கொல்லம், செப்.7 கேரளத்தில் கொண்டாடப்படும் ஓணம் விழாவின்போது, கொல்லம் மாவட்டத்தில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற வாசகம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் கொடியுடன் அத்தப்பூ கோலம் போடப்பட்டது. இதனை தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த 27 பேர் மீது கேரள காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஒணத்தின்போது பூக்களால் போடப்படும் அத்தப்பூ கோலம் மிகவும் புகழ் பெற்றது. கொல்லம் மாவட்டம் முத்துப்பிலாக்கிலுள்ள பார்த்தசாரதி கோயிலில் சர்ச்சைக்குரிய வகையில் கோலம் போடப்பட்டதை அறிந்த காவல்துறையினர், அதனை உடனடியாக அகற்றும்படி உத்தரவிட்டனர்.
ஆனால், இதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மறுத்ததால், இந்திய தண்டனைச் சட்டத்தின் (BNS) கீழ், 223 (அரசு உத்தரவை மீறுதல்), 192 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்குடன் செயல்படுதல்) மற்றும் 3(5) ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் ஓணம் கொண்டாடப்படும்போது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மதவெறியுடன் நடந்து கொண்ட இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் விவாதத்தையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.