மதுரை, செப்.4 அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தின்போது ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தாக்கப் பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் வேலூர், அணைக்கட்டு மற்றும் பிற பகுதியில் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்தின்போது, நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அ.தி.மு.க.வினரால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, மதுரை 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இருளாண்டி என்பவர், ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் குமரப்பன் ஆகியோர் முன்னிலையில் நேற்று (3.9.2025) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், “சட்டமன்ற தேர்தல் முடியும் வரை ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்” என வாதிட்டார்.
அரசுத் தரப்பில், “திருச்சி மற்றும் வேலூரில் நடந்த சம்பவங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் மட்டுமே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், “ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தாக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் அனைத்து மாவட்ட காவல்துறையும் சம்பந்தப்பட்டுள்ளதால், இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து காவல்துறை தலைமை இயக்குநர் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.