லண்டன், செப்.7– லண்டனில் அம்பேத்கர் இல்லத்தை சுற்றிப் பார்த்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்கு இருந்த அரிய ஒளிப் படங்களை பார்த்து ரசித்தார்.
அம்பேத்கர் இல்லம்
ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது இங்கிலாந்தில் இருக்கிறார். இந்த நிலையில், அவர் அம்பேத்கர் லண்டனில் படித்தபோது தங்கியிருந்த வீட்டை பார்வையிட்டார்.
பின்னர், அதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கங்களில் ஒளிப்படங்களை வெளியிட்டு பதிவிட்டுள்ளதில் கூறியிருப்பதாவது:-
பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் லண்டன் பொருளியல் பள்ளியில் (எல். எஸ்.இ.) படிக்கும் போது, தங்கி இருந்த டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இல்லத்தைப் பார்வையிடும் வாய்ப்பினைப் பெற்றேன்.
மிகவும் சிலிர்ப்பூட்டியது
அந்த இல்லத்தின் அறைக ளின் உள்ளே நடந்து செல்லும்போது பெரும் வியப்பு என்னுள் மேலோங்கியது.
இந்தியாவில் ஜாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட ஓர் இளைஞன், இங்கு தான் தனது அறிவால் வளர்ந்து, லண்டனில் அனைவரது மரியாதையையும் பெற்று, பின்னர் இந்தியாவின் அரசியல் அமைப்பையே வடித்துத் தரும் நிலைக்கு உயர்ந்தார்.
குறிப்பாக, தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் உரையாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒளிப்படத்தை அங்கு கண்டது மிகவும் சிலிர்ப் பூட்டியது.
இப்படியொரு உணர்வு எழுச்சி மிகுந்த தருணம் வாய்க்கப் பெற்றதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்!
ஜெய் பீம்!
இவ்வாறு அதில் பதிவிட்டு இருந்தார்.
