இளங்கோவன் வசனம் எழுதிய ஜூபிடரின் ‘கண்ணகி’ (1942) படத்திலிருந்து கதையோட்டத்தை நகர்த்தும் முக்கியக் கருவியாக உயர்ந்தது உரையாடல். சென்னை நியூடோன் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்ட இப்படத்தின் வசனகர்த்தாவான இளங்கோவனுக்கு 1500 ரூபாய் ஊதியம்! கோவலனாக நடித்த நாயகன் பி.யு.சின்னப்பாவுக்கு 9,250/- ரூபாய் ஊதியம். கண்ணகியாக நடித்த கண்ணாம்பாவுக்கு 20,000/- ரூபாய்!
கோவலன்- கண்ணகி திருமணக் காட்சியுடன், சென்னை நியூடோன் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு தொடங்கிய போது சின்னப்பாவுக்கு 26 வயது. கண்ணாம்பா வுக்கு 31. இதை விட ஆச்சரியம், முதிய பவுத்தப் பெண் துறவியாக, கண்ணகியைப் பார்த்து ‘மகளே..’ என்று அழைத்து நடித்தவர் 16 வயதே ஆகியிருந்த யு.ஆர். ஜீவரத்னம். உயரத்திலும் சின்னப்பாவை விட 7 அங்குலம் உயரமானவராக இருந்தார் கண்ணாம்பா. சின்னப்பா அமரும் இருக்கைகளின் கால் அளவை உயர்த்தி இந்தப் பிரச்சினையைச் சரிசெய்தனர் படத்தை இயக்கிய எம்.சோமசுந்தரம் -ஆர். எஸ்.மணி இருவரும்.
திரைக்கதையில் கண்ணகியின் பிறப்புக்குப் புராண இடைச்செருகல் செய்தது போலவே, மாதவி யிடம் கோவலன் சென்று சேர்ந்த நிகழ்விலும் சிலப்பதிகாரத்தை எடுத்தாளவில்லை இயக்குநர்கள். கண்ணகி -கோவலன் திருமணத்துக்கு மறுநாள் நடை பெறும் உறவினர், நண்பர்கள் கூடுகையில் மாதவி நாட்டிய நாடகம் நடத்துகிறாள். நிகழ்ச்சியின் முடிவில் தன் கழுத்தில் அணிந்திருந்த மணிமாலையைக் கழற்றி வீச, அது கோவலனின் கழுத்தில் விழுகிறது. கோவலன் அதைக் கழற்ற நினைத்தும் முடியவில்லை. அந்தக் கணத்தில் கண்ணகியின் முன்னிலையிலேயே கோவலனைக் கணவனாக உரிமை கோருகிறாள் மாதவி. கோவலனோ கொதித்தெழுகிறான். அப்போது இருவருக்குமான அனல் பறக்கும் உரையாட லில் இளங்கோவனின் திரைவசனத் தமிழ் கோபத் தாண்ட வம் ஆடியது.
உனக்கு என்ன வேண்டும், கேள் மாதவி?
‘தாங்கள்தான் எனக்கு வேண்டும்’
‘என்ன…!?’
‘நான் உங்கள் மனைவியல்லவா?’
‘நியாயமான முறையில் வந்தவளா?’
‘பொதுச் சபையில் மாலையிட்டிருக்கிறேன்.. நியாய மானவள் இல்லையா?’
இதெல்லாம் உன் மனதின் கற்பனை!’
‘ஏன் கனவென்றுதான் சொல்லுங்களேன்..’
‘அப்படித்தான் வைத்துக் கொள்ளேன்..’
‘ஆமாம்.. நான் இங்கே ஆட வந்ததும் கனவு. மாலையை வீசியதும் கனவு.. அது உங்கள் கழுத்தில் விழுந்ததும் கனவு.. நீங்களும் கனவு.. நானும் கனவு.. இந்தச் சபை யோரும் கனவு.. எல்லாம் கனவு.. அப்படித்தானே?
‘உன்னை மாதிரி அலங்கா ரமாகப் பேச எனக்குத் தெரி யாது.’
