பகுத்தறிவுப் பணி

2 Min Read

தோழர்களே, விசுவரெட்டிப் பாளையத்தில் என்னை அழைத்து கூட்டம் நடத்த வேண்டும் என்று இரண்டாண்டுகளுக்கு முன்பிருந்தே முயற்சி செய்தும், இப்போதுதான் அந்த வாய்ப்பு ஏற்பட்டது. அதற்கு என் நன்றி.

எங்கள் கொள்கை மிகக் கசப்பான  கொள்கை! உங்களுக்கு இனிப்பாக இருக்கும் வகையில் எங்களுக்குப் பேசத் தெரியாது. இன்றுள்ள பிரத்தியட்ச நிலைமையை எங்கள் மனத்தில் பட்டதை – உங்களிடமிருந்து எதுவும் எதிர்பார்க்காமல் தைரியமாகச் சொல்கிறோம். உங்கள் அறிவுக்குப் பட்டதை எடுத்துக் கொள்ளுங்கள். மீதியை விட்டுத் தள்ளுங்கள். நாங்கள் சொல்லுவதுதான் சரி. இதைத்தான் கேட்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை.

இப்படியே சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு சித்தார்த்தன் என்பவர் எதையும் உங்கள் புத்தியைக் கொண்டு ஆய்ந்து பார்த்து உங்கள் புத்திக்கு சரி எனப்பட்டதை ஏற்றுக் கொள் ளுங்கள் என்று பிரச்சாரம் செய்தார். அதனால்தான் அவருக்கு புத்தர் எனப் பெயர் ஏற்பட்டது. அதற்குப் பின் வள்ளுவர் இருந்தார். அவரும்,

“எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு”

என்று சொல்லிவிட்டுப் போனார். அதற்குப் பின் ஒருவரும் தோன்றவில்லை. எத்தனையோ நாயன்மார்களும் – ஆழ்வார் களும் தோன்றியும் மக்களுக்குள்ள இழிவு ஒழிய பாடுபட்டதில்லை. அவர்களெல்லாம் பார்ப்பனர்களுடைய தயவால் ஆழ்வார்களாகவும், நாயன்மார்களாகவும் ஆக முயற்சித்தார்களே தவிர, மக்களுக்கு ஏன் இந்த இழிவு? பாடுபடும் பாட்டாளி மக்கள் இழிஜாதியினராக – தீண்டப்படாதவர்களாக – சூத்திரர்களாக – பார்ப்பானின் வைப்பாட்டி மக்களாக இருக்க வேண்டும்? என்று கேட்டதே இல்லை. நாங்கள்தான் துணிந்து இரண்டு காலத்திற்குப்பின் பகுத்தறிவுப் பணியாற்ற முன் வந்திருக்கிறோம். எங்கள் கொள்கைகளை விளக்கி பல புத்தகங்கள் போட்டிருக்கிறோம். இதையெல்லாம் நீங்கள் வாங்கிப் படிக்க வேண்டும். நூல் நிலையத்திலெல்லாம் திராவிடர் கழகத்தின் ஏடுகள் இருக்காது. இன்னும் அந்தத் துணிவு அவர்களுக்கு வரவில்லை.

பேய் பிடித்தாடும் மடமை இன்னும் நம் மக்களிடம் தானே இருக்கிறது? ஜப்பான்காரன் – ஜெர்மன்காரன் இவர்களைப் பேய் பிடிக்கிறதா? இல்லையே. ஏன்? கடவுள் யோக்கியதை தான் என்ன? திருடனும் கடவுளைக் கும்பிடுகிறான் – திருட்டுக் கொடுத்தவனும் கடவுளைக் கும்பிடுகிறான். கடவுள் யாருக்கு நல்லவர்? கடவுளுக்காக நாமா? நமக்காகக் கடவுளா என்பதே விளங்கவில்லையே!

மதம் என்றால் என்ன? யாராவது சொல்ல முடியுமா? மதத்தின் தத்துவம்தான் என்ன? மதத்தின் பிரச்சாரம்தானே நாம் சூத்திரர்கள். ஜாதி இழிவைக் காப்பாற்றுவதும் இந்த மதந்தானே?  இந்த இருபதாவது நூற்றாண்டிலும் ஜாதி ஒழிய வேண்டும் என்று நாங்கள்தானே சொல்லுகிறோம்; அதற்காகப் பாடுபடுகிறோம் – சிறைக்குப் போகிறோம். ஜாதி ஒழிய வேண்டுமென்றால், இந்து மதம், சாஸ்திரம், சம்பிரதாயப் புராண, இதிகாசம் எல்லாம் ஒழிய வேண்டும். காந்தியார்கூட ஜாதியைப் பாதுகாக்க வருணாசிரம மதத்தை நிலை நிறுத்தவே பாடுபட்டார். அதனால்தான் காந்தியார் சிலையை உடைக்க வேண்டும் என்றேன். நமக்கு ஒரு அறிவு அதிகமிருந்தும் பயன் என்ன? மிருகங்களுக்கு ஒரு அறிவு குறைவு என்றாலும் ஜாதி இல்லையே! மிருகங்களுக்கு அறிவில்லாததின் பயன் ஜாதி இல்லை. நமக்குள்ள இழிவு ஜாதியால்தானே. இதைச் சிந்திக்க வேண்டாமா?

(22.06.1961 அன்று விசுவரெட்டிப்பாளையத்தில் தந்தை பெரியார் அவர்கள்  ஆற்றிய பேருரை – ‘விடுதலை’ 8.7.1961.)

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *