ஜெயங்கொண்டம், செப். 7– ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 6 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், முதல்வர் வழிகாட்டுதலை முன்வைத்து, சமூகப் பணியில் ஈடுபட்டனர்
அவர்கள் ஹெலன் கெல்லர் சிறப்பு பள்ளி (காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர் பள்ளி), அம்மா காப்பகம் தத்தனூர் வேலா இல்லம் விளாங்குடி ஆகிய இடங்களில் உள்ள முதியோர்களுக்கும் மாண வர்களுக்கும் அன்புடன் தேவையான உணவு பொருட்களை வழங்கினர்.
இந்த நிகழ்வின் மூலம் மாணவர்கள், “சமூகத்திற்கு சேவை செய்வதே கல்வியின் உண்மையான நோக்கம்” என்ற பெரியாரின் வழிமுறையை உணர்ந்து செயல்படுத்தினர். இந்த நிகழ்வால் அந்த இல்லங்களில் உள்ள சிறப்பு தேவையுடைய மாணவர்களும், முதியோர்களும் பாதுகாவலர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். ஒரு நாள் எனும் சிறிய காலத்தில் தான், ஆனால் அந்த பரிவும், அன்பும் அவர்களின் மனதில் நிலைத்துத் தங்கியது.
இந்த நிகழ்வின் மூலம், மாணவர்கள் சமூகத்தில் சேவை செய்வதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, “கல்வி என்பது அறிவை மட்டுமல்ல, பண்பையும், பண்பாட்டையும் வளர்க்கும் ஒரு பயணம்” என்பதற்குச் சான்றாக செயல்பட்டனர். பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் இந்த மாணவர்களின் சமூகப் பங்களிப்பை பாராட்டினர்.