திருப்பூரில் நேற்று (2.9.2025) காலை இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருள்களுக்கு அமெரிக்க அரசு 50 விழுக்காடு வரி விதித்திருப்பதைக் கண்டித்தும் ஒன்றிய பிஜேபி அரசு இது பற்றி வாய்த் திறக்காமலும் – உரிய நடவடிக்கை எடுக்காமலும் அலட்சியமாக இருப்பதைக் கண்டித்தும் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மற்றும் திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் – இயக்கம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தி.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான மானமிகு ஆ.இராசா தலைமையில் கட்சித் தலைவர்கள் உரையாற்றினார்கள் என்பதைவிட போர் முழக்கம் செய்தனர் என்றே குறிப்பிட வேண்டும்.
மாபெரும் மக்கள் சமுத்திரம் – கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அலையடித்துக் காணப்பட்டது.
குறிப்பாக திருப்பூரில் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை தி.மு.க. ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
திருப்பூர் என்பது ஏராளமான தொழிற்சாலைகளின் தலைநகரமாகும்.
பின்னலாடையைப் பொறுத்தவரையில் இந்தியாவின் தலைநகரமாக திருப்பூர் திகழ்கிறது. இங்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 இலட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.
வெளி மாநில தொழிலாளர்கள் இதில் 50 விழுக்காடாகும்.
அமெரிக்காவின் 50 விழுக்காடு வரி விதிப்பினால் உடனடியாக மூன்று இலட்சம் தொழிலாளாகள் பாதிக்கப்படுவர். இதில் பெரும்பாலும் 65 விழுக்காடு பெண்கள் ஆவர்.
திருப்பூரைப் பொறுத்த வரையில் ஆண்டுக்கு 1.33 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆடையை ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவின் ஆடை ஏற்றுமதியில் இது மூன்றில் ஒரு பகுதியாகும்.
50 விழுக்காடு வரி சுமை காரணமாக ஏற்றுமதிக்கு வழியின்றி உடனடியாக 40 விழுக்காட்டிற்கு மேல் தொழிற் சாலைகள் வேலைகளை நிறுத்தியுள்ளன. சில நாட்களிலேயே ரூபாய் 40 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூரில் 200 தையல் இயந்திரங்களைக் கொண்ட தொழிற்சாலைகள் பெரும்பாலும் செயலற்றுப் போய்விட்டன.
எடுத்துக்காட்டாக கடந்த 5 ஆண்டு காலத்தில் மட்டும் திருப்பூர் ஆடை ஏற்றுமதி காரணமாக பெற்ற வெளிநாட்டு நாணய வருவாய் என்பது அசாதாரணமானது.
2019-2020 ரூ.27,280 கோடி, 2020-2021 ரூ.24,750 கோடி, 2021-2022 ரூ.33,525 கோடி, 2022-2023 ரூ.34,350 கோடி, 2023-2024 ரூ.30,690 கோடி, 2024-2025 ரூ.39,618 கோடி.
இவ்வளவுப் பெரிய அளவு இந்தியாவிற்கு வெளிநாட்டு நாணய வருவாயைத் தரக்கூடிய ஒரு ஊர் நம் கண் முன்னாலேயே கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலாகக் காணப்படுவது கண்டு அதிர்ச்சி அடைய வேண்டமா?
மோடி ஆட்சிக்கு வந்த நிலையில் ரூபாய் மதிப்பு இழப்பு – அதனால் சிறுகுறு தொழில்கள் நசிந்தன. ஏராளமான தொழிலாளர்கள் வெளியேறினர்.
அடுத்து வந்த கோவிட் அலை கொஞ்ச நஞ்சமிருந்த பொருளாதார வலுவையும் அடித்து நொறுக்கியது. மூன்றாவதாக ஜி.எஸ்.டி. என்று அடுத்த தாக்குதல் மக்களின் முதுகெலும்பை முறித்தன.
கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருட்கள் ஏற்றுமதியில் 31 விழுக்காடு அமெரிக்காவுக்குச் சென்றன. இந்தியா முழுவதும் 20 விழுக்காடு என்பது நினைவில் இருக்கட்டும்!
மென்பொருள் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் தமிழ்நாடே முன்னிலை மாநிலமாக உள்ளது.
நேற்று வெளிவந்த ஒரு செய்தி திடுக்கிட வைக்கிறது. மருந்துகளுக்கு 200 விழுக்காடு வரி விதிப்பாம். டிரம்புக்கு மனிதநேயம் என்ற ஒன்று முற்றிலும் வறண்டு விட்டதைத் தான் இது காட்டுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை அதன் வெளிநாட்டுக் கொள்கை முற்றிலும் தோல்வி அடைந்ததைத்தான் இது காட்டுகிறது.
இந்தியாவைச் சுற்றிலும் உள்ள நாடுகள் அனைத்தும் இந்தியாவின் எதிரி நாடுகளாகி விட்டன.
ரஷ்யா – உக்ரைன் போரில் அமெரிக்கா – உக்ரைனை ஆதரிக்கிறது. இந்த நிலையில் கச்சா எண்ணெய்யை ரஷ்யா விடமிருந்து இந்தியா அதிக அளவில் வாங்கியதுதான் அமெரிக்காவின் சீற்றத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. போருக்கு முன் ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் ஒரே ஒரு விழுக்காடு என்றால் – போர் தொடங்கி நடந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் அது 30 விழுக்காடாக உயர்ந்து விட்டது.
இதைப்பற்றி எல்லாம் 140 கோடி மக்களின் பிரதமராக இருக்கக்கூடிய நரேந்திர மோடி கவனத்தில் கொள்ளாது உலகம் சுற்றும் வாலிபராக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று வாக்கு கொடுத்தவர்தானே இந்த நரேந்திர மோடி!
‘பிச்சைப் போட வேண்டாம் – உன் நாயைப் பிடித்துக் கட்டு’ என்று தந்தை பெரியார் கூறுவதுண்டு.
இந்திய பிரதமர் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுக்க வேண்டாம், இருக்கும் வேலையையும் பறிகொடுத்து வீதியில் நிற்பதைத் தடுக்க வேண்டாமா?
திருப்பூரில் தலைவர்கள் கொடுத்தது வெறும் முழக்கமல்ல – போர் முழக்கம்! தமிழ்நாட்டிற்காக மட்டுமல்ல – அமெரிக்காவின் வரி விதிப்பு என்ற வன் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ள உலகில் உள்ள பல நாட்டு மக்களுக்குமான உரிமை முழக்கமே!