நாகர்கோவில், செப்.4- கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி 10 நாட்கள் விதவிதமான போட்டிகள் நடத்தியும், அத்தப்பூ கோலமிட்டும் கொண்டாடி வருகிறார்கள். அதேபோல் அதன் எல்லை பகுதியான குமரியிலும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தவகையில் குழித்துறை வி.எல்.சி. மைதானத்தில் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் தலைமையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி வடம் இழுத்தல், இசைக்கு ஏற்ப நாற்காலியை சுற்றி வருதல் என்பன போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.
விழாவின் சிறப்பு நிகழ்வாக தாரகை கத்பர்ட் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் பெண்கள் அணிக்கும், குளச்சல் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் தலைமையில் ஆண்கள் அணிக்கும் இடையே வடம் இழுத்தல் போட்டி நடத்தப்பட்டது. இரு அணியிலும் தலா 25 பேர் போட்டியில் பங்கேற்றனர். போட்டி தொடங்கியதும் இரு அணிகளும் சமபலத்தில் மல்லுக்கட்டின. அந்த சமயத்தில் ஆண்கள் அணி வீரர்கள் வெட்கத்தால் சிரித்தபடி இருந்தனர். இதனை பயன்படுத்திய தாரகைகத்பர்ட் சட்டமன்ற உறுப்பினர் தலைமையிலான பெண்கள் அணியினர் ஒரு சேர சேர்ந்து வடத்தை இழுத்ததால், ஆண்கள் அணியினர் தடுமாறினர். இதனால் வடமும் அவர்களின் பிடியில் இருந்து நழுவியது. இதனால் பெண்கள் அணி, ஆண்கள் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.