேரியிலும், நுங்கம்பாக்கத்திலும் இரண்டு உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளன. நுங்கம்பாக்கத்தில் டென்னிஸ் ஸ்டேடியம் இணைந்துள்ளது.
ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாதன் கூறுகையில், “SDAT – கட்டுப்பாட்டில் இருக்கிற எல்லா உடற்பயிற்சி கூடங்களும் குளிரூட்டப்பட்டு, நவீன உபகரணங்களோடு மேம்படுத்தப்படும். பெயிண்டிங், தரை தளம், உபகரணங்கள் மாற்றம் போன்ற வேலைகள் ஏற்கெனவே பல மாவட்டங்களில் நடந்து வருகிறது. SDAT மாவட்ட விளையாட்டு வளாகங்களில் இருக்கும் உடற்பயிற்சி கூடங்கள் மேம்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ளன”
வேளச்சேரியில் இருக்கிற வளாகத்தில் எல்லா கண்ணாடி பேனல்களையும் மாற்றி, புதிதாக விளக்குகள், விரிப்புகள் அமைக்கப்படுகின்றன. உடம்பு முழுக்க பயிற்சிக்கு ஹைட்ராலிக் உபகரணங்கள் வைக்கப்படும். தினமும் சுமார் 100 விளையாட்டு வீரர்கள் இந்த பயிற்சி மய்யத்துக்கு வருகிறார்கள். மாவட்ட, மாநில, தேசிய விளையாட்டு வீரர்களுக்கு இது இலவசம்.
நுங்கம்பாக்கம் மய்யத்தில் மரத்தாலான தரை அமைக்கப்படும். வலிமை பயிற்சி உபகரணங்களான டம்பல்ஸ், பார்பெல்ஸ், கெட்டில்பெல்ஸ், மெடிசின் பால்ஸ், ரெசிஸ்டன்ஸ் பேண்ட்ஸ் போன்றவை வைக்க திட்டமிட்டு உள்ளனர். வெடி சக்திக்கு (explosive power) தேவையான மெடிசின் பால்ஸ், இருதய ஆரோக்கியம் மற்றும் சுறுசுறுப்புக்கு தேவையான ட்ரெட்மில், எலிப்டிகல், சுறுசுறுப்பு தடைகள், ரியாக்ஷன் பால்ஸ் போன்ற உபகரணங்களும் வைக்கப் போகிறார்கள். இதெல்லாம் டென்னிஸ் வீரர்களுக்கு உதவியாக இருக்கும்.
மதுரை, தூத்துக்குடி, கோயம்புத்தூர், திருச்சி போன்ற மாவட்டங்களிலும் இந்தத் திட்டம் இருக்கிறது. ஒவ்வொரு மய்யத்துக்கும் 32 லட்சம் முதல் 50 லட்சம் வரைக்கும் செலவு செய்யப்படும்” என்றார்.
இது தொடர்பாக SDAT பயிற்சியாளர் வினோத் மேலும் கூறுகையில், “சேத்துப்பட்டில் இருக்கும் வசதியும் மேம்படுத்த வேண்டும். உபகரணங்கள் எல்லாம் பழுதாயிடுச்சு. நிறைய விளையாட்டு வீரர்கள் இப்போ நேரு ஸ்டேடியத்துக்கு தான் போறாங்க. சேத்துப்பட்டுல இருக்கிற உடற்பயிற்சி கூடத்தை மேம்படுத்தினா, இங்க நிறைய பேர் வருவாங்க. நேரு ஸ்டேடியத்துல இருக்கிற கூட்டமும் குறையும்” என்றார்.