வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளில் விரிந்த வாழ்த்துச் சிந்தனை மலரட்டும்!

2 Min Read

கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்தச் செம்மல், இவரைப் போல் ‘தியாகம்’ என்பதன் எல்லை கண்ட  தலைவர் – ‘‘இந்திய சுதேசி இயக்கத்தில் இவருக்கு ஈடு இணை எவரும் இல்லை’’ என்ற தனி வரலாறு படைத்த நமது நிரந்தர சிறப்புக்குரியவர் வ.உ.சிதம்பரனார் அவர்கள்.

காங்கிரசில் அவர் உழைத்ததும், வாழ்நாள் முழுதும் வெஞ்சிறையில் வாடியதும், தன்னை ஒரு காலத்தில் ஈர்த்த அந்நாளைய காங்கிரசில் சமூகநீதி இல்லையே  என்று வருந்தி, தந்தை பெரியாரைப் போலவே சமூகநீதிக்கு தனது பேராதரவினைத் தந்து (இறுதிநாள்களில்) அதைத் தந்தை பெரியார் அவர்களிடம் பகிர்ந்து, அவரது தொண்டைப் பாராட்டியதும் வரலாற்றின் மறைக்கப்பட்ட பல பகுதிகள்!

திருக்குறளுக்குத் தனித்துவ உரை கண்டவர். பரிமேலேழகர் உரையை ஏற்காது, மணக்குடவர் உரையை விளக்கத்துடன் எழுதியவர்.

தனது உடல், பொருள், உயிர் அனைத்தையும் கொண்ட கொள்கை களுக்கும், நாட்டுக்கும் அர்ப்பணித்த ஒப்பற்ற நாயகர் அவர்.

அவரது 154ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று (5.9.2025).

நாடும், ஒன்றிய அரசும் அவருக்குத் தர வேண்டிய உச்ச கட்டப் பெருமையை அளிக்கவே இல்லை என்பது மறைக்கப்பட முடியாத ஒன்று – காரணம் அகிலம் அறிந்ததே!

அவரும், அவரைப் போன்ற தியாக சீலர்களும் நாட்டுக்குழைத்த தலைவர்களும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உரியோர் ஆவர்.

ஜாதி, கட்சி, மத, பேதமின்றி அனைத்து மக்களும்  அவர்களைத் தமது வழிகாட்டிகள் என்று வாழ்த்திடத் தவறக் கூடாது. ஆனால், இப்போது அத்தகைய மிகப் பெரிய தலைவர்களை – சரித்திர சாதனையாளர்களையெல்லாம் கட்சி, ஜாதி, மதச் சிமிழுக்குள் அடைத்துப் பிறந்த நாள், நினைவு நாள்களில் சிறப்புச் செய்தல் மாறும் நிலை வேண்டும்.

குறிப்பிட்ட ஜாதிக்குத் தலைவர்கள் என்பது அல்ல. மனித குலத்தின் மாபெரும் விடியலுக்கான வித்துகள். அனைவருக்கும் அவர்கள் வழிகாட்டிகள் என்ற பெருங் குணத்தோடு மனிதத் தொண்டறம் புரிந்த அத்தலைவர்களை சிறப்புச் செய்தல் அவசியம்.

ஜாதித் தலைவர்களாக்கிப் பார்க்கப்படும் பார்வையைவிட, விசாலப் பார்வையும், ஒருங்கிணைந்த விவேகமான செயலும் மிகவும் தேவை. அந்நாள் வர வேண்டும்.

அனைத்துத் தலைவர்களையும், தியாக சீலர்களையும் ஜாதி, கொள்கை மாறுபாட்டையும் தாண்டி வாழ்த்தும் விரிந்த பரந்த அணுகுமுறை மலருவது அவசியம், அவசரம்.

வ.உ.சி. என்ற மூன்று எழுத்தும் தியாகம், சமூகநீதி, கட்சி கடந்த கொள்கை, மனிதநேயம் என்பதற்கான தனித்த –  தக்கதோர் பாடம்.  அவர் படமோ, சிலையோ அல்ல!

 

கி.வீரமணி
தலைவர்

திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *