சென்னை, செப்.5- 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
பாலியல் வன்கொடுமை
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு திருவள்ளூர் அருகேயுள்ள கூடப்பாக்கம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்று குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.
அந்த வீட்டில் பெற்றோர் வெளியே சென்றிருந்ததால் 16 வயது சிறுமி தண்ணீர் எடுத்து வர வீட்டுக்குள் சென்றுள்ளார். அப்போது பின்னால் சென்ற ரமேஷ் வீட்டின் கதவை பூட்டி விட்டு சிறுமியை கட்டி போட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் ரமேஷ் மீது கொடுத்த புகாரின் பேரில் பூந்தமல்லி மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
26 ஆண்டுகள் சிறை
இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்த ரமேஷ் தலைமறைவானார். இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்தது. இவ்வழக்கின் இறுதி விசாரணையானது போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா கேஸ்வரி முன்பாக நேற்று (3.9.2025) வந்தது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ரமேஷுக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.26 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும் தலைமறைவாக உள்ள ரமேஷுக்கு பிடிவாரண்டு பிறப்பித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.46 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.