கால்நடை ஆய்வாளர் பணிக்கு புதிய கல்வித் தகுதி

சென்னை, செப். 7– கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை ஆய்வாளர் பதவிக்கு புதிய கல்வித்தகுதி நிர்ணயித்து அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2-வில் உயிரியல் அல்லது தாவரவியல்- விலங்கியல் பாடங்களுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் செயலர் என்.சுப்பையன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:

கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை ஆய்வாளர்- கிரேடு 2 (Livestock Inspector) நேரடி நியமனமும் பதவி உயர்வும் 9:1 என்ற விகிதாச்சார அடிப்படையில் மேற்கொள்ளப்படும். நேரடி நியமனத்துக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு பிளஸ் 2-வில் உயிரியல் பாடம் அல்லது தாவரவியல், விலங்கியல் பாடங்களை படித்திருக்க வேண்டும்.

5 ஆண்டு பணி அனுபவம்: பதவி உயர்வை பொருத்தவரையில் கால்நடை பராமரிப்புத் துறையில் உதவியாளர்களாக பணியாற்றுவோர் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்று மேற்குறிப்பிட்ட கல்வித் தகுதியை பெற்றிருந்தால் பதவி உயர்வுக்கு தகுதியுடையவர் ஆவர். நேரடி நியமனம் மூலமாகவோ அல்லது பதவி உயர்வு வாயிலாக கால்நடை ஆய்வாளர் பணிக்கு நியமிக்கப்படுவோர் தகுதிகாண் பருவத்துக்குள் 11 மாத கால கால்நடை ஆய்வாளர் பயிற்சி முடிக்க வேண்டும். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *