திராவிட இயக்கத்தின் கோட்டை தொண்டராம்பட்டு!
தஞ்சை – பட்டுக்கோட்டை சாலையில் – மூன்று சாலைகள் சந்திக்கும் மதுக்கூர் பிரிவில் இருந்துதான், தொண்டராம்பட்டுக்குச் செல்ல வேண்டும். இந்த சாலைதானா என்ற அய்யத்திற்கிடமின்றி கழகக் கொடிகள், வாருங்கள்! வாருங்கள்! என்பதைப் போல், அங்கிருந்தே அசைந்தாடி நம்மை வரவேற்றன. இரட்டைக்குழல் துப்பாக்கியின் இன்னொரு குழலான தி.மு.க.வின், கருப்பு சிவப்புக் கொடிகளும் ஆங்காங்கே பறந்து வரவேற்றன. போதாததற்கு சுவரெழுத்துகளும் ஆங்காங்கே நிகழ்ச்சிக்கு கட்டியம் கூறிக்கொண்டிருந்தன.
‘பெரியார் நாடு’ என்று பெருமையுடன் பேசப்படுகின்ற உரத்த நாட்டில் மொத்தம் 58 ஊராட்சிகள் இருக்கின்றன. அதில் 48 ஊராட்சிகளில் திராவிடர் கழக – கிளைக் கழகங்கள் அமைந்துள்ளன. மீதியுள்ள ஊராட்சிகளிலும் அமைப்புகளை உருவாக்கும் பணிகளும் தொடர்ந்து கொண்டுள்ளன. நிர்வாக வசதிக்காக கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரத்தநாடு ஒன்றியத்தை தெற்கு, வடக்கு, வடக்குப் பகுதியில் உள்ள நகர்ப்பகுதி என்று மூன்று பகுதிகளாக பிரித்துக் கொடுத்துள்ளார். இந்த மூன்றில் ஒரு பகுதியான தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் தான், பெரியார் உலகத்திற்கு 10 லட்சம் நிதியளிப்புப் பெருவிழாவை, அக்டோபர் 4 ஆம் தேதி, செங்கல்பட்டு மறைமலை நகரில் நடைபெற இருக்கும், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.
உரத்தநாடு தெற்கு ஒன்றியத் தலைவர் த.செகநாதன் தலைமையில், மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், ஒன்றிய செயலாளர் மாநல்.பரம்சிவம், பெரியார் வீரவிளையாட்டுக் கழக மாநிலச் செயலாளர் கபடி நா.இராமகிருட்டிணன், பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் நெடுவை கு.அய்யாத்துரை உள்ளிட்ட நிதி திரட்டல் குழுவினர் உறுதுணையுடன் மிகச்சிறப்பாக நடத்தி முடித்திருக்கின்றனர். மேடையும் சுயமரியாதைச் சுடரொளிகள் தொண்டராம்பட்டு கிழக்கு கா. மாரியப்பன், கண்ணுகுடி கிழக்கு கே.கே.வீரப்பா, க.நடராசன், திருமங்கலக்கோட்டை கீழையூர் மணியகாரர் தி.பெருமாள், திருமங்கலம் தெரு கி.தியாகராசன், கண்ணுகுடி மேற்கு கா.தண்டாயுதபாணி ஆகியோர் நினைவு மேடையாக அமைத்திருந்தனர். ஆசிரியர் மேடை ஏறுவதற்காக சாய்வுதள பாதையும் அமைத்திருந்தனர். அப்படிப்பட்ட சிறப்பான நிகழ்வில்தான் கொடுத்த வாக்குறுதியைத் தாண்டி ரூ.17 லட்சம் வழங்கினார்கள்.
வரலாறு பேசும்
தொண்டராம்பட்டு பாரதி திடல்!
தொண்டராம்பட்டு என்பது, உரத்தநாடு ஒன்றியத் தில், சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்கள் எல்லாம் ஒன்று கூடுவதற்கேற்ப வசதி படைத்த ஒன்றிரண்டு பகுதிகளில் முக்கியமான ஒன்றாகும். தொண்டராம்பட்டு என்பது கண்ணுகுடி கிழக்கு, மேற்கு – தொண்டராம்பட்டு கிழக்கு, மேற்கு – திருமங்கலக்கோட்டை மேற்கு, கிழக்கு – நல்லூர் விஜயபுரம், ஆம்பலாப்பட்டு தெற்கு, வடக்கு – தெலுங்கன் குடிகாடு, புலவன்காடு, உறந்தைராயன் குடிகாடு, பாலமுத்தூர் குடிகாடு, புதூர், பூவத்தூர், வடசேரி, பேய்க்கரும்பன்கோட்டை ஆகிய ஊராட்சிகளுக்கு மய்யமான பகுதிதான் தொண்டராம்பட்டு. இதில் 1000 குடும்பங்கள் வசிக்கின்றன. அப்படிப்பட்ட சிறப்புப் பெற்ற தொண்டராம்பட்டு ஒரு கிராமம்தான். அந்த கிராமத்தில்தான் நிகழ்ச்சி ஒரு மாநாட்டைப் போல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொண்டராம்பட்டு கிராமத்துக்கு இவ்வளவு சிறப்பு இருப்பது போல், நிகழ்ச்சி நடைபெறும் பாரதி திடலுக்கு பல்வேறு சிறப்புகள் இருக்கின்றன. கிரிக்கெட்டுக்கு இருப்பது போன்று நமது மண்ணின் விளையாட்டான கபடிக்கு வாய்ப்பில்லையே என்று பேசிக்கொண்டிருந்தவர்களுக்கு, செயலளவில் ஒரு பெரும் மாற்றத்தை செய்து காட்டியிருக்கிறார்கள் தொண்டராம்பட்டின் தோழர்கள். அதாவது, இப்போது பரபரப்பாக நடைபெற்று வருகிற PRO KABADI என்பதற்கான விதை தொண்டராம்பட்டில் தான் ஊன்றப்பட்டு இருக்கிறது என்கிறார், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் உடற்கல்வி இயக்குநராக இருக்கும் முனைவர் ரமேஷ். அவரும் தொண்டாராம்பட்டு மண்ணின் மைந்தர் தான். இவருடைய பங்களிப்பில் இங்கு மாநில மற்றும் தேசிய அளவிலான கபடிப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதற்குப் பிறகுதான், இந்த PRO KABADI என்பதற்கு கிரிக்கெட்டுக்குச் சமமாக மதிப்பு ஏற்பட்டு, IPL SEASON என்பதைப் போல, PRO KABADI SEASON என்று இப்போது நடைபெற்று வருகிறது. இதற்குக் காரணம் தொண்டராம்பட்டுதான். அத்தகைய சிறப்புக்குரியது பாரதி திடல். அந்தத் திடலில்தான் பெரியார் உலகத்திற்கு ரூ.17 லட்சம் வழங்கப்பட்டது.
பெரியாரைப் பற்றிய எண்ணமே திருவிழாதான்!
இந்த பாரதி திடலுக்கு பின்புறம் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் 1970 களில் தந்தை பெரியார் இரண்டு முறை வந்து தங்கியிருந்திருக்கிறார். ஒன்று – தொண்டராம்பட்டு கிழக்கு வளையக்காடு பகுதியில், ”குடும்பக்கட்டுப்பாடும், சமுதாய சீர்திருத்தமும்” எனும் தலைப்பில் பேசியிருக்கிறார். மற்றொன்று – திருமங்கலக்கோட்டை கீழையூரில் பேசியிருக்கிறார். 1971 இல் தொண்டராம்பட்டு கிழக்குக் கீழையூர் கோயிலடித் திடலில், “இனிவரும் உலகம்” பற்றி பெரியார் பேசியிருக்கிறார் என்கிறார் தொண்டராம்பட்டில் வசிக்கும் 72 வயதான் பெரியார் பெருந்தொண்டர் உத்திராபதி அவர்கள். இதைச் சொல்லும்போது, அவருடைய முகத்தில் பொலிந்த களையை வார்த்தைகளால் வடித்தெடுக்க இயலவில்லை. பெரியாரைக் கண்டதும், அதை தான் நினைவு வைத்திருப்பதுமே தன் வாழ்நாளில் மறக்க முடியாத; மறைக்க முடியாத ஒரு திருவிழா போல் இருந்ததாக – நாம் சொல்லிக்கொள்ளலாம். அவருக்கும் அந்த உணர்வை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. அகத்தைக் காட்டும் முகமாகக் காட்டினார், அவ்வளவுதான். திருமங்கலக் கோட்டை கீழையூரில் பெரியார் பேசியதை 77 வயதான பெரியார் பெருந்தொண்டர் முக்கரை செல்வராஜ் என்பவர், உத்திராபதியைப் போலவே நினைவு கூர்ந்தார்.
பெரியார் மட்டும் இல்லேன்னா
நம்ம கதி என்ன ஆகியிருக்குமோ?
பெரியார் மட்டுமல்ல, இன்றைய கழகத் தலைவரும் 1975 இல் அன்னை மணியம்மையாருடன் வருகை தந்து, கண்ணுகுடி உயர்நிலைப் பள்ளியிலும், 1988 இல், அமெரிக்கா பயணம் முடித்து வந்திருந்த ஆசிரியர் அவர்கள், தொண்டராம்பட்டு சமுதாயக்கூடத்திலும் பேசியிருக்கிறார் என்கிறார் அவரே. அதைவிட சிறப்பு என்னவென்றால், ஆசிரியர் தனது 12 வயதில் மாணவர் பருவத்திலேயே தொண்டராம்பட்டுக்கு வந்து பேசியிருக்கிறார். 80 ஆண்டுகளாக பேசிக்கொண்டே இருப்பவர் உலகை ஒரு முறை சுற்றி வந்துவிட்டதைப் போல, இப்போது மறுபடியும் அதே தொண்டராம்பட்டுக்கு வந்து பேசப்போகிறார் என்பதே அங்கிருப்பவர்களுக்கும் மிகுந்த ஆர்வத்தை தூண்டிவிட்டிருந்தது. அதன் எதிரொலியாக கதிரடிக்கும் இயந்திரத்தின் அருகில் நைலான் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து, கொளுத்தும் வெப்பத்தில் மாநாட்டுப் பணிகள் வேகவேகமாக நடந்து கொண்டிருப்பதை, ஆவலுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த, தி.மு.க.வைச் சேர்ந்த 88 வயதான தங்கவேல் என்பவர். நம்மைப் பார்த்ததும் கயிற்றுக்கட்டிலில் நம்மையும் அமரச்சொல்லிவிட்டு பெருமூச்சுடன் தன்னிச்சையாக, “பெரியார் மட்டும் இல்லாமல் போயிருந்தால் இந்த பார்ப்பனர்களின் கொட்டம் அடங்கியிருக்காது” என்றார். நமக்கு மயிர்க்கூச்செறிந்தது. மாநாட்டுப் பணிகளைப் பார்த்தபடியே. மேலும் அவரே, “பெரியார் தஞ்சைக்கு சுற்றுப்பயணம் வருகிறார் என்று தெரிந்ததுமே, தொண்டராம்பட்டு அரசினர் சுற்றுலா மாளிகையை தயார் செய்து வைத்து விடுவார்கள். பெரியார் வந்திருக்கிறார்; அன்னை மணியம்மையார் வந்திருக்கிறார்; ஆசிரியர் வந்திருக்கிறார். பெரியார் வரும் போது எனக்கு திருமணம் ஆகவில்லை. அப்போது வயது 22, 23 இருக்கும். பெரியார் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டவுடனேயே அப்படியே போட்டது போட்டதுபடி வந்திருவோம். அவர் மட்டும் இல்லேன்னா நம்ம கதி என்ன ஆயிருக்குமோ” என்றார் மறுபடியும்.
முத்திரை பதித்த சுயமரியாதை இயக்க விளக்க மாநாடு!
தங்கவேல் 88 வயதிலும் திடகாத்திரமாக இருக்கிறார். 100 நாட்கள் வேலை மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளைச் செய்துகொண்டிருக்கிறார். 100 நாட்கள் பணி பற்றி நினைவு வந்ததும், ”மேல இருக்கிறவன் (ஒன்றிய அரசு) அதுக்கு இன்னும் காசு கொடுக்கல. ஆனா, இவனுங்களுக்கு நம்ம ஓட்டு மட்டும் வேணும். அதுக்குண்ணு 10 பேரு இருக்காங்க இங்கே” என்று குமுறினார். மொத்தத்தில் தொண்டராம்பட்டு திராவிட இயக்க சிந்தனைக் கோட்டையாக திகழ்கிறது. அந்த கோட்டையில் மற்றுமொரு முத்திரை பதித்திருக்கிறது –இந்த சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விளக்க மாநாடும், அதில் பெரியார் உலகத்திற்கு ரூ.17 லட்சம் நிதியளிப்பு விழாவும்!