டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
திண்டிவனம், செப்.5- தன் மீதான 16 குற்றச்சாட்டுகள் குறித்து 10-ந் தேதிக்குள் பதில் அளிக்காவிட்டால் அன்புமணி மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஒழுங்கு நடவடிக்கை குழு
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது. இந்த சூழலில் கடந்த மாதம் 17-ஆம் தேதி டாக்டர் ராமதாஸ் தலைமையில் பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்ட துடன், அதற்கு அவர் ஆக.31-ஆம் தேதிக் குள் பதில் அளிக்க வேண்டும் என்று அறிவிக்கை அளிக்கப்பட்டது.
ஆனால் அதன்படி அவர் பதில் அளிக்கவில்லை. இதை தொடர்ந்து 1-ஆம் தேதி நடந்த கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில், அன்புமணி மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசித்து, அதுபற்றிய விவரத்தை டாக்டர் ராமதாசிடம் ஒப்படைத்தனர்.
படம் நீக்கம்
இதனிடையே பா.ம.க.வின் புதிய உறுப்பினர் அட்டைகள், உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களில் டாக்டர் அன்புமணி ராமதாசின் படம் நீக்கப்பட்டது, கட்சியினர் இடையே மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நிர்வாக குழுக் கூட்டம்
இதை தொடர்ந்து நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. மாநில நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. பின்னர், டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகள் குறித்து அனுப்பி வைக்கப்பட்ட அறிவிக்கைக்கு அவர் உரிய விளக்கம் அளிக்கவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுப்பதுதொடர்பாக பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழுவால் பரிந்துரைக்கப்பட்ட அறிக்கை குறித்தும்
அன்புமணி மீது என்ன விதமான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் இன்று ஆலோசிக்கப்பட்டது. இதில், அன்புமணிக்கு மேலும் ஒருவாரம் கால அவகாசம் கொடுக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி வருகிற 10-ஆம் தேதிக்குள் அன்புமணி விளக்கம் அளிக்க வேண்டுமென அறிவிக்கை அனுப்பப்படுகிறது.
கட்சி விரோத நடவடிக்கை
இந்த அறிவிக்கையை மாநில பொதுச்செயலாளர் முரளிசங்கர் அனுப்பி வைப்பார் என முடிவெடுக்கப்பட்டது. இதற்கும் அவர் பதில் அளிக்கவில்லை என்றால், கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதை தொடர்ந்து இந்த முறையும் அன்புமணி பதில் அளிக்க வில்லை என்றால் அவர் மீதான நடவடிக்கைஎவ்வாறு இருக்கும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த டாக்டர் ராமதாஸ்,போக போக தெரியும் என்ற பாடலை பாடினார். மேலும் இந்த பாடலை எத்தனை முறை தான் பாடுவது என்று கூறியதுடன், இந்த ஒரு வார கால அவகாசம் கொடுப்பது என்பது பேச்சுவார்த்தைக்குதான் என்று டாக்டர் ராமதாஸ் குறிப்பிட்டார்.