அவ்வப்போது விண்கற்கள் பூமியில் விழுவதுண்டு. பெரிய அளவுடையவை மட்டுமே நமக்கு ஆபத்தானவை என்பதால், பெரும்பாலும் அவை மட்டுமே நம் கவனத்தை பெறுகின்றன.
சமீபத்தில் அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் ஒரு வீட்டின் கூரை, சீலிங், காற்றுக் குழாய் ஆகிய அனைத்தையும் துளைத்துக் கொண்டு விண்கல் ஒன்று விழுந்துள்ளது. செர்ரி பழத்தின் அளவே உடையே இந்தக் கல், துப்பாக்கியிலிருந்து புறப்படும் குண்டின் வேகத்தில் வீட்டிற்குள் நுழைந்து தரையில் விழுந்துள்ளது. ஜியார்ஜியா பல்கலை. இந்த விண்கல்லுக்கு, அது விழுந்த மெக்டோனா பகுதியின் பெயரையே சூட்டி உள்ளது.
புவியியல் ஆய்வாளர் ஸ்காட் ஹாரிஸ் என்பவர், வீட்டில் விழுந்த 50 கிராம் விண்கல் துகள்களில், 23 கிராமை மட்டும் எடுத்து ஆய்வு செய்தார். அதீத துல்லியம் மிக்க மின்னணு நுண்ணோக்கியை கொண்டு ஆராய்ச்சி செய்ததில், இந்த விண்கல் ஆக்சிஜன், மெக்னீசியம், இரும்பு, சிலிக்கான் ஆகியவை நிறைந்த காண்ட்ரைட் வகையைச் சேர்ந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதன் வயது குறைந்தபட்சமாக 456 கோடி ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பூமியின் வயது 454 கோடி ஆண்டுகள். எனவே, இது பூமியை விட பழையது என்று தெரியவந்துள்ளது.
வியாழன், செவ்வாய் கோள்களுக்கு இடையே ஏற்பட்ட மிகப் பெரிய விண்கல் வெடிப்பிலிருந்து இந்த விண்கல் உற்பத்தி ஆகியிருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இது குறித்து மேலும் ஆராய்ந்தால், ஆச்சரியப்படத்தக்க விஷயங்கள் வெளிவரலாம்.