விழுங்க நினைக்கும் பா.ஜ.க.விடம் அ.தி.மு.க. பலியாகியிருக்கிறது!
திராவிட இயக்கத்தின் வேர்களை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வால் அசைக்க முடியாது!
பட்டுக்கோட்டை, செப்.5 விழுங்க நினைக்கும் பா.ஜ.க. விடம் அ.தி.மு.க. பலியாகியிருக்கிறது! திராவிட இயக்கத்தின் வேர்களை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வால் அசைக்க முடியாது என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
இன்று (5.9.2025) பட்டுக்கோட்டைக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்!
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
அ.தி.மு.க. என்பது, தி.மு.க.விற்கு எதிரான பலமான எதிர்க்கட்சியாக இருந்தால் சிறப்புதான்.
ஆனால், அந்தக் கட்சியை முழுக்க முழுக்க விழுங்கவேண்டும் என்ற எண்ணத்தோடு பா.ஜ.க. வாய்ப் பிளந்தது. அது தெரியாமல், அதற்குப் பலியாகியிருக்கிறார்கள்.
அப்படி பலியான இவர்களைப் பல கூறுகளாகப் பிரித்ததே பா.ஜ.க.தான்! அப்படிப் பிரித்தவர்களை, மீண்டும் ஒன்று சேர்ப்பது போன்ற ஒரு நிலையை உருவாக்குவதும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.தான். எல்லாம் அவர்களுடைய அரசியல் திருவிளையாடல்கள்தான்!
இது எவ்வளவு தூரம் போய், எங்கே நிற்கும் என்று தெரியவில்லை.
மோடியோ, அமித்ஷாவோ திராவிட இயக்கத்தை வேரோடு பிடுங்கி எறிவோம் என்று சொல்வது அர்த்தமில்லாதது.
முதலில், கிளைகள்கூட அவர்களிடம் சரியாக இல்லை என்பதை, இப்படிப்பட்ட அறிவிப்புகள் தெளிவாகக் காட்டுகின்றன.
எனவே, அவர்கள் தங்கள் கிளைகளை, இலைகளைப் பாதுகாத்துக் கொள்ளட்டும். அவர்களால், வேர்களை அசைத்துப் பார்க்க முடியாது. இதுதான் திராவிட இயக்கத்தின் வரலாறாகும்.
– இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.