‘அநியாயமாகப் பேசத் தெரியுமோ?
‘நீயொரு தாசி..’
‘ஜாதியில் தானே..?
‘காசாசைப் பிடித்தவள்.’
‘உங்களைப் போன்ற வணிகர்களை விடவா?”
‘என்ன துணிச்சல்?!’
‘பெண் தன் உரிமையைக் கேட்பது.. ஆணின் கண்களுக்குத் துணிச்சல்!’
என மாதவியை விடு தலைக்காக ஏங்கும் ஒரு கலையரசியாகக் காட்டியது வசனம்
இடைச்செருகல்களைக் கடந்து ‘கண்ணகி’யில் கண்ணாம்பா – சின்னப்பா, மாதவியாக நடித்த எம்.எஸ்.சரோஜா உள்பட அனைவரும் கதாபாத்திரங்களின் மனத் துடிப்பை உணர்ந்து அவையாகவே மாறி யிருந்தார்கள். அதற்கு இளங்கோவனின் உயிர்ப்பும் உணர்வும் எளிமைப்படுத்தப்பட்ட இலக்கிய மதிப்பும் கொண்டிருந்த உரையாடல் காரணமாக அமைந்தது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, பாண்டியன் நெடுஞ்செழியனின் அவையில் தலைவிரி கோலமாக நின்று, தன் கணவன் கள்வன் அல்ல என்பதைத் தன் காற்சிலம்பை உடைத்தெறிந்து அரசனுக்கு நிரூபித்தபின் கண்ணகி, சித்தம் கலங்கி அவனிடம் நீதி கேட்கும் காட்சியில் அவளின் வெஞ்சினம் இளங்கோவனின் வசனங்களில் வெடித்துச் சிதறியது…
‘‘இப்போது எங்கே உன் நீதி? எங்கே உன் நேர்மை? எங்கே உன் தீர்ப்பு? எங்கே உன் கொற்றம்? எங்கே உன் மமதையான பேச்சு? பசுவைக் கொன்று கீதாவுபதேசம் செய்யும் பார்த்திபனே! நீ ஒரு நீதிமானா? இதுவொரு நீதிமன்றமா? ஆராயாது தீர்ப்பிட்ட நீ ஓர் அரசனா? மகிஷியின் வார்த்தையில் மயங்கி, மதியிழந்த உனக்கு ஒரு மகுடமா?’’ எனத் தீப்பொறிகளாகப் பரவி மதுரையை எரித்த பெருந்தீயின் வெப்பத்தை இளங்கோவன் தன் சொற்களுக்குள் தகிக்கவைத்தார்.
அண்ணாவின் விமர்சனமும்–
ஜூபிடரின் எதிர்வினையும்
ஜூபிடரின் எதிர்வினையும்
சிலப்பதிகார மூலத்தில் தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு புராண, கற்பனை இடைச்செருகல்களைச் செய்தது, தமிழ்ப் புலவர்களையும் ஆய்வறிஞர்களையும் கோபம் கொள்ள வைத்தது. ஆனால், படம் தாறுமாறாக வெற்றி பெற்றது. 1942 இல் காஞ்சிபுரத்தில் மய்யம் கொண்டிருந்த அறிஞர் அண்ணா, தன்னுடைய திராவிட நாடு இதழில் ‘கண்ணகி’ படத்தில் கற்பனை என்கிற பெயரில் பகுத்தறிவுக்குத் துளியும் பொருந்தாத முரண்பாடுகளைக் காட்சிகளாக்கியது பற்றிப் பத்துப் பக்கங்களுக்கு ‘இஞ்சி பத்தனே மேல்’ என்கிற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார். கடும் விமர்சனத் தொனியுடன் ஓர் ஆய்வுக் கட்டுரைபோல் ‘கண்ணகி’ திரைப்படத்தை அதில் காய்ச்சி எடுத்திருந்தார். இதைப் படித்துப் பார்த்த படத்தின் இயக்குநர்கள் சோமுவும் மணியும் அண்ணா எழுதியதில் துளியளவும் தவறில்லை’ என்று புகழ்ந்து உரைத்தார்கள்.
இந்த ஏற்புதான் பின்னாளில் ஜூபிடரில் அண்ணாவின் நுழைவுக்கு வாசலாக அமைந்து போனது. அண்ணா, படத்தின் சுவாரசியமான கற்பனை இடைச்செருகல்களைக் கண்டித்திருந்த அதேநேரம், இளங்கோவனின் வசனத்தைப் பாராட்டத் தவறவில்லை. தமிழ்க் கவிதை மரபின் உரைநடை நீட்சியாக உருவான இளங்கோவனின் திரைப்பட உரையாடலின் பாதையில், அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி, தொடங்கி ஆரூர் தாஸ் வரையில் வசன சினிமாவின் பாரம்பரியம் தொடர்ந்தது. அதன் பலனாக, பல கதை, வசனகர்த்தாக்களுக்கு 50, 60களின் தமிழ் சினிமாவில் கிளை விரிந்ததுடன் அவர்களுக்கு நட்சத்திர மதிப்பையும் சேர்த்தது.
அரசியலில் ஊறிய நாடகமும் சினிமாவும்!
1937 இல் சென்னை ராஜதானி மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த ராஜாஜி, பள்ளிகளில் கொண்டுவந்த கட்டாய இந்திப் பாடத்தை எதிர்த்துப் போராடினார் ராஜாஜியின் நண்பரான பெரியார்
ஈ.வெ.ரா. அவருக்குப் பக்கத் துணையாக நின்றார் அண்ணா. அதற்காக 4 மாதச் சிறைத் தண்டனையும் பெற்றார். அப்போது தொடங்கி, சி.என். அண்ணாதுரை என்கிற முதுகலைப் பட்டதாரியின் அரசியல் கருத்தாக்கம் எப்படிப்பட்டது என்பதை விரைவாகவும் விரிவாகவும் தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்தவை அவருடைய ‘திராவிட நாடு’ பத்திரிகையின் எழுத்துகளே!
1942இல் ‘கண்ணகி’ வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருந்த அதே காலக் கட்டத்தில்தான், அண்ணா ஆசிரியராகப் பொறுப்பேற்றிருந்த ‘திராவிட நாடு’ வார இதழில் அவருடைய எழுத்துகள் வெளிவரத் தொடங்கின. இருபதுக்கும் அதிகமான புனைபெயர்களில் கட்டுரை, சிறுகதை ,விமர்சனம், ஓரங்க நாடகம் எனத் திராவிடநாடு பத்திரிகையைத் தான் சார்ந்து நிற்கும் திராவிட இயக்க அரசியல் எழுத்தால் நிறைத்தார்.
தொடக்கத்தில் ‘ரங்கோன் ராதா’, ‘குமாஸ்தாவின் பெண் அல்லது கொலைகாரியின் குறிப்புகள்’, பார்வதி பி.ஏ’, ‘கலிங்க ராணி’ எனச் சமூகத்தின் பிரதிபலிப்பாகவும், மறைக்கப்பட்ட வரலாற்றை, கற்பனைச் சரித்திரப் பின்னணியிலும் தொடர் கதை களாக எழுதினார். முடிவில் அவற்றை நாவல்களாக நூல் வடிவிலும் வெளியிட்டார். அதேநேரம் காங்கிரஸ் இயக்கம் சுதந்திரப் போராட்டத்துக்கு நாடகக் கலையை எவ்வளவு வலிமையான கலை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என்பதைக் கண்ணுற்றார். சத்தியமூர்த்தியின் தலைமையில் நூற்றுக்கணக்கான நாடகக் கலைஞர்கள் காங்கிரஸின் போராளிகளா கவே இருந்தது அண்ணாவைக் கவர்ந்தது. கலையை அரசியலுக்குப் பயன்படுத்தும் காங்கிரசின் வெற்றிகரமான முன்மாதிரியை ஏன் திராவிட இயக்கம் தன் கருத்தியலைப் பரப்பக் கையிலெடுக்கக் கூடாது என்கிற முடிவுக்கு வந்து, திராவிட அரசியல் பிரச்சார ஆயுதமாக நாடகங்களை எழுதத் தொடங்கினார்.
புராண நாடகங்களையும் அதேநேரம் சமூக நாடகங்களையும் நடத்திவந்த டி.கே. சண்முகம் சகோதரர்களின் குழு மீது அண்ணாவுக்கு மதிப்பும் மரியா தையும் இருந்தது. அவர்களது குழுவினர் அரங்க நடிப்பில் ஆழ்ந்த பயிற்சியால் விளைந்த முதிர்ச்சியான நடிப்பைக் கொடுப்பதை கண்டு வியந்த அண்ணா, அவர்களை ‘திராவிட நாடு’ பத்திரிகையில் பாராட்டி எழுதினார். டி.கே.எஸ். குழுவினர் நடத்திவந்த குமாஸ்தாவின் பெண்’ நாடகத்தை, அவர்களிடம் அனுமதி பெற்று, அதில் தன்னுடைய பார்வையை ஏற்றி மீள் உருவாக்கமாக எழுதினார். குமாஸ்தாவின் பெண்’ தொடர்கதையில் அதன் நாயகியான காந்தா விதவையாகி, சமு கத்தின் முன்னால், கல்லடியைவிடக் கொடியச் சொல்லடிகளால் காயமுற்ற மனதுடன் வாழும் ஓர் அபலைப் பெண். அவளின் சமுக நிலையை, உரைநடையில் விடுதலையின் குமுறலாக வெடிக்க வைத்தார்:
நான் விதவையானேன்; சகுனத் தடையானேன்; சமுதாயத்தின் சனியனானேன். என் இளமையும் எழிலும் போகவில்லை; நான் அபலையானேன். தாலியிழந்தேன்; ஆனால் காய்ந்த தளிர் போலி ருந்தேனே அன்றி சருகாகிவிடவில்லை. வாடாத பூவாக இருந்தேன்; ஆனால் விஷ வாடையுள்ள மலரென்று உலகம் என்னைக் கருதிற்று. அது என்னுடைய குற்றமா?… எங்கள் ஏழ்மையைக் கண்டு உதவி செய்ய முன்வர யாருமில்லை. எனக்குத் தக்க ஆடவனைத் தேடித்தர ஒருவரும் வரவில்லை. என் வாழ்வு கொள்ளை போவதைத் தடுக்கவில்லை. எல்லாம் முடிந்து நான் விதவையானதும் என் விதவைத்தன்மைக் கெட்டுப் போகாமல் பார்த்துக்கொள்ளும்படி உபதேசிக்க, உற்றார் வந்தனர். என்னைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. எனக்கு வீடே சிறை; அப்பா, அம்மாவே காவலாளிகள். உறவினர்களே காவல்துறையினர் போல் ஆனார்கள். ஊரார் தண்டனை தரும் நீதிபதிகள் ஆனார்கள். இது உலகம் எனக்கு உண்டாக்கி வைத்த ஏற்பாடு. இதற்காகவா நான் பிறந்தேன்?’’ என்று கேட்ட காந்தாவின் குரலில் கோடிக்கணக்கான இளம் விதவைகளின் விடுதலைக் குரலை, அண்ணாவின் உரையாடல் கலக அரசியலாக முன்வைத்தது. கதையை நகர்த்தும் உரைநடை என்றாலும், கதாபாத்திரங்களுக்கு இடையிலான உரையாடல் என்றாலும் ‘அடுக்குச் சொல் வீரர்’ என்று அவருக்குப் பெயர் பெற்றுக் கொடுத்தது. அவரது முதல் நாடகமான ‘சந்திரோதயம்’, அவரை நோக்கி, தமிழ் சினிமாவின் மகா நடிப்பு மேதையாக உயர்ந்த வி.சி.கணேசன் என்கிற சிவாஜி கணேசனை அவரிடம் அழைத்துக்கொண்டு வந்தது.
நன்றி – ‘இந்து தமிழ் திசை’, 5.9.2025