இதுவரை எத்தனை எத்தனை ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள், மாநாடுகள், கூட்டங்கள், முழக்கங்கள்! அவர்களும் ஓய்ந்தபாடில்லை… நாமும் ஓய்ந்தபாடில்லை! ‘நீட்’ தொடங்கி தேசியக் கல்விக் கொள்கை கடந்து இன்று எல்.ஓ.சி.எஃப் வரை!
அதிகாரம் இருக்கும் வரை அவர்கள் ஓய மாட்டார்கள்… ஆம், ‘அதிகாரம் இருக்கும் வரை’தான்!
நாம் அப்படி அல்ல! நாம் நடத்துவது சமத்துவத்துக்கான போராட்டம்… சமூகநீதிக்கான போராட்டம்… சம உரிமைக்கான போராட்டம்! இவற்றையெல்லாம் நாம் அடைந்துவிடக் கூடாது என்று தடுத்து நிறுத்துவோருக்கு எதிரான போராட்டம்! மீண்டும் ஜாதித் தொழிலை நம் தலையில் திணிக்க நினைப்பவர்களுக்கு எதிரான போராட்டம்! அறிவியலுக்கான வாசலை அஞ்ஞானத்தைக் கொண்டு அடைக்க முயல்பவர்களின் அடாவடித் தனத்துக்கு எதிரான போராட்டம்!
அவர்களும் மூர்க்கமாகத் தான் இருக்கிறார்கள்! ஏனெனில், அவர்களுக்கு இது கடைசி வாய்ப்பு! மாய்மாலப் பிரச்சாரங்களை மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டார்கள். அதற்கடுத்து அவர்கள் அரசியலில் செய்து கொண்டிருந்த வாக்குத் திருட்டும் அம்பலப்பட்டுவிட்டது. அடுத்த வாய்ப்பு என்பது அவர்கள் கண்களில் தட்டுப்படவில்லை.
அதிகாரப் பேனா அவர்கள் கைகளிலிருந்து பிடுங்கப்படும் நொடி வரை, அந்த நச்சு மையில் போடப்படும் கையெழுத்துகள் அனைத்தும், நாம் ‘தலையெழுத்து, விதி, கர்மா, பூர்வஜென்மப் பலன்’ என மீண்டும் மூடத்தனத்துக்குள் மூழ்க வேண்டும் என்னும் நோக்கோடு போடப்படுபவை. அவர்கள் எழுத இனியும் நாம் தலையைக் காட்டப் போவதில்லை என்பதைப் புரிந்துகொண்டு தான், அதிகாரப் பேனாக்களில் நச்சு மை நிரப்பி ஆணைகளிடுகிறார்கள்.
வேதியியல் படிக்கப் போனால், அதை வேதங்களில் தேடச் சொல்கிறார்கள். காலக் கணக்குகளில் விஷ்ணு, சிவன், பிரம்மா வர்ஷங்கள் கணக்கிடச் சொல்கிறார்கள். வானியல் பாடங்களுக்கு மத்தியில் நல்ல நேரம் காட்டும் நட்சத்திரம் பார்க்கச் சொல்கிறார்கள். ஹிந்தி, சமஸ்கிருதத்தைத் தூக்கியெறிந்து ஆங்கிலம் கற்று அகிலம் வியக்க அறிவாளர்களாக மிளிரும் நம்மிடம், அந்தப் பழைய கசடுகளையே ஆங்கிலத்தில் மாற்றி ஊட்டிவிட வருகிறார்கள்.
எங்கும் திணிப்பு! எதிலும் திரிப்பு! வணிகவியல் பாடத்தில் கவுடில்யரைப் படிக்கவாம் – எதற்கு பக்தி வியாபாரம் செய்யவா? வெள்ளைக்காரனை விழுந்து வணங்கி, வீட்டுச் சிறை பெற்ற வீராதி வீரர் தாம் இந்திய விடுதலைக்குத் தலைமகனாம் – தலைவணங்கச் சொல்கிறார்கள்!
தேசியக் கல்விக் கொள்கை என்னும் பெயரில் நம் கல்விக் கட்டமைப்பைச் சிதைக்கும் சூழ்ச்சியை அதிகார பலம் கொண்டு விரைவுபடுத்துகிறார்கள். உயர்கல்வி நிறுவனங்கள் நசுக்கப்படுகின்றன. வளைந்த முதுகுகளுக்குச் சிம்மாசனங்கள் தந்து, அங்கீகார முத்திரை மட்டும் குத்தத் தெரிந்த புதுயுக ஜந்துக்களை கல்விப் புலங்களில் அமர்த்த முனைகிறார்கள்.
ஒன்றிய கல்வித் துறை என்ற பெயரால் அத்துமீறல், ஆளுநர் என்ற பெயரால் வரம்புமீறல், யூ.ஜி.சி. என்ற பெயரால் விதிமீறல் – இப்படி எல்லா கோடுகளையும் அழித்து, தங்களின் எல்லைகளை விரிவாக்கத் துடிக்கிறார்கள்.
ஒவ்வொன்றுக்கும் போராட்டம் தான்! ஒருபோதும் ஓய முடியாது தான்! இருப்பைக் காக்க வேண்டுமானால், இறங்கித் தான் ஆகவேண்டும் களத்தில்! ஒரு நூறாண்டுப் போராட்டம்தான், ஈராயிரம் ஆண்டு அடிமைத் தனத்தை நொறுக்கியது! இறுதிவெற்றி கிடைக்கும்வரை ஓய்வுக்கு நேரமில்லை! எதிரியின் வாள்வீச்சைத் தடுக்கும் கணத்தில் மூச்சை இழுத்து, நாம் வாள்வீசும்போது மூச்சுவிடத் தான் நேரமிருக்கிறது.
இது தலைமுறைகளைக் காக்கும் போர்! இதில் சிறிய களம்… பெரிய களம் என்றெல்லாம் இல்லை! எதிலும் பின்னடைவு கூடாது! வெற்றி தள்ளிப் போகலாம் – வீழ்ந்துவிடக் கூடாது!
கல்வி நம்மைத் தலைநிமிர்த்தியிருக்கிறது – கண்டம் தாண்டி பெருமை தேடித் தந்திருக்கிறது! அதைக் கவ்விச் செல்ல முயலும் வல்லூறுகளுக்கு இடம்கொடுக்காமல், இடைவெளிவிடாமல் இணைந்து நின்று போராட வேண்டிய காலகட்டம் இது!
காவிப் பாடத் திட்டக் கட்டமைப்பை (எல்.ஓ.சி.எஃப்) உடைத்து நொறுக்குவோம்! திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் திங்கள்கிழமை நடக்கும் யூ.ஜி.சி.யின் காவித் திணிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு அணிவகுப்பீர்!
பெரியாரின் கைத்தடி தந்த இடி தான் இன்னும் அவர்களைப் புலம்ப வைக்கிறது. அந்தக் கரம்பிடித்து வளர்ந்த தலைவர் அழைக்கிறார்! முழங்குவீர்! முழங்குவீர் – நொறுங்கட்டும் அதிகாரப் பீடம்!
– கருஞ்சிறுத்தை