அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மூத்த வர்த்தக ஆலோசகரான பீட்டர் நவரோ, ‘‘இந்தியாவின் உயர் ஜாதியான பார்ப்பனர்கள் மற்றும் பனியாக்கள் நடத்தும் நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எண்ணெய் வாங்கி, அதை பதப்படுத்தி, அய்ரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் உயர் விலைக்கு விற்று லாபம் ஈட்டுகின்றனர்
இந்திய மக்களின் உழைப்பைச் சுரண்டி அவர்களுக்கு இதில் எந்த ஒரு பயனும் செல்லாமல் பார்த்துக் கொள்கின்றனர். அதாவது அந்த மக்களின் உழைப்பை அபகரித்துக் கொள்கின்றனர்!’’ என்று அவர் குற்றஞ் சாட்டியுள்ளார்.
ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், நவரோ, கூறும்போது இந்தியாவை ரஷ்ய அரசு ஏ.டி.எம். போல் பாவிக்கிறது
பார்ப்பன – பனியா நிறுவனங்கள் இந்திய மக்களின் உழைப்பைச் சுரண்டி லாபம் ஈட்டுகின்றன’’ என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
மேலும், “இந்திய மக்களே, இங்கு நடப்பது என்னவென்று புரிந்து கொள்ளுங்கள். பார்ப்பன – பனியாக்கள் உங்களின் உழைப்பைச் சுரண்டுவதைத் நிறுத்த வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
2022 பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பதற்கு முன்பு, இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு
1% க்கும் குறைவாக இருந்தது. ஆனால், இப்போது அது 30% முதல் 42% வரை உயர்ந்துள்ளது. இந்த எண்ணெய்யை இந்திய நிறுவனங்கள் பதப்படுத்தி, அய்ரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவுக்கு ஏற்றுமதி செய்து, பெரும் லாபம் ஈட்டுகின்றன. இந்தியா கொடுக்கும் பணம் உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பெரும் உதவியாக உள்ளது’’ என்று குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.
இந்தக் கால கட்டத்தில் ஏற்பட்டுள்ள இப்படி ஒரு பிரச்சினை கவனமாகக் கருத்தூன்றிப் பரிசீலிக்கத்தக்கது.
அமெரிக்க அதிபரின் பொருளாதார ஆலோசகர் இந்த நேரத்தில் இப்படிக் கூறியிருப்பது – பிரச்சினையைத் திசை திருப்பவா? என்று கூட விவாதிக்கப்படலாம்.
ஆனால், அதையும் கடந்து, அதில் கூறப்பட்டுள்ள மய்யத் தகவலை அலட்சியப்படுத்த முடியுமா? என்பது முக்கியமான கேள்வியாகும்.
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய்யை வாங்குவதில் ரிலையன்ஸ் (அம்பானி நிறுவனம்) நிறுவனம் முதன்மை இடத்தில் இருக்கிறது.
ரஷ்யாவிலிருந்து குறைந்த விலைக்கு வாங்கி சுத்திகரித்து அதனை மேற்கு நாடுகளுக்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால் உக்ரைன்மீது ரஷ்யா படையெடுப்பை எதிர்த்து இந்த மேற்கு நாடுகள் தடை விதித்துள்ளன.
இந்திய பனியா, பார்ப்பன நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலைக்குக் கச்சா எண்ணெய்யை தடை விதித்த அதே மேற்கு நாடுகள் வாங்குகிறார்கள் என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கும் இந்தியாவிடமிருந்து வாங்குகிறார்கள் என்றால் ரஷ்யாமீது விதிக்கப்பட்ட தடை கொல்லைப்புற வழியாக உடைக்கப்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.
குறைந்த விலைக்கு இந்த பார்ப்பன – பனியாக்களின் நிறுவனங்கள் கச்சா எண்ணெய்யை வாங்குகின்றனவே அதன் பலன் இந்திய உள்நாட்டு மக்களுக்குப் பயன்படுகிறதா – விலை குறைந்ததா என்றால், அதுதான் இல்லை! இலாபக் கொள்ளைதான் இவர்களின் முதல் நோக்கமே தவிர, மற்றபடி உள்நாட்டு மக்களுக்கு எவ்விதப் பலனும் இல்லை என்பதைப் புரிந்து கொள்வீர்!