திருவாங்கூர் சமஸ்தானம் (2) ‘‘மனிதத் துயரங்களும்… மாறாத வடுக்களும்!

6 Min Read

மருத்துவர்
இரா.கவுதமன்
இயக்குநர்,
பெரியார் மருத்துவ அணி

சேரர்கள் ஆண்ட சேரநாடு ஆய்நாடு, வேணாடு என்று முதலில் பிரிந்து இருந்தது. வேணாட்டின் கடைசி மன்னன் மார்த்தாண்டவர்மன் காலத்தில் மீண்டும் இந்தப் பகுதிகள் ஒன்றாக இணைந்து மீண்டும் ஒரே நாடாக மாறியது. வேணாட்டின் புகழ் பெற்ற அரசர் இவர். கி.பி.1724-1725இல் ஆட்சி செய்த மன்னர் இராமவர்மனுக்கு ஆண் குழந்தை இல்லாததால், மன்னருக்கும், அவரது ஆசைநாயகி காஞ்சிபுரம் அபிராமி என்ற பார்ப்பனப் பெண்ணிற்கும் பிறந்த “பப்பு தம்பிக்கு முடிசூட்டலாம் என்று” மாடம்பிகளும், (மாடம்பிகள் என்பவர்கள் மாடத்தில் அமரக்கூடிய தகுதி பெற்ற அமைச்சர்கள் போன்றவர்கள் – மாடம் – நம்பி), யோகக்காரர்களும் (யோகக்காரர்கள் – நல்வாய்ப்புப் பெற்ற செல்வந்தர்கள் – அரசவையில் செல்வாக்குப் பெற்றவர்கள்) முடிவு செய்தனர்.

ஆனால், அதற்குத் தடை ஏற்பட்டது. தச்சன் விளை அனத்தன் என்பவர் சேர நாட்டுத் தற்காப்புக் கலையான “களரி” சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர். அவரின் நண்பர்களும் களரிக் கலையில் விற்பன்னர்கள். அவர்கள் 108 (களரி ஆசிரியர்கள்) பேர்கள் ஒன்றாக இணைந்து, இராமவர்மன் சகோதரி மகன் (பம்புத் தம்பிக்கு முடிசூட்டுவதை எதிர்த்து) மார்த்தாண்ட வர்மனுக்கு பெரும் முயற்சி செய்து அரசராக முடிசூட்டினர். 1728ஆம் ஆண்டு வேணாட்டின் அரசராக முடிசூட்டிக் கொண்ட மார்த்தாண்ட வர்மன் கி.பி.1758 வரை, முப்பது ஆண்டுகள் வேணாட்டை ஆண்டார். திற்பாப்பூர் பரம்பரையில் வந்த இவர் அரசர் இராமவர்மனின் மருமகன். (சகோரியின் மகன்). (கேரளாவில் நிலவி வரும் “மருமக்கள் தாயம்” என்ற வழக்கத்திற்கு முதலில் அடிப்படையான நிகழ்வு என்று கூட இந்த நிகழ்வைக் கொள்ளலாம்.) அதற்கு முன் மருமகன் உறவில் மன்னரான வரலாறு வேணாட்டில் இருந்ததில்லை. மார்த்தாண்ட வர்மன் சிறந்த போர்வீரர்.

இவர் ஆட்சியில் அமர்ந்ததும், தான் பதவிக்கு வரக் காரணமான களரி ஆசான் அனந்த பத்மநாபனை முதன்மைத் தளபதியாகவும், ஆலோசகராகவும் அரசர் நியமித்துக் கொண்டார். அனந்த பத்ம நாபனின் நண்பர்களான அனைத்துக் களரி ஆசான்களும்அரசருக்குப் பாதுகாவலர்களாக இருந்தனர். மார்ர்த்தாண்ட வர்மன் காலத்தில் வேணாடு வடக்கே கொச்சி வரை பரவியிருந்தது. நாட்டில் சிறந்த நிர்வாகம் நடந்தது. முதல்முறையாக நாட்டின் நிலங்கள் அளந்து முறை செய்யப்பட்டன. நாடு 80 கரைகளாகப் பிரிக்கப்பட்டு, அதை நிர்வகிப்பவர்கள் “கரைக்காரர்”கள் என்று அழைக்கப்பட்டனர்.

அரசருக்கு ஆலோசனை சொல்ல “துரத்துக்காரர்” என்று எட்டுப் பேர் நியமிக்கப்பட்டனர். அதிகார மய்யங்களாகச் செயல்பட்ட மாடம்பிகளையும், யோகக்காரர்களையும், நாட்டை வழிநடத்தும் பொறுப்பும் “எட்டுதுரம் நாடார்கள்” என்பவர்கள் வசம் ஒப்புவிக்கப்பட்டது. அவர்கள் திருவனந்தபுரத்தில் குடியமர்த்தப்பட்டனர் மார்த்தாண்ட வர்மன் ‘கல்குளம்’ என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார். ஆட்சிக்கு வர உதவிய களரி ஆசான் பத்மநாபன் நாடாரைப் பெருமைப்படுத்தும் விதமாக, “கல்குளம்’ ஊரின் பெயரை, “பத்மநாபபுரம்” என்று அரசர் மாற்றினார். (புகழ்வாய்ந்த, மிகச் சிறந்த மர வேலைப்பாடுகள் கொண்ட “பத்மநாபபுரம்” அரண்மனை இன்றும் மார்த்தாண்டவர்மன் பெயரையும், புகழையும் பாடிக்  கொண்டிருக்கிறது).

இவர் காலத்தில் வணிகம்செய்ய வந்த அய்ரோப்பியர்கள் நாட்டின் பல பகுதிகளைப் பிடித்தும் வேணாட்டில் அவர்கள் தோல்வியையே சந்தித்தனர். அவர்கள் வணிக வளாகத்திற்குள்ளே முடக்கப்பட்டனர். முக்கியமாக டச்சுக்காரர்கள் ரகசியமாக படைகளைப் பெருக்கி, குளச்சலில் மார்த்தாண்ட வர்மனின் படையோடு நேரடியாக மோதினர். ஆனால், தோல்வியையே தழுவினர். வேறு வழியின்றி சமாதானப் பேச்சு வார்த்தைக்கு வந்தனர். அவர்கள் கோரிய அதிகப்படியான கோரிக்கைகைளைக் கேட்டு, வெகுண்ட மார்த்தாண்ட வர்மன், நான் அய்ரோப்பா மீது படையெடுக்க முடிவு செய்துள்ளேன். அங்கு சந்தித்துக் கொள்வோம்” என்று ஆவேசமாகக் கூறினார். முடிவில் டச்சுக்காரர்கள் வேணாட்டை விட்டே வெளியேற்றப்பட்டனர்.

நம்பூதிரிப் பார்ப்பனர்கள் வடக்கே ஆந்திரா பகுதியிலிருந்து தெற்கு நோக்கிப் பெயர்ந்து சேரர்களின் ஆட்சியின் இறுதிக் காலத்தில் சேர நாட்டை நோக்கி நகர்ந்தனர் என்று ஒரு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது. தங்கள் இருப்பை நிலைநாட்டிக் கொள்ள தந்திரமாக புராணங்களை நம்பூதிரிப் பார்ப்பனர்கள் உற்பத்தி செய்தனர். “‘கேரள மகாத்மியம்’, ‘கேரளோற்பத்தி’ போன்ற புராணங்கள் அவர்கள் எழுதிய முக்கியமான புராணங்கள். பரசுராமன் என்ற முனிவன் 64 பார்ப்பனக் குடியிருப்புகளை உண்டாக்கி, அங்கு தெய்வீகத் தன்மை (?) கொண்ட பார்ப்பனர்களை குடியமர்த்தினானாம். அப் பார்ப்பனர்களுக்கு ‘நம்பூதிரி’கள் என்ற  பெயரையும் அவரே வழங்கினாராம். (இவர்கள் முன்குடுமி வைத்திருப்பர்.) தமிழ்நாட்டில் குடியேறிய ‘அபராசிகா’ (பின்குடுமி வைத்திருக்கும் ‘அய்யர்’கள்). பார்ப்பனரிடமிருந்து தங்களை மாறுபட்ட, உயர்ந்த பார்ப்பனர்களாகக் காட்டிக் கொள்ளும் அடையாளம் இந்த ‘முன்குடுமி’! பரசுராமர் தன் கோடரியைக் கடலில் எறிந்தபோது ‘சேரநாடு’ என்ற கேரள நாடு உற்பத்தியானதாம். அதனால், இந்த நிலப் பரப்பு உரிமையாளர்கள் நம்பூதிரிகள்தான் என்று இந்தப் புராணங்களில் குறிப்பிடப்பட்டதாம். மானுடவியலாளர்கள் ஹெய்க், மோஸர் போன்றவர்கள் நம்பூதிரிப் பார்ப்பனர் இருப்பை 9ஆம் நூற்றாண்டாகக் குறிப்பிடுகின்றனர்.

வரலாற்றாசிரியர் ரூமிலா தாப்பர் கூற்றுப்படி, சோழர்களோடு நடந்த போர்களில், சேர மன்னர்களுக்கு இந்தப் பார்ப்பனர்கள் உதவியதால் ஏராளமான நிலங்களைப் பெற்றனர். ஜென்மி நிலங்களில் இவர்கள் உரிமை பல நூற்றாண்டுகளாக அதிகரித்து வந்துள்ளது. மோஸர் அவர்கள் குறிப்பின்படி, தங்களின் நிலங்களில் கோயில்களைக்கட்டி, அந்தக்கோயில்கள் (பொதுவானவை அல்ல) அவர்கள் சொந்த சொத்தாக நிறுவிக் கொண்டனர். அதன் மூலம் ஜாதியத் தடைகளையும் நிலைநாட்டிக் கொண்டனர். (வைக்கம் மகாதேவர் ஆலயச் சுற்றுத் தெருக்களில் மற்ற ஜாதியினர் வரக்கூடாது என்று தடை போட இதுவே காரணம்.) அந்தக் காலக்கட்டத்தில் கேரள கோயில் தெருக்களில் பல ஊர்களில் இந்தத் தடை இருந்தது. இருப்பிடமும், சொத்துகளும், தங்கள் மேன்மையை நிலைநாட்ட கோயில்களும் கிடைத்த உடன், நம்பூதிரிப் பார்ப்பனர்களின் தாக்குதல் அடுத்து மொழியின் மேல் துவங்கியது.

உள்ளூர் தமிழ் மொழியில் அவர்கள் சம்ஸ்கிருத மொழிக் கலப்பை செய்தனர். மலையாள மொழியில் அதிகளவு சம்ஸ்கிருதத்தின் தாக்கம் இன்றளவும் இருக்கக் காரணம் இந்தக் கலப்புதான். மொழியின் தாக்குதல்களை தொடர்ந்து வாழ்வியல் ஆதிக்கம் தொடர்ந்தது. நாயர்கள் சிறந்த போர் வீரர்கள். தங்கள் பாதுகாப்புக்கு அவர்களைத் தங்கள் பாதுகாப்புக் கேடயங்களாக்கிக் கொண்டனர். நம்பூதிரிக் குடும்பத்தில் முதல் மகன் மட்டுமே நம்பூதிரிக் குடும்பத்தில் திருமணம் செய்து கொள்ள முடியும். இளைய மகன்கள் சத்திரிய, நாயர் பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

“சம்பந்தம்”என்றழைக்கப்பட்ட திருமண முறை மூலம் அரசகுடும்பத்தில் உறவுகள் வைத்துக் கொள்ள ஜாதிய சட்டங்கள் அவர்களுக்கு உரிமை கொடுத்தன. இந்த இளைய மகன்கள், கீழ் ஜாதிகளான நாயர்கள், சத்ரியர்கள் பெண்களோடு கொண்ட உறவுகள் மூலம் பிறக்கும் குழந்தைகள் நம்பூதிரிகளாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இந்த உறவுகள் கேரள மன்னர்கள், ஆளும் தலைவர்கள், நம்பூதிரிகளின் குழந்தைகளாகவே இருப்பர். இதன் மூலம் ஜாதிய, மத மற்றும் பண்பாட்டுத் தளங்களில் அசைக்க முடியாத அதிகார மய்யங்களாக அவர்கள் மாறினர். (Ref: “On the Southern Recension of the Mahabharatha, Brahmin Mirgration and Brahmin Paleography” – (P.2016-2019) by Mahadevan, Thennilapuram)

(“Kerala: Plurality and Consensus” by Moser, Heike – p.170)

(Ref: “The Turning point in a Living Tradition Somayagarh” by T.P.Mahadevan, Fritz, Staal)

(“நம்பூதிரி” விக்கிபீடியா)

கேரள நாட்டின் அனைத்து அதிகாரங்களையும், மொழியையும், பண்பாட்டையும், சொத்துகளையும் முழுமையாகக் கைப்பற்றிக் கொண்ட நம்பூதிரிப் பார்ப்பனர்கள், தங்கள் பாதுகாப்பிற்கு உறவு முறைகள் மூலம் நாயர்களோடு கூட்டணி அமைத்துக் கொண்டனர். அதன் மூலம் கேரளா முழுவதும் பரவத் தொடங்கினர். தமிழரின் சேர நாடு, கேரள நாடு ஆன வரலாறு இதுதான். இவர்கள் கூட்டணி “நம்பூதிரி – நாயர்” கூட்டணி கேரளாவின் வட பகுதியில் அதிகாரத்தோடு இருந்தனர். மன்னர் மார்த்தாண்ட வர்மன் ஆட்சியில் நாடார்கள் கை ஓங்கி இருந்ததையும், அவர்களின்பால் மன்னர் வைத்திருந்த நம்பிக்கையும், நம்பூதிரிகளுக்கு எரிச்சலை எற்படுத்தியது. அதனால் தங்கள் ஆதிக்கத்தை தெற்கிலும் (வேணாட்டிலும்) விரிவாக்க முயன்றனர். ஆனால், மார்த்தாண்ட வர்மனை அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. மன்னர் மார்த்தாண்ட வர்மன் அவர்கள் விரிவாக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்தினார். பல சீர்திருத்தங்களை நிர்வாகத்தில் புகுத்தி நல்லாட்சி செய்த மார்த்தாண்ட வர்மன் 1758இல் மர்மமான முறையில் (கொலை செய்யப்பட்டு?) மரணமடைந்தார். (அவர் இயற்கையான முறையில் 56 வயதில் (?) இறந்தார் என்று சாதிப்பவர்களும் உண்டு). அடுத்து நடந்தது என்ன தெரியுமா?

(தொடருவேன்…)

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *