நீட் தேர்வின் யோக்கியதை இதுதான் முதுநிலை மருத்துவ நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தவர்களும் தகுதி பெற்றவர்களாம்!

2 Min Read

 சென்னை, செப்.4- முதுநிலை நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தவருக்கும்முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களுக்கு தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டிருப்பதற்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

முதுநிலை நீட் தேர்வு

அரசு, தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள், ஒன்றிய அரசின் கல்வி நிறுவ னங்களில் எம்.டி, எம்.எஸ்., முதுநிலை டிப்ளமோ, எம். டி.எஸ். போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த முதுநிலை நீட் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் நடத்துகிறது.

2025-2026-ஆம் கல்வியாண்டுக் கான முதுநிலைத் தேர்வு கடந்த மாதம் (ஆகஸ்டு) 3-ஆம் தேதி கணினி வாயிலாக நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 2 லட்சத்துக்கு மேற்பட்டோரும், தமிழ்நாட்டில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் எழுதியதாக சொல்லப்படுகிறது.

மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினா வுக்கும் 4 மதிப்பெண் வீதம் 800 மதிப்பெண்களுக்கு தேர்வு கணக்கிடப்படும். தவறாக விடை யளித்தால் ஒவ்வொரு வினாவுக்கு ஒரு  எதிர்மறை (‘நெகட்டிவ்’)மதிப்பெண்ணும் உண்டு.

பூஜ்ஜிய மதிப்பெண்

அந்த வகையில் இதற்கான தேர்வு முடிவு நேற்று (3.9.2025) வெளியிடப்பட்டது. இதில் பூஜ்ஜியம் மதிப்பெண்ணை 14 பேர் எடுத்து இருக்கின்றனர். இதுதவிர பூஜ்ஜியத்துக்கு கீழ் 13 பேரும் மதிப்பெண்ணாக பெற்றிருக்கின்றனர். அதாவது, மைனஸ் மதிப்பெண் ஆகும். இந்த மதிப்பெண் எடுத்து இருந் தாலும், அவர்களும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர தகுதியுடையவர்களாகவே கருதப்படுவார்கள் என அறிவித்தி ருப்பதுதான் தற்போது பேசும் பொருளாகியுள்ளது.முதுநிலை மருத்துவப்படிப்பில் சேர முதுநிலை நீட் தேர்வில் 50 சதவீத கட்-ஆப் மதிப்பெண்ணை பெற வேண்டும்.

இந்த நடைமுறையால், முதுநிலை மருத்துவப்படிப்பில் காலி இடங்கள் அதிகரித்தது.இதனையடுத்து முதுநிலை நீட் தேர்வில் பூஜ்ஜிய சதவீத மதிப்பெண் முறையை ஒன்றிய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்தள்ளதாம்.

கல்வியாளர்கள் எதிர்ப்பு

அதன் அடிப்படையில், கடந்த 2023-ஆம் ஆண்டில் தேர்வர்கள் தேர்வு எழுதி இருந்தாலே, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர தகுதியானவர்கள் என்று சொல்லப்பட்டிருந்தது. அதே போல தற்போதும் ‘பூஜ்ஜியம்’ மற்றும் ‘மைனஸ்’ மதிப்பெண் பெற்றவர்களுக்கும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் இடம் கிடைக்க உள்ளது.

நீட் தேர்வு என்பது தகுதியான மருத்துவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டதுதான் என சொல்லப்பட்டுவரும் சூழலில், தேர்வில் நல்ல மதிப் பெண் எடுக்காதவர்களும் தகுதியானவர்கள் என்று அறிவிப்பது. இந்த தேர்வு முறையையே சீர்குலைக்கிறது என்றும், அப்படி அறிவிப்பதற்கு எதற்காக தேர்வை நடத்த வேண்டும்? என்றும் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித் தார். இதேபோல் மேலும் சில கல்வியாளர்களும் இதேபோல் எதிர்ப்பு தெரிவித்தனர்

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *