ஜகார்த்தா, செப். 7– இந்தோனேசிய Gojek நிறுவனத்தின் நிறுவனரும், அந்நாட்டின் மேனாள் கல்வி அமைச்சருமான நடியம் மகரிம், ஊழல் குற்றச்சாட்டில் தடுப்புக்காவல் சட்டத்தில் கைதாகி உள்ளார்.
2019 முதல் 2024 வரை மகரிம் கல்வி அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், கூகுள் குரோம்புக் மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மகரிம், கூகுள் நிறுவனத்தின் பிரதிநிதிகளை ஆறு முறை சந்தித்த பிறகு இந்த கொள்முதல் ஆணையை வெளியிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரத்தைத் தனது சுயலாபத்திற்காகப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 1.98 டிரில்லியன் இந்தோனேசிய ரூபியா (சுமார் $155 மில்லியன் சிங்கப்பூர் டாலர்) இழப்பு ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு ஏதுவாக, மகரிம் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 20 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தற்காப்பு அமைச்சுக்கு ‘போர் அமைச்சு’ எனப் பெயர் மாற்ற டிரம்ப் திட்டம்
வாசிங்டன் டிசி, செப். 7- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அந்நாட்டின் தற்காப்பு அமைச்சுக்கு ‘போர் அமைச்சு’ எனப் புதிய பெயரைச் சூட்டும் நிர்வாக ஆணையில் கையெழுத்திட திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
டிரம்பின் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், தற்காப்பு அமைச்சரான பீட் ஹெக்செத் மற்றும் தற்காப்பு அமைச்சு ஆகியவற்றுக்குப் புதிய பெயர்கள் வழங்கப்படும். அதன்படி, தற்காப்பு அமைச்சர், ‘போர் அமைச்சின் செயலாளர்’ என்றும், தற்காப்பு அமைச்சு ‘போர் அமைச்சு’ என்றும் அழைக்கப்படும். இதேபோல், தற்காப்பு அமைச்சின் துணைச் செயலாளர், ‘போர் அமைச்சின் துணைச் செயலாளர்’ எனப் பெயர் மாற்றம் பெறுவார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்காவில் ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டன. அப்போது, 1949ஆம் ஆண்டில் ‘போர் அமைச்சு’ என்ற பெயர் ‘தற்காப்பு அமைச்சு’ என மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.